........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-51

முதியவர்களுக்கு பாதுகாப்பு?

                                                                                                -சந்தியா கிரிதர்.

அண்மையில் புதுதில்லியிலுள்ள ரோஹிணி என்ற இடத்திலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், முதியோரான தம்பதியர்களைக் கொலை செய்து, 4.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், பணத்தையும் மொத்தமாகச் சுருட்டிக் கொண்டு சென்றார்கள். இந்த பரபரப்பான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தில்லியில் பல பகுதிகளில் குடியிருக்கும் முதியோர்களை குறிவைத்துக் கொலை செய்யும் சம்பவம், அதிகமாகி வருகிறது.

பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்கள் குடியேறியுள்ள இந்த நகரம், அனைவரையும் தன்வசம் ஈர்ப்பதால் இதற்கு தில்லி என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள். தற்சமயம் இந்த மெட்ரோ நகரம் முதியோர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தவறிவிட்டது. கொலை நிகழ்ந்த வீட்டினுடைய பக்கத்து வீட்டுக்காரர், தங்களுடைய பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்களென்றும், எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு அவசியம் ஏற்படவில்லையென்று எதுவும் நிகழாததுபோல சர்வசாதாரணமாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அக்கறையில்லாத மனிதர்களைக் கொண்ட இந்த மெட்ரோ நகரம் முதியோர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை, இத்தகைய அலட்சியப் போக்கான வாழ்க்கை முதியோர்களுக்கு தகுந்த வாழ்க்கையல்ல.

தெற்கு தில்லியிலுள்ள டிவென்ஸ் காலனி என்ற இடத்தில்; ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிகபட்சமாக வசிக்கிறார்கள். அங்குள்ள பணம் பெறும் எந்திரத்திலிருந்து 25,000 ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த முதியவரை, மோட்டர் சைக்களில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு பறந்தார்கள். இந்தச் சம்பவம் மதிய வேளையில் நிகழ்ந்த சம்பவமாகும். தங்களுடைய உயிர்கள் கொள்ளையர்கள், வழிப்பறியாளர்கள் கைகளில் சிக்கி ஊசலாடுவதை எண்ணிய முதியோர்கள், ஒவ்வொரு பகுதிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை கொடுப்பதற்கு அங்குள்ள காவலதிகாரியைச் சந்திக்கச் சென்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்று பதிலளித்த காவலதிகாரி அவர்களுடைய மனுவை வாங்க மறுத்து விட்டார். அந்தப் பகுதியில் செயல்படும் காவல்துறையும் பாதுகாப்பு கொடுக்க மறுத்து விட்டதால், முதியோர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்களை நியமித்தார்கள். ஒரு மாதகாலம் கழித்து நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களுள் ஒரு பாதுகாவலரை அடித்து நொறுக்கி, வீடுபுகுந்து முதிய தம்பதியர்களை படுகாயப்படுத்தி, கொள்ளையர்கள் வீட்டை ஒழித்துக் கொண்டு செல்வதைப்போல அனைத்து பொருள்களையும் ஒட்டுமொத்தமாக லாரியில் ஏற்றிக்கொண்டு பறந்தார்கள்.

ஜனக்புரியில் வசித்து வந்த முதிய பெண்மணியின் வீட்டில் புகுந்து, அந்தப் பெண்மணியின் வயிற்றில் நான்கைந்து முறை கத்தியால் குத்தி, 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளோடு மறைந்தார்கள். கத்தியால் காயப்பட்ட அந்தப் பெண்மணி மயங்கிய நிலையிலிருப்பதை பார்த்த அந்தக் காலனியிலுள்ள ஒருவர் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவித்தார். இந்நகரத்தில் பெண்கள் சாலையில் பயமின்றி நடந்து செல்ல முடியாது. வளையலோடு கைகளும், கம்மலோடு காதுகளும் இழக்க வேண்டுமென்ற அச்சத்தில், பெண்கள் போலி நகைகளைக்கூட அணிந்து செல்ல அஞ்சுகிறார்கள். இந்த மாநகரம் பெண்களுக்கு நகைகளோடு உறுப்புகளையும் இழக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்டு இந்நகரத்தில் வாழுகின்ற இளைய தலைமுறையினர்கள் ஒரு இயந்திரத்தைப் போல செயல்படுகிறார்கள். எப்போதும் பணியில் ஈடுபடுகிற இளைய தம்பதியர்கள், நேரம் எப்படி கழிந்தது என்று தெரியாமல், இந்த நகரத்துடைய இயல்பான உணர்வில்லாத வாழ்க்கையை நிர்பந்தமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் சாவி கொடுத்த பொம்மையைப் போல நடமாடுகிறார்கள். காலனியில் வசிக்கும் ஒருவரையொருவர் அறிமுகம் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணராமல், கடுமையாக உழைத்துக் களைப்போடு வீடு திரும்பும் இவர்கள், மூடிய கதவுகள், சன்னல்களுக்கு பின்னே ஒரு கைதியைப்போல நான்கு சுவர்களுக்கிடையில் மீதிப் பொழுதை கழிக்கிறார்கள். அந்நியர்களைப் போல வாழும் இவர்கள் காலங்கள் ஓடஓட தாங்களும் இந்த நிலையை அடையக்கூடுமென்ற உண்மைக் கூற்றை மறந்து வாழ்வது சிந்திக்கத்தக்கது.

கல்நெஞ்சமுடைய மெட்ரோ நகரவாசிகள் முதியோர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கத் தவறிவிட்டார்கள், அரசும், காவல்துறையும் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மறந்து விட்டது. நாளடைவில் இந்தியாவின் தலைநகரம் ஒரு கொலைநகரமாக தோற்றமளிக்கும் என்ற சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இந்தச் சமூகம் வேகமாக சிந்தித்து செயல்படவேண்டும்.

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.