........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-39 வாழ்க்கையில் எது உண்மை...?
-
வாழ்ந்து கொண்டிருப்பது, வாழ்வதற்கான ஆவலைத்
தூண்டுவது, வாழ்க்கையை நீட்டிப்பதற்கான பிரயத்தனம் போன்ற உயிரியல் நடவடிக்கைகள்
அனைத்திற்குமான காரணம் நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிவதும்
அறிந்ததை விவாதிப்பதுமேயாகும். இச்சூழலில் வாழும் தலைமுறையையும், எதிர்கால சந்ததியினரையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும் பிரச்சனைகளான சுத்தமான குடிநீர், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்தல், புவி வெப்பம், தட்ப வெப்ப மாறுதல், ஓசோன் துளை, பாலின சமன்பாடு, உணவுப்பொருள் உற்பத்தி, வேளாண் நிலங்களின் நச்சுத் தன்மை, நகரமயமாக்கல், காற்றில் கலக்கும் மாசுக்கள், ஊட்டச்சத்துக் குறைவு, வேதியியல் உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள், முதியோர் மற்றும் குழந்தைகளின் மீதான கண்காணிப்புக் குறைவு, மத தீவிரவாதம் போன்றவற்றை எதிர்கொள்வது எவ்வாறு? தனி மனிதர்கள், அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வல்லரசு நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், ஐ.நா. சபை அமைப்புகள் என்று யார் பொறுப்பில் இப்பிரச்சனைகளை ஒப்படைப்பது என்று தீர்க்கமாகவும் ஆழமாகவும் யோசிக்கும் பொழுது தனி மனிதர்களின், முக்கியமாக இளைஞர்களின் சுய எழுச்சியும், விழிப்புணர்வும், கடமையும், ஈடுபாடும்தான் தீர்வினை நோக்கி நகர்ந்து செல்ல வழி என்பது புலப்படும். மாணவப் பருவத்தில் இருந்தோ, வாழ்க்கையில் ஓரளவு நிலைபெற்ற பின்போ நம் நாட்டின் வரலாறு, உலக நாடுகள், இன, மொழி, மத, ஜாதிய ஒடுக்க முறைகள், சுற்றுச்சூழல் மற்றும் வறுமை போன்றவை குறித்த அறிதலை துவக்குவது மிக அவசியமாகின்றது. பாடப் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சிச் செய்திகள் இவைகளைத் தாண்டி செய்திகளையும், விவாதங்களையும், கருத்துருவாக்கங்களையும் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டாக வேண்டும். அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் உலகின் ஒரு மூலையில் ஆரம்பித்து முற்றிலும் சம்பந்தமில்லாத நாடுகளையும், துறைகளையும் நசுக்கிப் பின் மிக விரைவில் தனி மனிதனின் வாழ்க்கையையும் சீரழித்து வருகின்றது என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுள்ளோம். ஆகையால் இனிவரும் காலங்களில் தனிமனிதனின் நலனும், சமூகத்தின் நலனும் ஒன்றையொன்று சார்ந்தவையே.. நம்மை சுமந்து கொண்டிருக்கும் பூமியின் நலன், பூமியின் பெரும்பாலான நலன்களை உறிஞ்சிக் கொள்ளும் மனித சமூகத்தின் நலன் ஆகியவை குறித்த அறிதல், அறிந்ததை பல்வேறு கலைவடிவங்களின் மூலம் வெளிப்படுத்துதலும் சம அளவில் இக்கால கட்டங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
அறிதலுக்கான அரிச்சுவடி புத்தகங்களின் தேடலில்
ஆரம்பிக்கின்றது. சந்தையில் புனைவு இலக்கியங்களும், புனைவு இல்லாத கட்டுரை
இலக்கியங்களும் காணக் கிடைக்கின்றன. கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றில் இடம்
பெறும். நாயகர்கள், அவர்களின் கனவிலி நிலை, எதிர்பாராத திருப்பம், வர்ணனைகள்
போன்ற சுவராஸ்யங்களால் பெரும் எண்ணிக்கையிலான வாசகர் பரப்பு உருவாகி உள்ளது.
புனைவு இலக்கியங்களின் மீதான தொடர் ஆர்வமே கட்டுரை இலக்கியங்களை நோக்கியும்
பயணிக்க வைக்கின்றன. இருவகை இலக்கியங்களின் மீதும் சம அளவில் ஆர்வம் கொண்ட
படிப்பவர்களும், படைப்பவர்களும், ஒரு காலகட்டத்தில் பேச்சாளர்களாகவும்,
மனிதர்களின் சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களாகவும்
உருவாகின்றனர்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.