........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-37

நடிகையின் நிர்வாணப்படம் சரியா?

                                                                                                  -எஸ்.எஸ்.பொன்முடி.

பெண்ணுரிமை பற்றி விவாதிப்பது பேஷனாகிக் கொண்டு வருகின்றது. பாலின சமன்பாடு, (Gender Equality) சமூகம் உயிர்ப்புடன் இயங்கும் தளத்தில் ஆணுக்கு பெண் சம உரிமை, ஆட்சி அதிகாரங்களில் பெண்கள் சுயமாக செயல்பட அனுமதித்தல், சுய வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக ஊரகப் பெண்களைக் குழுக்கள் மூலம் இணைத்தல் ஆகியவை அறிமுக நிலையினைத் தாண்டி வேர் பிடிக்க ஆரம்பித்துள்ளன. பிற்பகல் மற்றும் பின்னிரவு தொலைக்காட்சித் தொடர்கள் ஹவுஸ் ஒய்ப்களை அறைக்குள் சிறை வைத்தாலும் குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் உணர்வு தளங்களைத் தாண்டி அறிவுத் தளங்களுக்குள் நுழைந்து விடுகின்றார்கள். புலியை முறத்தால் விரட்டிய இரண்டாம் நூற்றாண்டு பெண்கள் முதல் இந்திராகாந்தி வரையிலான இருபதாம் நூற்றாண்டு பெண்கள் வரை வரலாறு நெடுகிலும் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு, நிர்வாகம் ஆகியவற்றில் மிகமிக குறைந்த எண்ணிக்கையிலேயே சாதனை புரிந்துள்ளனர்.

குழந்தையைச் சுமந்து பெற்றுக் கொள்ளும் உயிரியல் காரணங்களோடு கற்காலங்களில் பெண்கள் வேட்டையாடி உணவுப் பொருள்களை வீட்டுக்கு கொண்டு வந்தும் சமைத்தும் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளனர். இக்கலாச்சாரம் இன்று வரை தொடர்ந்திருந்தால் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெண்களால் தந்திரமாக தள்ளிப் போட வேண்டி வந்திருக்கும் தலைகீழ் நிலைமை ஏற்பட்டிருக்கலாம். மதங்கள் மற்றும் அவற்றின் தத்துவங்களை உருவாக்கியவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமயமாக்கல் (Institutionalisation) காரணமாக பெண்கள் இன்று வரை கவிதைகளின் பாடுபொருளாகவும், சிறு தெய்வங்களாகவும், ஆண்களின் கண்களுக்கு இரையாகவும், ஆண்களிடமிருந்து மறைக்கப்படுபவர்களாகவும், குடும்பத்தின் கௌவரமாகவும் புனிதமாகவும் பெரும்பாலும் சமையலறை சாதனங்களில் ஒன்றாகவும் மாற்றப்பட்டனர்.

ஆண்களால் பெற முடிந்த உடை, உணவு, உணர்வு, முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவற்றைப் பெற முயற்சிக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவர் மதுரை கடச்சனேந்தலில் வசித்து வந்த சொர்ணத்தம்மாள் ஆவார். ஏனென்றால் இவர் ஆண்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த அடி, உதை, சிறை, சித்ரவதை ஆகியவற்றையும் அனுபவித்தவர் ஆவார். சுதந்திர போராட்ட தியாகி மதுரை எஸ். ஆர். என். ஷேசபாகவதரின் மனைவியாகிய சொர்ணத்தம்மாள் தன் கணவர் பணி புரியும் கம்பெனியில் தானும் வேலை பார்த்ததோடு அவாpன் சுதந்திர போராட்ட உணர்வு ஜோதியில் கலந்து கொள்ளத் தயாரானார். அப்பொழுது அவருக்கு வயது 26.

நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா எடுத்த கடைசி ஆயுதமான "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவிக் கொண்டிருந்த காலம் 1942-ல் தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றிருந்த பாரதியாரைப் பார்த்து அன்னி பெசண்ட் அம்மையார் கேட்டார், "இந்த தேசத்தின் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களை நீங்கள் ஏன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை ?" புதுமைக் கவிஞராகிய நீங்களே உங்கள் மனைவியை இம்மாநாட்டுக்கு அழைத்து வரவில்லையே "உங்கள் போராட்டம் எப்படி வெல்லும்?" எனக் கேட்டு பாரதியாருக்கும், பாரத பெண்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டிய அன்னிபெசன்ட் அம்மையாரைப் பற்றியெல்லாம் ஏதும் தெரிந்திருக்கவில்லை சொர்ணத்தம்மாள் அம்மையாருக்கு.

1930-களில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட கே.பி. ஜானகியம்மாள், கேப்டன் லெட்சுமி, ருக்மணி லெட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள், நாகம்மையார் மற்றும் பத்மாசினி அம்மையார் ஆகியோர் மிகப்பெரிய சமூக, கல்வி, ஜாதி, பொருளாதார பின்புலம் கொண்டவர்களாய் இருந்தனர். ஆனால் மதுரை சொர்ணத்தம்மாள் தினசரி கூலி வேலை செய்யும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பொழுதெல்லாம் கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலோ, வந்தேமாதரம் என்று மெல்ல சொன்னால் கூட போலீஸ்கார்கள் லத்தியால் அடித்து துவைத்து விடுவார்கள். முதல்முறையாக கணவருடன் மறியல் போராட்டத்தில் குதித்து கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர்.

விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் ஜோடி மீண்டும் மறியலில் ஈடுபட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்றாவதாக சொர்ணத்தம்மாள் மட்டும் கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மதுரையில் இருந்து வேலூருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையோடு அனுப்பி வைக்கப்படுகினறார். "இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும், அதற்குரிய தருணம் இதுவே. நாம் தொடர்மறியலில் ஈடுபட வேண்டும் காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு" என்ற வெளிப்படையான, வீரம்மிக்க கொள்கை மட்டுமே சொர்ணத்தம்மாளின் எண்ணங்களிலும், செயல்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வந்ததும் மீண்டும் தயாரானார் மறியலுக்கு.

அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் நடுத்தரம், உயர் பதவிக்காரர்கள், பெருமுதலாளிகள் ஆகியோர் தங்களின் நிலைகளில் இருந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு மாற்றிக் கொள்ள அல்லது காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இவ்வகை ஊசலாட்ட இருப்பு நிலைகளுக்கு (Oscillated Existence) உடை, வாகனம், உணவு பழக்கங்கள் ஆகியவை காரணிகளாக (Factors) அமைந்து விடுவதுண்டு. விளம்பர கம்பெனிக்காரர்களும், ஜவுளி, நகை, வாகனக் கடைக்காரர்களும் நம் இந்திய மக்களின் இவ்வகை மனப்போக்கை சரியாகப் புரிந்து கொண்டு லாபங்களைக் குவித்து விடுகின்றார்கள். இளம்பெண் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகளை விற்கும் குளிரூட்டப்பட்ட கடைகளுக்கு காதலியுடனோ, உடன் பணிபுரியும் பெண்ணுடனோ (மனைவியைத் தவிர்த்து) ஒருமுறை சென்று பாருங்கள். ஐநூறு ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் வரை விற்கும் டாப்ஸ், மிடி, பேண்ட்ஸ், ஜீன்ஸ் ஆகியவற்றுக்கான கலர், மெட்டீரியல், டிசைன்களுக்காக மாற்றி மாற்றி போட்டு முடிவெடுக்க முடியாமல் அல்லாடுவார்கள். நாம் ஏதும் மேற்கு தேசங்களுக்கு குடிவந்து விட்டோமா என்று நினைக்கத் தோன்றும். இவ்வகை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதற்காக ஓடியாடும் இளம், முதிர்இளம் விற்பனைப் பெண்களின் உடையையும் முகத்தையும் சற்று உற்றுப் பாருங்கள். ஏழ்மை உறைந்து நிற்கும் நமது தேசத்தின் வரைபடத்திலிருந்து இரு கைகள் முளைத்து வந்து நம் முகத்தில் அறையும். இன்றைய பெண்களுக்கு உடை என்பது ரசனைக்கும், கற்பனைத் திறனுக்கும் உடல் அசைவுக்கு (Body Language ) மான ஒரு காட்சிப் பொருள். ஆனால் தியாகி சொர்ணத்தம்மாளுக்கு உடை என்பது இந்த தேசம் அல்லது சுதந்திரப் போராட்டம் அல்லது தியாகம் ஆகிய ஏதாவதொன்றின் அடையாளம்.

ஒவ்வொரு விடுதலைக்குப் பின்னும் மீண்டும் மீண்டும் மறியலில் ஈடுபட்டுக் கைதாகும். சொர்ணத்தம்மாளைச் சமாளிக்க போலீஸ் நிர்வாகம் திணறியது. பெண் கைதி என்பதால் கைது, விசாரணை, சிறை என ஒவ்வொரு கட்டத்திலும் தனித்துவமான வசதியை ஏற்படுத்தி தர அக்காலத்தில் திணறியது போலீஸ். ஆகையால் இவரையும் இவருடன் போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமிபாய் அம்மையாரையும்
மதுரை - விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர். இருவரில் சந்று வேகமான சொர்ணத்தம்மாளை உன்னை மறியலில் ஈடுபடுத்தும் தலைவர் யார்? என்று கேட்டு அடித்துத் துவைத்தனர். காலையிலிருந்து இரவு 10 மணி வரை தடியால், செருப்பால், பெல்ட்டால், கையால், காலால் அடித்துக் கொண்டேயிருந்தனர். எதற்கும் அசரவில்லை சொர்ணத்தம்மாள். ஒரு கட்டத்தில் தடியால் காதிலும் முகத்திலும் அடிக்க ஆரம்பித்தனர் போலீசார். வலி தாங்க மடியாமல் கதறினார். காது ஜவ்வு கிழிந்ததால் அன்றிலிருந்து அவருக்கு ஒரு காது செவிடாகியது.

மறியலைக் கைவிட மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றதால் சொர்ணத்தம்மாள், லட்சுமிபாய் இருவரும் உடுத்தியிருந்த கைத்தறி சேலைகளை உருவி கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக்கி ஆளுக்கொரு
தாவணி போன்ற ஆறுமுழச் சேலையை கொடுத்து உடுத்த வைத்தனர். உடம்பை முழுதாக மறைக்க முடியாத இந்த ஆறு முழ துணியை உடுத்திக் கொண்ட இருவரும் கூசிப் போயினர். பின்னர் உச்சபட்ச கொடுமை நடந்தேறியது. 10 போலீஸ்காரர்களுடன் இரு பெண்களையும் ஏற்றிக் கொண்ட லாரி ஏறத்தாழ 15 மைல் பிரயாணம் செய்து ஒரு காட்டுக்குள் இரண்டு பெண்களையும் இறக்கிவிட்டு ஊரை விட்டு ஓடிப்போய் எங்காவது பிழைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் மதுரை எல்லைக்குள் வந்து மறியலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பப்பட்டனர்.

இருட்டுக்குள், இனமும் இடமும் தெரியாத காட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்ட இவ்விருவரின் அழுகைச் சத்தத்தை கேட்டு வழிப்போக்கர்கள் அருகில் உள்ள குடிசைப் பகுதியில் தங்க வைக்கின்றனர். இதற்கிடையில் இவர்களை இறக்கி விட்ட லாரி டிரைவர் மனசு கேட்காமல் மறுநாள் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்கனித் தேவரிடம் தகவலை தெரிவிக்கின்றார். உடனே காங்கிரஸ் தொண்டர்கள் குழுகுழுவாய் பிரிந்து யானைமலை, ஒத்தக்கடை, அழகர்கோவில் என்று மலைப்பகுதிகளில் தேடி கடைசியில் அவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்படுகின்றது. சொர்ணத்தம்மாளும், லெட்சுமிபாய் அம்மாளும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். மதுரை கீழ்பாலம் வைகை ஆற்றில் குளித்து முடித்த அவர்களுக்கு புது கைத்தறி ஆடைகள் வழங்கப்பட்டன. அதற்கு பின் சொர்ணத்தம்மாள் காங்கிரஸ் சேவா தள தொண்டராக தன் வாழ்நாள் முழுக்க கழித்தார்.

சமீபத்தில் கம்பத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பக்கத்து சீட்காரர் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டார். சில முன்னனி சினிமா கதாநாயகிகளின் ஆபாசப்படங்கள் கிராபிக்ஸ் முறையில் திருத்தப்பட்டு செல்போன் திரைகளில் உலவுவதால் சினிமா கதாநாயகிகள் அனைவரும் பீதியில் உள்ளனர் என்றும் அவர்களின் கண்ணீர் பொங்கும் பேட்டியும் இடம் பெற்றிருந்த வாரமிருமுறை இதழை கையில் வைத்திருந்தார். அரைகுறை ஆடை காட்சிகளையும் முத்தக்காட்சிகளையும் நியாயப்படுத்தி அவர்கள் ஏற்கனவே அளித்திருந்த பேட்டிகளை வேறு நினைவூட்டினார்.

பின் திடீரென்று ஆவேசமானார். "ஏன் சார்,  காசு வாங்கிக் கொண்டு, கால்ஷீட் கொடுத்து சம்மதத்தோடு முக்காலே மூணு வீதம் நிர்வாணமாய் நடிக்கின்றார்களே, இதில் எத்தனை வயசுப் பையன்கள் டிஸ்டர்ப் ஆகியிருப்பார்கள" என்று என்னை பிடித்து உலுக்கியெடுத்தார். அவரிடமிருந்து தப்பிக்க முயன்று பேச்சை மாற்றி "சார்! இந்த பஸ் அனுமந்தன்பட்டியில் நிற்குமா?" என்று கேட்டேன். நிற்கும் என்று உடனே பதிலளித்துவிட்டு மீண்டும் நடிகைகள் சப்ஜெக்ட்க்கு வந்தார். "சார், இவங்க கவலைக்கு காரணம் நம்மகிட்ட சொல்லாம செஞ்சுட்டாங்களே,அப்படிங்கற கவலையா?" என்று பாய்ந்தார். கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான அவரிடம் " தனி மனித உரிமை"  காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் ஒவ்வொரு தனி மனிதர்களின் உணர்வுகள் புனிதமானவை அவரவர்களுக்கு ( நடிகையாய் இருந்தாலும் சுட ) என்பதையும் மெதுவாக எடுத்துக் கூறினேன். இருப்பினும் அவர் சமாதானமாகமலே இறங்கிச் சென்று விட்டார். சொர்ணத்தாய் அம்மாளின் போராட்ட வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசை போடும் போது நடிகைகளின் கண்ணீர் பேட்டிகள் காற்றில் கசப்புடன் கரைந்து விடுகின்றது.

இந்திய சுதந்திரப் போன்விழா மலர் 1997 என்ற தீக்கதிர் வெளியிட்ட கட்டுரை பேட்டியில் "பஸ் பாஸ், ரயில் பாஸ், பென்சன் கிடைக்கும் என்று நாங்கள் போராடவில்லை. சுதந்திரத்திற்காகத்தான் போராடினோம், சிறை சென்றோம்" என்று வீரத்தியாகி சொர்ணத்தம்மாள் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டுமா என்று ஒரு வேளை மத்திய அரசிலிருப்பவர்கள் கேட்டிருந்தால் கூட இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பாரதத்தாயின் மூத்த மகள் சொர்ணத்தாயம்மாள்.

எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.