........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-45

பெண்ணிற்குப் பெருமை!

                                                                                                -சந்தியா கிரிதர்.

தானாகத் தோன்றிய இந்த சிருஷ்டியை இயற்கையோடு இணைத்துப் பேசப்படுகிறது, சூரியனை வெப்பத்தோடும், பிரகாசத்தோடும் இணைத்துப் பேசப்படுகிறது, கடலை ஆழத்தோடும், அலைகளோடும் இணைத்துப் பேசப்படுகிறது, தென்றலை குளுமையோடு இணைத்துப் பேசப்படுகிறது. மலரென்றால் அதனுடைய மணத்தையும், அழகையும் வர்ணிக்கிறோம், மரமென்றால் அதனுடைய காய் கனிகளின் சுவையை பற்றி சித்தரிக்கிறோம்.

சிங்கத்தைப் பற்றி எண்ணும் போது அதனுடைய கம்பீரமான தோற்றமும், கர்ஜனையும் நினைவுக்கு வருகிறது, மானென்றால் அதனுடைய வேகமான துள்ளலைப் பற்றி பேசுகிறோம். இயற்கை, மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள் போன்ற ஒவ்வொன்றும் இயல்பின் தன்மைகளுடன் தான் பிறக்கின்றன. இத்தகைய இயல்பின் தன்மைகள் இல்லாமல் உருவாகும் இயற்கை இந்த சிருஷ்டியில் மாறுபாடான ஆற்றல்களைச் செயல்படுத்தக்கூடிய வல்லமையைப் பெறுகிறது.

அதுபோல மலர்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவைகள் அவைகளுக்குரிய தன்மைகள் இல்லாது பிறக்க இயலாது. ஆணும், பெண்ணும் இணைந்தது தான் மனிதம். ஆண் என்பவன் ஆண்மைத் தன்மையோடு பிறக்கிறான், பெண்ணானவள் பெண்மைத் தன்மையோடு பிறக்கிறாள். இதுதான் சிருஷ்டியின் நியதி, இந்த நியதிலிருந்து எவரும் மாறுபட்ட பாதையில் பயணிக்க இயலாது.

ஒவ்வொரு இனமும் அதனுடைய இனத்தோடு இணைந்து வாழுகின்றன. ஒரு இனம் வேறொரு இனத்தோடு இணைந்து வாழ முற்பட்டால் அது இயற்கைக்கு மாறான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஜீவராசியும் அதற்குரிய தன்மையை அறிந்து கொண்டு இந்தப் புவியில் செயல்படுகிறது. ஒரு கதை மூலமாக இந்த அருமையான தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

ஒரு கோழிக்குஞ்சுக் கூட்டில் கழுகு குஞ்சும் இணைந்து வளர்ந்தது. அம்மாக் கோழி மற்ற கோழிக் குஞ்சுகளைப் பார்த்துக் கொள்வதைப் போல கழுகு குஞ்சையும் பார்த்து வளர்த்தது. சில நாட்கள் கழித்து வளர்ந்த குஞ்சுகள் கூட்டிலிருந்து கீழே இறங்கித் தரையில் செல்லும் புழுக்கள், பூச்சிகளைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. கழுகுக் குஞ்சும் மற்ற குஞ்சுகளுடன் இணைந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்கள், பூச்சிகளை தின்றுக் கொண்டிருந்தது.

உயரத்தில் பறந்து கொண்டிருந்த பெரிய கழுகு தரையில் ஊர்ந்து கொண்டிருக்கும் புழுக்கள், பூச்சிகளைத் தின்றுக் கொண்டிருந்த கழுகுக் குஞ்சைப் பார்த்தது. இந்தக் கழுகுக் குஞ்சு தன்னுடைய சக்தியை அறியாமல் மற்ற குஞ்சகளைப் போல செயல்படுவதைப் பார்த்து வருந்தியது. ஒரு நாள் தனியாக இறையை தேடிக் கொண்டிருந்த கழுகுக் குஞ்சைப் பார்த்த பெரிய கழுகு அதனை ஏரிகரைக்கு அழைத்து சென்றது. என்னைப் போல தோற்றத்தை கொண்டிருப்பதால் நீயும் கழுகு இனத்தைச் சார்ந்தவனென்று உறுதியாக சொல்லுகிறேன்.

நான் சொல்லுவது பொய்யாகத் தோன்றினால் உன்னுடைய முகத்தை இந்த ஏரியின் தண்ணீரில் பார்த்துக் கொள்ளவும். என்னைப் போலவே நீயும் ஒரு கழுகு. நீ கீழேயுள்ள புழுக்களை கொத்தித் தின்னும் கோழிக் குஞ்சல்ல, வானத்தைச் சுதந்திரமாகத் தொட்டு உயரப் பறக்கும் கழுகுக் குஞ்சு என்ற உண்மையை அதற்கு உணர வைத்தது.

உண்மையை உணர்ந்த அந்தக் கழுகுக் குஞ்சு தன்னுடைய சிறகுகளை விரித்துக் கொண்டு உயர பறக்கத் தொடங்கியது. அதுவரையில் கழுகுக் குஞ்சு தன்னுடைய இயற்கையான தன்மையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதுபோல இறைவன் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான சக்தியைக் கொடுத்து தான் படைத்திருக்கிறார். ஆனால் பெண் என்பவள் தனக்குள்ளிருக்கும் சக்தியை உணர்ந்து கொள்ள முயலவில்லை. அவளும் ஆணுக்கு சமமாக சக்தியை சுதந்திரமாக பிரயோகிக்கூடிய வல்லமையைப் பெற்றிருக்கிறாள். ஆனால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அவள் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொள்கிறாள். அதற்குள்ளே அடக்கிக் கொண்டு வாழ முற்படுகிறாள். அவளுக்கு கிடைக்கப் பெற்ற சக்தியைப் பயன்படுத்தாமல், பெண் என்றால் பலவீனமானவள் என்ற தவறான கருத்தை தெரிவிக்க முயலுகிறாள். அவளிடமிருக்கும் சக்தியை அறிந்து செயல்படும் ஒவ்வொரு பெண்ணையும் இந்த உலகம் போற்றிப் பெருமைப்படுகிறது.

இந்த சக்தியை பயன்படுத்தும் எந்தப் பெண்ணிடமிருந்தும் அன்பு, பாசம், தாய்மை, கருணை, இரக்கம், தன்னலமற்ற சேவை போன்ற பெண்ணிய குணங்களை அழித்து விடமுடியாது. சாதனைப் பெண்ணாகயிருந்தாலும், சாதாரண பெண்ணாகயிருந்தாலும் இருவரும் இத்தகைய பெண்ணியத் தன்மைகளை அவ்வளவு எளிதாக எறிந்து விட இயலாது. எத்தகைய சூழ்நிலைக்கும் இந்தப் பெண்ணியத் தன்மைகள் ஒரு பெண்ணுக்கு மருந்தாக உதவுகிறது. ஒரு பெண் என்பவள், சந்தோஷம், துயரம் இந்த இரு நிலைகளையும் சரிசமமாக ஏற்றுக் கொண்டு வாழும் மனப்பக்குவத்தை பெறுகிறாள். இந்தப் பெண்ணியத் தன்மைகள் ஒரு பெண்ணுக்கு பொறுமையின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. பெண்ணின் பொறுமை எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையைப் பெற்றது. ஒரு பெண்ணுடைய முழுமையான தோற்றம் பெண் சக்தியோடும், பெண்ணிய தன்மைகளோடும் நிறைவு பெறுகிறது.

பருவமடைந்த பெண் ஆணுடன் உறவு வைத்துக் கொள்வது இயற்கையின் நியதி. இதற்கு மாறாக செயல்படும் பெண்ணின் பெண்மை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. சொல்ல முடியாத நோயால் அவளுடைய உடல் வருந்துகிறது, மன அழுத்தம் அவளை வாட்டுகிறது. உடலாலும், உள்ளத்தாலும் வேதனையடைந்த பெண்ணின் பெண்மை சீரழிந்த நிலையைப் பெறுகிறது. இயற்கைக்கு முரண்பாடாக செயல்படும் பெண்ணின் பெண்மை வேதனையின் வலியை அனுபவிக்கிறது. கவிஞனின் கற்பனையில் பெண்ணை ஒடும் நதியோடு ஒப்பிட்டு ஒரு கவிதை பிறக்கிறது. எப்படி நதியானது மலைகள், பள்ளங்கள், கரடுமுரடான பாதைகளைக் கடந்து ஓடுகிறதோ அதுபோல பெண் என்பவள் பெண்மையின் இலக்கணத்தோடு தான் வாழ்க்கை பாதையில் பயணிக்க வேண்டும். இதுதான் இயற்கை, இதுதான் பெண்ணிற்கும் பெருமை.
 

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.