........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-36

பெண்ணுரிமைக்கு ஒரு புதிய சட்டம்

                                                                                                  -சந்தியா கிரிதர்.

ஒரு சகாப்தம் புதுமை பெறும் போது நமக்குள்ளே நிலவி வரும் பழக்க வழக்கங்களும் புதுமை பெற வேண்டுமல்லவா? அந்தந்த காலத்தோடு மனிதனுடைய வாழ்க்கையும் மாற்றம் பெறுகிறது. ஆனால் ஒரு சில வழக்கங்களை மட்டும் மாற்ற நினைத்தாலும் மக்கள் அதற்கு தடையாக நிற்கிறார்கள். அப்படி மாற்றத்தை காண முடியாத நிலையிலுள்ள ஒன்று வரதட்சணை. இன்றைய தினத்தில் பரிசுகள் என்ற பெயரில் மாற்றம் கொண்டு திருமணத்தில் வரதட்சணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த இந்தச் சமூகத்தில், திருமணங்களில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

1961-ஆம் ஆண்டில் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை கேட்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் எத்தனை நபர்கள் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதற்கும் அப்பாற்பட்டு பரிசுகள் என்ற பெயரில் இன்றும் திருமணங்களில் வரதட்சணை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் திருமணச் சந்தையில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இத்தனையும் தெரிந்தும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வரதட்சணை ஒழிப்பு அதிகாரிகள் அல்லது பெண்ணுரிமைக் காவல் அதிகாரிகள் கண்டும் காணாதது போல செயல்படுகிறார்கள். இந்தச் சட்டத்தில் சில ஓட்டைகள் இருப்பதாக எண்ணிய அரசாங்கம் இன்னொரு புதிய சட்டத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறது.

திருமணத்திற்கு முன்பு அல்லது அந்தத் திருமண நாளன்று அல்லது அதற்குப் பின்பும் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் அனைத்தும் ஒரு பட்டியலாகத் தயார் செய்து அதனை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பெண்ணுரிமைக் காவலதிகாரியிடம் கையெழுத்து இடப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டுமென்று இந்தப் புதிய சட்டம் குறிப்பிடுகிறது. முன்பு வரதட்சணை கேட்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை கொடுப்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும், மேலும் நிகழ்ந்த திருமணம் முறிவு பெற்றால் பரிசுப் பட்டியலின் அடிப்படையில் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் அவளிடம் உடனடியாக வந்து சேரவேண்டுமென்று இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5000 ரூபாய் மதிப்பைக் கொண்ட பரிசுப் பொருட்கள் யாவும் பரிசுப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்று இந்தச் சட்டம் சொல்லுகிறது. அப்படியென்றால் இந்தத் தொகைக்கு குறைவாக உள்ள பரிசுப் பொருட்கள் அனைத்தும் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லையா? 5000 ரூபாய்க்கு மேலுள்ள பரிசுப் பொருட்களின் கதியைப் பற்றி இந்தச் சட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை.

மேலும் பொருட்களின் மதிப்பீட்டை எவ்வாறு கணிப்பதென்று இந்தச் சட்டம் சரியாகக் குறிப்பிடவில்லை. ஒரு திட்டவட்டமான சட்டமாக இல்லாமல் ஏனோதானோவென்று இந்தச் சட்டத்தை உருவாக்குவதில் உறுப்பினர்கள் காட்டும் அவசரம் மீண்டும் ஒரு சில காலங்கள் கழித்து புதியதொரு சட்டத்தை உருவாக்கவே விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. இப்பொழுதே அந்தச் சட்டத்தில் தெரிகின்ற ஓட்டைகளைச் சரி பார்த்து, நெறிப்படுத்தி உருவாக்கினால் இந்தச் சமூகத்திற்கு நன்மை பயக்குமில்லையா?

எத்தனைக் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் இந்த வரதட்சணை மருந்தில்லாத நோயாக பரவி வருகிறது. கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் வசதிக்குத் தகுந்தாற் போல பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்கள். அந்தப் பெண்ணுடைய தலையெழுத்து தான் அவளுடைய திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. நகரங்களிலும் மற்றும் மாநகரங்களிலும் பிள்ளை வீட்டார்கள் தங்கள் பிள்ளைகளைப் பேணி வளர்த்த காலத்திலிருந்து அவர்கள் பணியில் சேர்ந்த காலம்வரை, அவர்களுக்காகச் செலவழித்த தொகையை முதலும் வட்டியுமாகக் கணக்குப் போட்ட பட்டியலை பெண் வீட்டாரிடம் நீட்டுகிறார்கள். இந்தத் தொகையை அவர்களுடைய பெண்ணின் நலனுக்காக கேட்பதாகவும், மேலும் குடும்ப சொத்துரிமையில் பெண்ணுக்கும் ஒரு பங்கிருப்பதையும் நினைவு கூறுகிறார்கள்.

சொத்துரிமைச் சட்டத்தை தக்க சமயத்தில் நினைவு கூர்ந்த பிள்ளை வீட்டார்கள் வரதட்சணை ஒழிப்பு சட்டத்தை எவ்வாறு மறந்து விட்டார்கள்? பணக்கார வர்க்கத்தினர் குடும்ப கௌரவத்திற்காக அநாவசியச் செலவுகளை செய்து பிள்ளை வீட்டார்களை பரிசு மழையில் நனைத்து, பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகிறார்கள். வரதட்சணையை ஒழிக்க எத்தனை சட்டங்கள் உருவாக்கினாலும் எத்தகைய வர்க்கத்து மக்கள் திருமணச் சந்தையில் இந்த கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தைச் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.

 நாய் வாலை நிமிர்த்த முடியுமா? அது கூட பரவாயில்லை. இந்தப் பழக்க வழக்கம் திருத்த முடியாமல் வளர்ந்து கொண்டே வருகிறது. 

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.