........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-34 நம்மிடம் அகந்தை இருக்கலாமா?
-
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறான். ஆனால் சந்தோஷத்தை எவரேனும் விலை கொடுத்து வாங்க முடியுமா? மனிதன், சொத்திலும், வெற்றியிலும் சந்தோஷத்தை பெற முடியுமா? மனிதன், சொத்து, பதவி, அதிகாரம், வெற்றி இவைகளிலிருந்து பெயர், புகழ், கௌரவம் ஆகியவற்றைப் பெற முடிகிறது. ஆனால் இவைகளால் அவன் உண்மையான சந்தோஷத்தை பெற இயலுமா? பெயர், புகழ், கௌரவம் இவையெல்லாம் மனிதனுக்கு தற்காலிகமான மகிழ்ச்சியைத் தருகிறது. இவைகள் யாவும் மனிதனோடு நிரந்தரமாக இருப்பதில்லை. இவைகள் அனைத்தும் விட்டுப் பிரியும் சமயத்தில் மனிதன் துன்பத்தின் வலியை அனுபவிக்க நேரிடுகிறது. அவன் துன்பத்தை அனுபவிக்கும் போது மனநிம்மதியைத் தேடுகிறான். எவனொருவன் துன்பத்திலும் அமைதியாக வாழ முயலுகிறானோ, அவன் எந்தச் சூழ்நிலையிலும் சமாளித்துக் கொள்கிறான். ஒவ்வொரு மனிதனும் விழுந்தெழும் போது தான் அவனுக்குள்ளிருக்கும் அகந்தை தானாகவே அழிகின்றது. அதுவரையில் ஏன் மனிதன் அகந்தையோடு வாழ்ந்து தேவையற்ற வேதனைக்கு ஆளாக வேண்டும்? எந்த மனிதனும் அன்பு, பாசம், அறிவு ஆகியவற்றை அறிந்து கொண்டு பிறப்பதில்லை, ஆனால் பிறப்பிற்கும், இறப்பிற்கும் உள்ள இடைவெளியில் அவனுக்கு பல சொந்தங்கள் உறவாகின்றன, பல நண்பர்களின் நட்பு கிடைக்கின்றன. அவனுக்கு கிடைத்த சொந்தங்களும், நண்பர்களும் நல்லவர்களாக அமைந்தால் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றான், தனக்கு அடுத்து வரும் தலைமுறைகளோடும் இவைகளை பகிர்ந்துக் கொள்கிறான். இதுவே அவனுக்கு கெட்டவர்களின் சகவாசம் கிடைத்தால் பல கெட்ட குணங்களுக்கு ஆளாகின்றான். அப்போது அகங்காரமும், அகம்பாவமும் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இந்த இரு துருவங்களுக்கிடையே அவன் மனிதத்தன்மையை இழக்கின்றான். கோபமும், ஆணவமும் ஆக்கிரமித்துக் கொண்டு அவனை நிலை தடுமாற வைக்கிறது. எப்போது அவன் “தான்” என்ற மிதப்போடு வாழத் தொடங்குகிறானோ அப்போதே அவனை விட்டு அமைதி விலகிச் செல்கிறது. அந்த நொடியிலே அவன் சந்தோஷத்தை இழக்கின்றான். வேதனையின் வலியை அனுபவிக்கும் போது ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் யதார்தத்தை தெரிந்து கொள்கிறான். பெயர், புகழ், கௌரவம், பதவி, அதிகாரம் இவையெல்லாம் பகட்டான, போலியான வாழ்க்கையைக் கொடுக்கிறதென்று அறிந்து கொள்கிறான். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று முன்னோர்கள் சொன்ன பழமொழியை நினைவு கூர்ந்து வாழும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து தவறான பாதையில் பயணித்திருக்க மாட்டான். ஆறு அறிவு படைத்த மனிதன் படுகுழி என்று தெரிந்தும் அதனுள்ளே விழ முயலுவதற்கு அவன் முட்டாளில்லை.
ஏதோ அகந்தை என்ற போர்வை மறைத்ததால் அவனுடைய நிலை
சற்று தடுமாறியது. ஆனால் இதுவும் அவனுக்கு ஒரு பாடத்தை போதித்தது என்று
சொல்லலாம். “நீ உன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிரு, பலனை இறைவனிடம் ஒப்படைத்து விடு. எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் மனிதன் அமைதியைப் பெறுகின்றான், எவனொருவன் பலனை எதிர்பார்க்கிறானோ அவன் அப்போதே நிம்மதியை இழக்கின்றான். உனக்கு நியமிக்கப்பட்ட கடமையை செய்து கொண்டேயிரு, அந்தச் செயலினால் வெற்றியோ, தோல்வியோ எதுவாகயிருந்தாலும் இறைவன் அதனை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறான். இறைவன் உனக்குள்ளிருக்கும் தீய சக்தியை அழித்து, உன்னை நல்லவைகளுக்கு அடிபணிய வைக்கிறான். உனக்குள்ளே புதிய மனிதன் தோன்றுகிறான், மனித குலத்தின் நன்மைக்காக நல்ல செயல்களை செய்கிறாய், இங்குதான் அதர்மம் அழிகிறது, தர்மம் தலைதூக்குகிறது, இதுதான் மனிதம்” என்று கீதையில் சொன்ன கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய மனிதன் அனைத்தையும் சமமாக கருதி, அவனுக்குள்ளே இருக்கும் அகந்தையை அகற்றி, மனிதம் தழைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.