
மாநாட்டிற்கு வந்திருந்த கூட்டத்தின் ஒரு
பகுதி.
கோயம்புத்தூர்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய
மாநாட்டில்
கட்டுரை வாசிக்க என்னுடைய "தமிழ்
விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்"
என்கிற கட்டுரை
தேர்வாகியிருந்தது.
மேலும் தமிழ் வலைப்பூக்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா குறித்த
கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலும் என் பெயர் இடம் பெற்றிருந்தது.
தமிழ் இணைய மாநாட்டில் இரு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் மகிழ்வுடன்
நானும் எனது
நண்பர்
வி. பி.
மணிகண்டனும் (முத்துக்கமலம் இணைய
இதழின் துணை ஆசிரியர்களில்
ஒருவர்),
22-06-2010
அன்று இரவு 11.00 மணிக்குத்
தேனியிலிருந்து
கோயம்புத்தூருக்குப் புறப்பட்ட பேருந்தில்
பயணமானோம்.
23-06-2010 அதிகாலை 3.50 மணிக்கு கோயம்புத்தூர், காந்திபுரம் பேருந்து
நிறுத்தத்தில் நாங்கள்
இறக்கிவிடப்பட்டோம். தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்
துறையின் மூலம்
எனது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட தகவலின்படி எங்களுக்குத்
தங்குமிட வசதி செய்யப்பட்டிருந்த "ஹோட்டல் மங்களா இன்டர்நேசனல்" எனும் விடுதி
குறித்து விசாரித்தோம்.
அந்த விடுதி அருகில்தான் இருக்கிறது என்பதை அறிந்து நடந்தே சென்றோம்.
அந்த
விடுதியின் வரவேற்பறையிலிருந்தவரிடம் எங்களுக்கு வந்த மின்னஞ்சல் நகலைக்
காண்பித்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் 316ன் சாவியை வழங்கும்படி
கேட்டோம்.
அவர் அங்கிருந்த தொலைபேசி வழியாக யாருடனோ தொடர்பு கொண்டார்.
சில நிமிடங்களில் ஒருவர் வந்தார்.
"தான் உத்தமம் அமைப்பின் துணைத் தலைவர்.
என் பெயர் வா.மு.சே.கவியரசன்" என்று எங்களிடம்
அவரை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்பு, "தமிழ்நாடு அரசு கட்டுரையாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு
அழைப்பாளர்களுக்குத் தங்குமிட வசதியைச்
சரியாகச் செய்யவில்லை. தங்குமிட வசதிள் செய்வதில்
பல குளறுபடிகளைச் செய்து விட்டது.
தற்போதைய நிலையில்
தங்களுக்கு உத்தமம் அலுவலகப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறையைத் தங்குவதற்கு அளிக்கிறோம். தாங்கள் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு
காலையில் குளித்துத் தயாரானதும் தங்களுக்கு எப்படியாவது
மாற்று இட வசதி செய்து
தந்து விடுவோம்" என்றார்.
எங்களுக்குத் தங்குமிட வசதி இல்லாத நிலையில், உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர்
அவருடைய அலுவலக அறையை ஒதுக்கித் தருகிறாரே என்று மகிழ்ந்து போனோம். அப்படியே
அவரின் பின்னால் போனோம்.
அறை எண் 112.
அறை முழுக்க அழைப்பிதழ்கள் அடங்கிய அட்டைப் பெட்டி, வேறு சில
அட்டைப் பெட்டிகள் என இருந்தன.
"நீங்கள் இந்த அறையில்
சிறிது ஓய்வெடுங்கள். காலையில் உங்களுக்குத் தங்குமிட வசதி செய்து
விடுவோம்" என்றபடி எங்களிடமிருந்து அவர் விடை பெற்றுக் கொண்டார்.
எங்கள் பயணச்சுமைகளை இறக்கி வைத்து மாற்று உடைக்கு மாறிக் கொண்டோம்.
நாங்கல்
கதவை மூடிய சில நிமிடங்களில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தோம்.
உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் நின்றிருந்தார். அவருடன் இன்னொருவரும்
வந்திருந்தார்.
இவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். இவர் பெயர் வெற்றிப்பாண்டியன்
என்று அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர் எங்களிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எங்களைப் பற்றிய அறிமுகத்தையும்
அவர் கண்டு கொள்ளவில்லை.
உங்களுக்கு இடையூறு இல்லாமல் இந்த
அறையிலிருக்கும் அழைப்பிதழ் அடங்கிய பெட்டி மற்றும்
வேறு பெட்டிகளையும் நாங்கள் வேறு அறைக்கு மாற்றிக் கொள்கிறோம். நீங்களும்
இந்தப் பெட்டிகளை வேறு அறைக்கு மாற்றம் செய்ய உதவமுடியுமா? என்று கேட்டார்.
நமக்காக அவர்களது அலுவலக அறையை ஒதுக்கிக் கொடுத்து, இடையூறில்லாமல் அட்டைப்
பெட்டிகளையும் அகற்ற முன் வந்தது
எங்களுக்கு மகிச்சியாய் இருந்தது. என்னுடன்
வந்திருந்த
நன்பர் வி.பி. மணிகண்டன், வெற்றிப்பாண்டியனுடன் சேர்ந்து
அங்கிருந்து அட்டைப்பெட்டிகளை
எல்லாம் அந்த விடுதியின் மூன்றாவது தளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
காலையில் குளித்து முடித்துக் கிளம்பினோம்.
மாநாட்டு நுழைவிற்கான அடையாள அட்டை விடுதியிலேயே வழங்கப்படும் என்று
மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு
இருந்ததால்,
அடையாள அட்டையைப் பெறும் நோக்கத்துடன்,
மாநாட்டிற்காக
அந்த விடுதியில் வந்து
தங்கியிருப்பவர்களின் வசதிகளுக்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட அரசு
அலுவலர் கிருஷ்ணமூர்த்தி
என்பவரை அணுகினோம்.
அவரிடம், "நாங்கள் தேனியிலிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசால் இந்த
விடுதியில் 316 எண் அறை ஒதுக்கப்பட்டுக் கடிதம் அனுப்பி இருந்தது. அரசு செய்த
குளறுபடியால், அறைகள் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டு விட்டதாமே...? நல்ல வேளை
உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் அவரது அலுவலக அறையை எங்களுக்கு ஒதுக்கிக்
கொடுத்தார்...
இல்லையென்றால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாகப் போயிருந்திருக்கும்..." என்று சொல்ல
அவர் எங்களைப் பார்த்தபடி, "அப்படியெல்லாம்
இந்த விடுதியில் எந்தக் குழப்பமுமில்லையே... உங்கள்
பெயரென்ன...?" என்றபடி அந்த விடுதியில்
தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அறைகள்
மற்றும் பெயர்ப் பட்டியலைப்
பார்வையிட்டார்.
"என் பெயர் எம்.சுப்பிரமணி, நாங்கள் தேனியிலிருந்து வருகிறோம். எங்களுக்கு
இந்த விடுதியில்
குளிரூட்டப்பட்ட 316 எண் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
நாங்கள் தேனியிலிருந்து கிளம்பும் முன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகத்திலிருக்கும் வரவேற்புக குழுவிற்குத் தொலைபேசியில் பேசியபோது அவர்கள்,
எங்களுக்கு இந்த விடுதியில்
316 எண் அறை
ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்." என்றபடி என்னிடமிருந்த
மின்னஞ்சல் கடிதத்தின் நகலை அவரிடம் கொடுத்தேன்.
அந்த அலுவலர் அதைப் படித்துப் பார்த்து
விட்டு, "ஆமாம். இந்த விடுதியில் உங்களுக்கு 316 எண் அறைதான்
ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தக் குழப்பமுமில்லையே... நீங்கள் இரவு
12.45 மணிக்கு இங்கு வந்து தங்கி
விட்டீர்கள் என்று விடுதி நிர்வாகத்தினர் எங்களிடம் குறித்துக் கொடுத்துள்ளனர்"
என்றார்.
"நாங்கள்
இந்த விடுதிக்கு வந்ததே காலை 5.00 மணிக்குத்தான்.
நடு இரவு
12.45க்கு
நாங்கள் எப்படி இங்கு வந்து தங்கியிருக்க முடியும். எங்களுக்கு
இந்த விடுதியில் ஒதுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட 316 எண் அறை
கொடுக்கப்படவில்லை...
நல்ல வேளை, உத்தமம் துணைத்தலைவர் எங்களுக்கு அவரது அலுவலக அறை 112
ஐ ஒதுக்கிக் கொடுக்காவிட்டால்
நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுப் போயிருப்போம்." என்று
சொல்ல அவர் கையிலிருந்த பட்டியலைப் பார்த்தபடி "அந்த
112 எண் அறை வெற்றிப்பாண்டியன்
என்பவருக்காக
ஒதுக்கப்பட்டது. இந்த விடுதியில் எந்த அமைப்பின் அலுவலகப் பணிக்கும் அறை
ஒதுக்கப்படவில்லை." என்றார்.
எங்களுக்கு அதிர்ச்சியாகிப் போனது.
நாம் காலை 5.00 மணிக்கு வந்திருக்க, நம்முடைய பெயரில் நடு இரவு 12.45 மணிக்கு
வந்து நமக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியது யார்? குழப்பத்துடன் அவரைப்
பார்த்தேன்.
இப்போது எங்களுக்குப் புரிந்தது.
அட உத்தமம் துணைத்தலைவர் என்கிற பெயரில்,
இந்த விடுதியில் நமக்கு ஒதுக்கப்பட்ட அறையை
தாங்களாகவே எடுத்துக் கொண்டு, அவர்கள் அறையை நம்மிடம் மாற்றி, இல்லையில்லை நம்மை ஏமாற்றி... நம்மை ஏமாளியாகவோ அல்லது
கோமாளியாகவோ ஆக்குவதா...?
எனக்குக்
கோபம் தலைக்கேறியது.
"எங்களுக்கு ஒதுக்கப்பட்ட
குளிரூட்டப்பட்ட 316 எண் அறையை எங்களுக்கு அளிக்காமல்
எங்களுடைய அனுமதியின்றி பிறருக்கு
அளிப்பதா? நீங்கள் எதற்கு
இங்கு இருக்கிறீர்கள்?" என்று என் கோபத்தை அவரிடம் காண்பிக்க அவர், "கோபப்படாதீர்கள், முதலில்
நாம் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்விற்குச் செல்வோம்.
இந்த அறைப் பிரச்சனை குறித்து
திரும்பி வந்து பேசுவோம்." என்றார் அமைதியாக
அவர் பேச்சில் இருந்த கருத்தும் அமைதியும் என்னை அமைதிப்படுத்தியது.
"சரி. எங்களுக்கான அடையாள அட்டையையாவது
எங்களிடம் கொடுங்கள்." என்று கேட்டோம்.
அவர், "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து
அடையாள அட்டை
எதுவும் எங்களிடம்
இதுவரை அளிக்கப்படவில்லை. இந்த விடுதியில்
தங்கியிருப்பவர்களின் அடையாள அட்டைகளை வாங்க
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒருவரை அனுப்பி
இருக்கிறேன். அவர் வந்தவுடன்
உங்கள் அடையாள அட்டையைத் தந்து விடுகிறேன்." என்றார்.
சிறிது நேரத்தில் அடையாள அட்டை வாங்கச்
சென்றவர் திரும்பி வந்தார். அவர் கையில் சில அடையாள அட்டைகள் இருந்தன.
அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களில் சிலருக்கு மட்டும் அடையாள அட்டை வந்திருந்தது.
அதில் எனக்கும் என்னுடன் வந்த மணிகண்டனுக்கும் மற்றும்
சிலருக்கும் அடையாள
அட்டை இல்லை.
பிற விடுதியில் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரித்தேன். அங்கும் இதே நிலைதான்.
சிலருக்கு அடையாள அட்டை கிடைத்திருந்தது. பலருக்கு இல்லை.
அடையாள அட்டை இல்லாமல் அரங்கத்தினுள் நுழைய முடியாது.
என்று செய்தித்தாளில் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
அவரிடமே கேட்டேன். "நாங்கள் எப்படி
அரங்கத்திற்குள் செல்வது?
என்ன செய்வது?"
அவருக்கும்
ஒன்றும்
புரியவில்லை.
தொலைபேசியில் யாருடனோ பேசினார்.
பின்னர், "அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இன்று
அனுமதி உண்டு. அழைப்பிதழ் இருந்தால் கையில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றார்.
செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு
தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது. தமிழ் இணைய மாநாட்டில்
கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பிதழ் எதுவும் கொடுக்கப்படவில்லையே...? என்ன
செய்வது?
நம் அறையில் இருந்த அழைப்பிதழ் பெட்டியில்
இருந்து நாம் ஒரு அழைப்பிதழை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தோமே... அந்த
அழைப்பிதழ் அறையில்தான் இருக்கிறது. நான் போய் எடுத்து வந்து விடுகிறேன்...
என்று சொல்லி என்னுடன் வந்திருந்த வி.பி.மணிகண்டன் அறைக்குத் திரும்பிச்
சென்று அழைப்பிதழை எடுத்து வந்தார்.
சற்று நிம்மதியாக இருந்தது.
காலை 10.00
மணியைத் தாண்டி விட்டது. எங்கள் விடுதியில்
தங்கியிருப்பவர்களுக்காகத் தனியே ஒதுக்கப்பட்ட 40 எண் கொண்ட குளிரூட்டப்பட்ட
பேருந்தில் மாநாட்டு அரங்கத்திற்குப் பயணமானோம்.
அழைப்பிதழ் கையிலிருந்ததாலும், எங்கள் பேருந்துடன் வந்திருந்த காவல்துறை
அதிகாரியின் உதவியினாலும்
மாநாட்டுத் தொடக்க விழா நிகழ்வு அரங்கிற்குள் நுழைய
எங்களுக்கு எவ்விதத் தடையுமில்லை.
மாநாட்டுத் தொடக்க விழா
நிகழ்வுகள் அனைத்தையும் முழுமையாகப் பார்க்க முடிந்தது.
மாநாட்டு தொடக்க விழா
நிறைவிற்குப் பிறகு அந்த அரங்கிலிருந்து மதிய உணவிற்காக எதிரிலுள்ள
கொடிசியா வளாகத்திற்கு எங்கள் பேருந்தில் வந்த காவல்துறை அதிகாரி உதவியுடன்
அனுமதிக்கப்பட்டோம்.
அங்கு மதிய உணவை முடித்து விட்டு தமிழ் இணைய மாநாட்டுக்கான அரங்குகளில் நாம்
கட்டுரை வாசிக்க உள்ள அரங்கு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன்
நண்பர்களுடன் அங்கு சென்றோம்.
அங்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக அறிந்து
நமக்கும் அடையாள அட்டை வாங்கி
விட முயற்சித்தோம். உத்தமம்
அமைப்பின் பொறுப்பிலுள்ள ஒருவர் சற்று வேகமாக (டென்சனாக?) அடையாள அட்டை
வழங்குவதற்கான பணிகளைப் பொறுப்பு எடுத்துச் செய்து கொண்டிருந்தார்.
"அடையாள அட்டை இல்லாதவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்புக் கடிதம் அல்லது இணையத்தில்
பதிவு செய்த பயணத்திட்ட விபரங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே அடையாள அட்டை
வழங்க முடியும்" என்று
அவர் சொல்ல, சிலர் அந்த விபரங்களை இணையத்தில் தேடி எடுக்கும்
முயற்சியில் அங்கிருந்த இணைய இணைப்புடனான கணினிகளை நாடிச் சென்றனர். சிலர்
தங்களுடைய பயணத்திட்டத்தை இணையத்திலிருந்து எடுத்துத் தர அங்கிருந்த
தன்னார்வலர்களின்
உதவிகளை நாடினர். சிலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தபடி நின்றனர்.
நானும் அவர்களில் ஒருவனாக நின்றேன். இணையம் பயன்படுத்தத் தெரிந்திருந்தாலும்
அங்கிருந்த கூட்டத்தில் கணினி கிடைக்காமல் நின்றேன்.
இதற்குள் அடையாள அட்டை இல்லாதவர்களின் கூட்டம் அங்கு அதிகமாகி விட்டது.
ஏற்கனவே வேகமாக இருந்த உத்தமம் அமைப்பின் பொறுப்பிலிருந்த அவர் சற்று
கூடுதலாகவே சத்தமிடத் தொடங்கி விட்டார்.
உத்தமம் அமைப்பின் பொறுப்பிலிருக்கும் மற்றொரு நபர் "நெடுஞ்செழியன்,
கோபப்படாதீங்க... நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன்." என்று அவர்
பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள முன் வந்தார்.
(இங்கு அவரைப் பாராட்டலாம்.)
அவரிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்த பின்பும்
முன்பிருந்தவர் சப்தம் போட்டுக் கொண்டுதான்
இருந்தார். (இவ்வளவு கோபமடைபவர்கள் பொது வேலைகளைச் செய்வதைத் தவிர்ப்பது
நல்லது)
எப்படியோ எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அழைப்பு மற்றும் பயணத்திட்டம்
ஆகியவற்றை மாணவத் தன்னார்வலர் உதவியுடன் எடுத்துக் கொண்டு அடையாள அட்டைக்காக
முயற்சித்தோம்.
பலன் என்னவோ பூஜ்யம்தான்.
"தமிழ் இணைய மாநாட்டுக்கு ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை தயாராய்
இருக்கிறது.
அந்த அடையாள அட்டைகள் எல்லாம் ஹோட்டல் ஹெரிட்டேஜ் இன் எனும் விடுதியில்
இருக்கிறது. அதை எடுத்து வரச்
சிலர் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன் அடையாள
அட்டை கொடுக்கப்படும்." என்று
தெரிவிக்கப்பட்டது.
எனக்கும் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால் அதுவும்
கடைசியில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்தது.
இதற்கிடையில் எங்கள் தங்கும் விடுதிக்கான பொறுப்புகளைக் கவனிக்கும் அரசு
அதிகாரியின் மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 316
எண் அறையை வழங்க வேண்டுமென்று கேட்டோம். அவர், "விடுதிக்கு வாருங்கள்... பிறகு
உங்களுக்குரிய அறை
உங்களுக்கு ஒதுக்கப்படும்" என்றார்.
மாநாட்டு அரங்கத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் செல்ல வெளியிலிருந்த
குளிரூட்டப்பட்ட பேருந்தில் காந்திபுரம் வந்தோம்.
அந்தப் பகுதியில்தான்
தமிழ் இணைய மாநாட்டில்
பங்கேற்பவர்களுக்கான அடையாள அட்டைகள்
இருப்பதாகச் சொல்லப்பட்ட ஹெரிட்டேஜ் இன்
விடுதிக்குச்
சென்றோம். அந்த விடுதியின் 414 எண் அறையில் அடையாள அட்டை
தரப்படுவதாக அங்கிருந்த ஒருவர் தெரிவிக்க, அங்கு சென்றோம்.
அந்த 414 எண் அறையில் அடையாள அட்டைகள் குவித்து
வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்த அடையாள அட்டைகளில் எங்கள் அடையாள அட்டையைத் தேடினோம்.
ஒன்றும் பயனில்லை. அங்கிருக்கும் அடையாள அட்டைகளைப் போல் எங்கள் முயற்சியும் பயனில்லாமல்
போனது. எங்கள் அடையாள அட்டைகள் அங்கில்லை.
அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம்.
"இங்கு அடையாள அட்டை இல்லாவிட்டால் நீங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு
அனுப்பப்பட்டு இருக்கும்" என்று பதிலளிக்க அங்கிருந்து எங்களுக்குத்
தங்குமிடம் ஒதுக்கப்பட்ட விடுதிக்குத் திரும்பினோம்.
அங்கிருந்த அரசு அலுவலர்களிடம், "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 316 எண் அறையை
உடனடியாகத் தர வேண்டும்." என்று கோரினோம்.
அவர்கள் "அந்த அறையில் உத்தமம் அமைப்பின் துணைத் தலைவர் வா.மு.சே.கவியரசன்
என்பவர் தங்கியிருக்கிறார். அவர் உங்களிடம் பேசிக் கொள்கிறேன் என்கிறார்"
என்றனர்.
எனக்கு மேலும் கோபம் கூடியது.
"நம்மை ஏமாற்றிய அவருடன் பேசுவதா?" வேண்டாமென்று முடிவு செய்தேன். இருப்பினும்
அந்த அரசு அலுவலரின் கோரிக்கைக்கு மரியாதை அளிக்கும் விதமாகப் பேசச்
சம்மதித்தேன்.
வா.மு.சே.கவியரசன் எங்களுடன்
வந்து பேசினார்.
"உங்களுக்கு இப்போது இருக்கும் அறைக்கு என்ன குறைவு? அதில் தங்குவதில்
உங்களுக்கு என்ன குறைச்சல்? உங்களுக்குக் குளிரூட்ட வசதியுடைய அறைதான் வேண்டுமா?
நான் நினைத்தால் உங்களுக்கு மாற்று அறை ஒதுக்கித் தர முடியும்.
இல்லை, அறையே இல்லை என்றும் சொல்ல முடியும்" என்றபடி
பேசத் தொடங்கினார்.
நாங்கள் அவரது பேச்சைக் கேட்க விரும்பவில்லை.
அவர்
தங்கும் விடுதியின் வரவேற்பறையிலிருந்தவரிடம் போய்ப்
பேசினார்.
தமிழ் இணைய மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் அவர்தான் அறை ஒதுக்கிக் கொடுப்பது
போல் அவர் பேசியது எனக்குப் பிடிக்காததால்,
நாங்கள் அங்கிருந்த உணவு
விடுதிக்குச் சாப்பிடப் போய் விட்டோம்.
நாங்கள் சாப்பிட்டு வரும் வரை அவர் காத்திருந்தார்.
மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கியது.
"நாங்கள் தங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 316 எண் அறைதான் எங்களுக்கு
ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை" என்று தெரிவித்தோம்.
அவர் கோபமானார். "நாங்களெல்லாம் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறொம்.
எங்களுக்கு ஒதுக்க வேண்டிய குளிரூட்டப்பட்ட அறைகளை உங்களைப் போன்றோருக்கு
ஒதுக்கியது தவறு. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வெற்றிப்பாண்டியன்
தங்கியிருக்கிறார். நீங்கள் கட்டாயம் அந்த அறைதான் வேண்டுமென்று கூறுவது
ஏற்க முடியாது." என்றார்.
எங்களுக்கு ஒதுக்கீடு செய்த அறையில் தவறுதலாக
என் பெயரில் தங்கிக் கொண்டதுடன் அமெரிக்காவிலிருந்து வந்தவர்களுக்குத்தான்
வசதி மற்றவர்களுக்கு இல்லை என்பதான அவரின் பேச்சு எனக்கு மேலும் கோபத்தை
ஏற்படுத்தியது.
"எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அறையை,
தவறாக என் பெயரைச் சொல்லித் தங்கிக் கொண்டு அமெரிக்காவிலிருந்து
வருபவர்களுக்குத்தான் குளிரூட்ட வசதியுடைய அறைகள் என்றும் இந்தியாவில்
இருப்பவர்களுக்கு இல்லை என்று உங்களிடம் அரசு சொல்லியிருக்கிறதா? இந்த
விடுதியிலுள்ள அறைகள் எல்லாம் உங்கள் பொறுப்பில் இருப்பது போல் தவறாகச்
சொல்லாதீர்கள்..." என்றேன்.
"ஆமாம். நான்தான் தமிழ்நாடு அரசுடன் தமிழ்
இணைய மாநாட்டை நடத்தும் உத்தம் துணைத் தலைவர். நான் நினைத்தால் எதுவும் செய்ய
முடியும்" என்று மிரட்டத் தொடங்கினார்.
"நீங்கள் என்ன சொன்னாலும் சரி. எனக்கு
ஒதுக்கப்பட்ட அறையை என்னால்
விட்டுக் கொடுக்க இயலாது.
நீங்கள் பணிவுடன்
கேட்டிருந்தால்
என் அறையை நீங்கள் சொல்பவருக்கோ அல்லது
உங்களுக்கோ மாற்றம் செய்து கொடுத்திருக்கலாம்.
ஆனால் நீங்கள்தான் அறிவாளி போலவும் நாங்கள் எல்லாம் ஏமாளிகள் போலவும் நீங்கல்
பேசுவதே எனக்குப் பிடிக்கவில்லை. முதலில்
நீங்கள் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ள
வேண்டும்." என்றேன்.
அப்போதும் அவர்தான் அங்கு அறைகளை ஒதுக்கீடு செய்வது போல் பேசிக்
கொண்டிருந்தார்.
அவர் பேசிய எதையும் நான் என் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
நானும் என்னுடைய நிலையிலிருந்து
கீழிறங்கிக் கொள்ளவில்லை.
அவர் ஒருவித மிரட்டலுடன்,
"நீங்கள் இப்படி பிடிவாதம் செய்தால் தமிழ் இணைய மாநாட்டிற்கு வந்த அவர் வாக்
அவுட் செய்து விடுவார்." என்றார்.
அவர் வாக் அவுட் செய்தால் தமிழ் இணைய மாநாடு நின்று விடுமா? அல்லது இவரும்
அவருடன் சேர்ந்து போய் விட்டால் நின்று விடுமா? யாரிருந்தாலும்
இல்லாவிட்டாலும் மாநாடு நடக்கத்தானே போகிறது. இந்த மிரட்டல் எதுக்கு என்று
எனக்குத் தெரியவில்லை.
நானும் அவரிடம் விடாமல், "நீங்கள் வாக் அவுட் செய்தாலும் சரி, ரன் அவுட் செய்தாலும் சரி. எனக்கு ஒதுக்கப்பட்ட அறையை உடனடியாகக் காலி செய்து கொடுக்க வேண்டும்" என்றேன்.
பின்பு அவர் "உங்களிடம் பேசிப் பயனில்லை. நீங்கள் எந்தக் கல்லூரியில் வேலை
பார்க்கிறீர்கள்?" என்றார்.
நான் அதற்குப் பதிலளிக்கவில்லை.
"உத்தமம் அமைப்பின் துணைத்தலைவரான என்னிடம் முடியாது என்று சொல்வதா? நான்
நினைத்தால் அதைச் செய்து விடுவேன்... இதைச் செய்து விடுவேன்...' என்று ஏதோ
சொல்லிக் கொண்டிருந்தார்.
நானும்
உடனே அவரிடம், "தமிழ் இணைய மாநாட்டிற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும்
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் வசதி குறைவாக உள்ளதால் தேனி
எம்.சுப்பிரமணிக்கு ஒதுக்கப்பட்ட
316 எண் அறையை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். அவருக்கு
எங்களுக்கு அளிக்கப்பட்ட 112 எண் அறையை
அளிக்கிறோம் என்று உத்தமம் அமைப்பின் சார்பில்,
உத்தமம் முகவரியுடன் கடிதம் அளிக்க முடியுமா?
நான் அறையை மாற்றிக் கொள்கிறேன்" என்றேன்.
அவரும் "நாளை
காலை கடிதம் தருகிறேன்." என்றார்.
நான் 112 எண் அறைக்குச் செல்ல சம்மதித்தேன்.
"நாளை காலை இங்கிருந்து
செல்வதற்கு முன்பு எனக்கு நான் குறிப்பிட்டபடி கடிதம் அளிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் மீண்டும் இந்தப் பிரச்சனை உருவாகும். மேலதிகாரிகளுக்கு இந்தப்
புகார் கொண்டு செல்லப்படும்" என்றேன்.
அவரும் சம்மதித்தார்.
இரவு மணி 11.00 ஆகியிருந்தது.
நாங்கள் 112 எண் அறைக்குச் சென்றோம்.
மறுநாள்
காலை 6.00 மணிக்கு
எனக்கு ஒதுக்கப்பட்ட 316 எண் அறை காலி செய்யப்பட்டிருந்தது.
அதையும் தான் செய்து தந்ததாகச் சொல்லிக் கொண்டார் வா.மு.சே.கவியரசன்.
இவர் இணைய மாநாட்டுக்கு வந்தாரா? அல்லது இந்த விடுதிக்கு அறை ஏற்பாட்டாளராக
வந்தாரா? இன்னும் எனக்குப் புரியவில்லை.
பொதுவாக எந்த ஒரு நிலையிலும் நான்
இதுவரை
தவறாய்
நடந்ததுமில்லை. தவறுக்குத் துணை நின்றதுமில்லை. மேலும் தவறைச் சுட்டிக் காட்டாமல் இருந்ததுமில்லை என்பதை
முத்துக்கமலம்
வாசகர்களும் என்னுடன் பழகியவர்களும் அறிவார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு தமிழறிஞரின் மகன்
இப்படி தவறாய் நடப்பது
சரியா? எனக்கு ஒதுக்கப்பட்ட அறையை என்னிடம் பணிவுடன் மாற்றிக் கொடுக்கக்
கேட்டிருந்தால் நானே மாற்றிக் கொண்டிருந்திருப்பேன். தவறான வழியில் என்னுடைய
அறையை எடுத்துக் கொண்டு அவரின் செயலைச் சரியாக்க நினைத்த அவரது செயல்பாடுகளை என்னால்
இன்னும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
எனவே, இப்படி "மனம் திறந்து"
இங்கு எழுத வேண்டியதாகி விட்டது. இந்த கசப்பான
அனுபவத்தால் எனக்கு "தமிழ் இணைய மாநாடு" குறித்து சிறிது வருத்தம் ஏற்பட்டது.
இருப்பினும், மறுநாள் எப்படியோ அடையாள அட்டை
பெற்றேன். மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றேன்.
என் பங்களிப்புகள்

உமர்தம்பி அரங்கில் நடைபெற்ற நிகழ்வில்
தேனி.எம்.சுப்பிரமணி கட்டுரை வாசித்த
போது எடுத்த படம். மேடையில் திருமதி.
சுபாஷினி டிரெம்மல் (ஜெர்மனி), திரு. அசாதுல்லா (வேலூர்), திரு.
மணி.எம்.மணிவண்ணன் (சென்னை- தலைவர்), திரு. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (சென்னை)
ஆகியோர்.
-
தமிழ் இணைய மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் உமர்தம்பி அரங்கில்
24-06-2010 அன்று "தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள்" எனும் தலைப்பிலான
நான்காவது அமர்வில் திரு.மணி எம்.மணிவண்ணன், சைமன்டெக் கார்ப்பரேஷன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற கட்டுரை வாசிப்பு நிகழ்வில் மாலை 4.00 மணியிலிருந்து
4.30 மணி வரை ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி சுபாஷினி ட்ரெம்மல் "தமிழ் மரபு
சார்ந்த தகவல்களின் தகவல் வங்கி, மின்நூல்கள், ஓலைச்சுவடிகளின்
ஒருங்கிணைக்கப்பட்ட இணைய அட்டவணை" எனும் தலைப்பிலும், மாலை 4.30 மணியிலிருந்து
5.00 மணி வரை வேலூர் கல்லூரி நூலகர் திரு. அசாதுல்லா, "தமிழ் மின்னணு பெட்டக
மேலாண்மை" எனும் தலைப்பிலும், மாலை 5.00 முதல் 5.30 மணி வரை சென்னை, மாநிலக்
கல்லூரிப் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், "மின்னணு அருங்காட்சியகம்"
எனும் தலைப்பிலும்
கட்டுரை வாசித்தனர்.
இந்த அமர்வில் நான்
மாலை 5.30 முதல் 6.00 மணி வரை "தமிழ் விக்கிப்பீடியா
எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்" எனும்
தலைப்பில் கட்டுரை
வாசித்தேன்.

வலைப்பூக்கள், விக்கிப்பீடியா குறித்த
கலந்துரையாடலில் முனைவர். மு. இளங்கோவன், பத்ரி சேஷாத்ரி, அ.ரவிசங்கர், தேனி.
எம்.சுப்பிரமணி
-
இது தவிர
தமிழ் இணைய மாநாட்டில், யாழன் சண்முகலிங்கம் அரங்கில் 26-06-2010 அன்று "கணினி மொழியியல்"
எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர்
திரு. பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த
தமிழ்ப் பேராசிரியர் திரு. மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. அ. ரவிசங்கர்,
(ஈரோட்டைச் சேர்ந்த
திரு. காசி ஆறுமுகம்
பெயர் இடம் பெற்றிருந்தது. ஏனோ அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.) ஆகியோருடன் நானும் "வலைப்பூக்கள் மற்றும்
விக்கிப்பீடியா" குறித்த கலந்துரையாடல்
நிகழ்வில் கலந்து கொண்டேன்.
-
தமிழ் இணையதளக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ்
தட்டச்சு, வலைப்பூக்கள், விக்கிப்பீடியா குறித்த தகவல்கள் அளிக்கும் அரங்கில் ஒரு
நாள் பங்கேற்று அங்கு வந்தவர்களுக்கு
விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து விளக்கினேன்.
இம்மாநாட்டில் என்னை வருத்தமடையச் செய்த சில நிகழ்வுகள்
-
தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளில் பல
அமர்வுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது.
-
தமிழ்நாடு அரசு, மாநாட்டுப் பார்வையாளர்களுக்குத் தங்குமிடம், உணவு வசதி செய்து கொடுத்திருந்தும் அவர்கள் பார்வையாளர்களாக
இல்லாமல் அரங்கங்களுக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தும்,
உறங்கியும் பொழுதைப் போக்கியது.
-
வலைப்பதிவர்களைப் பேச அழைத்து விட்டு,
அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் புறக்கணிக்க முயற்சித்தது.
(பின்னர்
தமிழ்நாடு
அரசு
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சமாதானம் செய்து
அந்நிகழ்வைத் தொடரச் செய்தது பாராட்டிற்குரியது.)
-
24-06-2010 அன்று
மாலை 6.00 மணிக்கு மேல் சுஜாதா அரங்கில்
கட்டுரையாளர்களுக்கு சிறப்புப் பை ஒன்று வழங்குவதற்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு 20 கட்டுரையாளர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பைகளை வழங்காமல் 250
பைகள் வரை அடுக்கிக் கொண்டு
20 கட்டுரையாளர்களையும் தேவையில்லாமல் காக்க வைத்தது.
-
24-06-2010 அன்று
மாலை 6.00 மணிக்கு மேல் சுஜாதா அரங்கில்,
தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை வாசித்த
கல்லூரி
மாணவர்கள் சிலரை ஒருவர் ஒருமையில்
பேசியது. அந்த மாணவர்
சிறப்புப் பையைத் திருடிச் செல்வது போல் சந்தேகித்து அரங்கினுள்
அந்த மாணவனைத் திட்டிப் பேசியது.
-
பங்கேற்பாளர்களுக்கான
அடையாள
அட்டைகளைக் குறிப்பிட்ட விடுதிகளுக்கு
அனுப்பி, குறிப்பிட்டவர்களிடம் சேர்க்காமல் ஹெரிட்டேஜ் இன் விடுதியில் தேவையில்லாமல் முடக்கி
வைத்திருந்தது.
-
பங்கேற்பாளர்களுக்கு வழங்க வேண்டிய அடையாள
அட்டைகளை குறிப்பிட்டவர்களுக்கு வழங்காமல்
26-06-2010 அன்று திருவள்ளுவர் அரங்கம் அருகே
அந்த அடையாள அட்டைகளை காட்சிப் பொருளாக
பரப்பி
வைத்திருந்தது.
-
தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்ற
கட்டுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட பங்கேற்புச் சான்றிதழில்
தட்டச்சு செய்யப்பட்ட வாக்கிய
அமைப்பில் காணப்பட்ட தவறு.
- இப்படி ஒரு சில நிகழ்வுகள்
மனதிற்குள் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழ்நாடு அரசு இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையும், தமிழ் இணைய
மாநாட்டையும்
மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.

முந்தைய மனம் திறந்து பார்க்க
