........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-46

கரகாட்டம் காணாமல் போகிறது!

                                                                                                -நெல்லை விவேகநந்தா.

இயற்கை அழகையும் கொஞ்சம் முந்திக் கொண்டு பளிச்சிடும் ஆடும் கலைஞர்களின் ஒப்பனைகள். இங்கே தான் இருப்பேன் என்று அடம் பிடிப்பது போல், உடல் என்ன தான் வில்லாக வளைந்தாலும் தலையில் அசையாமல் உட்கார்ந்திருக்கும் கரகம். கிராமத்துக் கோவில் விழாக்களை நினைத்த மாத்திரத்தில் சட்டென்று ஞாபகத்திற்கு வரும் பாரம்பரியக் கலை... - அது தான் கரகாட்டம்!

கரகாட்டம் என்று சொன்னதும் பலருக்கு "கரகாட்டக்காரன்" தமிழ் சினிமாவும் நிச்சயம் நினைவுக்கு வரும். தமிழக மக்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய அந்தத் திரைப்படம், கரகாட்டக் கலையை கொஞ்சம் உயரே தூக்கி விட்டது என்று கூட கூறலாம்.

தமிழர் பண்பாட்டில் பின்னிப் பிணைந்துள்ள கரகாட்டத்தின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. உபநிடத வேதம் மற்றும் சிலப்பதிகாரத்தில் கூட இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் கரகாட்டத்தை குவக்கூத்து ஆட்டம் என்று வர்ணிக்கிறார் இளங்கோவடிகள்.

பொதுவாக, கரகாட்டத்தை சக்தி கரகம், ஆட்டக் கரகம் என்று இரு வகையாகப் பிரிக்கிறார்கள். கோவில் விழாக்களின் போதும், தெய்வ வழிபாட்டின் போதும் மட்டுமே ஆடப்படுவது சக்தி கரகம். தொழில் ரீதியாகக் கலைஞர்கள் ஆடுவது ஆட்டக்கரகம்.

இந்த ஆட்டத்தில் கரகம் என்பது ஒரு சிறு குடம். அதன் உச்சியில் சிறு தேங்காயை வைத்து மூடியிருப்பார்கள். தேங்காய் மீது ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பார்கள். குடத்தைச் சுற்றிலும் பூ அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இதைத் தான் கலைஞர்கள் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவார்கள்.

விவசாயத்தை முக்கியத் தொழிலாக செய்து வந்த தமிழர்கள், பயிர் வளர்வதற்கு முக்கியக் காரணமான மழை தவறாது பெய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் அவர்கள், மழை தெய்வமாகிய மாரி (மழை) அம்மனையும், ஆற்றுக் கடவுளர்களான கங்கை அம்மன், காவேரி அம்மன் ஆகியோரையும் மழை வேண்டி வழிபட்டனர். இந்த தெய்வங்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தண்ணீர் நிரம்பியக் குடத்தைத் தலையில் ஏந்தி ஆடிப்பாடி அந்த தெய்வத்தை வழிபட்டனர். தலையில் கரகம் ஏந்தி ஆடுவது இவ்வாறு தான் துவங்கியது என்று நம்பப்படுகிறது.

தொடக்கக் காலத்தில் கிராமப்புறக் கன்னிப் பெண்கள் மாத்திரமே கரகம் எடுத்து ஆடினார்கள். நாளடைவில், ஆண்களே அதிகம் கரகம் எடுத்து ஆடும் நிலை உருவானது. தற்போது ஆண்களும், பெண்களும் இருவருமே கரகம் ஏந்தி ஆடுகிறார்கள். பெரும்பாலும் மாரியம்மன், கங்கையம்மன் போன்ற அம்மன் கோவில்களில் தான் இந்த ஆட்டம் அதிகமாக நடத்தப்படுகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில், திருவிழாவின்போது கரகாட்டம் தவறாமல் இடம் பிடிக்கும். அப்போது, கரகம் ஆடுபவர்களுக்கு உதவியாக தவில், நாதஸ்வரம், மேளம் போன்ற பக்க வாத்தியங்கள் இசைக்கப்படும். அவற்றின் இசைக்கு ஏற்ப, ஆட்டத்தில் ஏற்ற, இறக்கங்களைக் காண்பித்து அந்தக் கலைஞர்கள் ஆடுவார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆட்டத்தை ரசிப்பது, ரசனைக்கு எல்லையே கிடையாது என்பதை உணர்த்துவதாக இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கரகாட்டத்தை ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்பதே உண்மை. கோயில் விழாக்கள் தான் இந்த கலைக்கு இப்போதைக்கு உயிரூட்டி வந்தாலும் பல கோயில்களில் கரகாட்டம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

நெல்லை விவேகநந்தா அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.