
நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல்
கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியைப் போன்றது ஒரு எழுத்தாளன் இந்த
சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது.
பரபரக்கும் உலக வாழ்க்கைக்கு நடுவே நின்றுகொண்டு, காணுமிடமெல்லாம் குற்றம்
குற்றம் என்று கர்ஜிக்கையில்; கத்தியெடுத்து சீவ முடியாத தலைகளை எழுதுகோல்
பிடித்து எச்சரிக்கையாவது செய்ய நினைத்து, எழுதித் தீர்க்கிறேன். என் எழுத்தின்
வாசம் இதுவரை என் தெருமுனை தண்டனைக்குரியவனை தொடக் கூட பெரும்பாடுபடுகிறது.
புதியவன் புதியவனென ஒதுக்கி ஒதுக்கியே வருடங்கள் பல கடந்து, எழுத்தில் புடம்
போட்டேனோ இல்லையோ ‘என் அகலக் கண்திறந்து குற்றம் எங்கு காணினும் எழுதுகோல்
எடுத்துக் குற்றத்தின் கன்னம் தொட்டு அறையத் துணிவு பெறச் செய்தது என் எழுத்து.
ஆயிரம் ஜாம்பவான்கள், கோடான கோடி புத்தக வரவுகள்.., கணக்கிலடங்கா தமிழ்த்தாயின்
வார்ப்புகளுக்குமிடையே ‘என்னையும் வித்யசாகரென எழுத்துப் போர் கொள்ள துணிவு
தந்தது என் எழுத்து.
வாழ்வில் எதையோ நிச்சயம் சாதித்தே தீருவோமென்று நம்பி நம்பியே ஒவ்வொரு அடியையும்
எடுத்து வைத்த, எனக்குள்ளிருந்த, எழுத்தாளனை.. கவிஞனை.. இந்த உலகத்திற்குக்
காட்டிய வெளிச்சம் என் எழுத்து.
கடவுள் இருக்கிறாரென்றும், குடிப்பழக்கம் தவறென்றும், காதல் மட்டுமே வாழ்வின்
முடிவில்லையென்றும், நம்பிக்கை கொள் நட்சத்திரமாவாயென்றும், உண்மையாய் இரு 'உண்மை'
ஒளிவட்டமாய் உன்னைக் காக்குமென்றும், ஒழுக்கம் கொள் உலகம் உன்னை வணங்குமென்று
எல்லாமும் நண்பர்களுக்கும் தம்பி தங்கைகளுக்கும் கடிதமெழுதிக் கொண்டிருந்த
வெங்கடாசலத்திற்கு உலகை உறவாக்கி ‘அசையும் தாவரத்திலிருந்து அசையா மலைகள் வரை;
சில்லென்ற காற்றிலிருந்து சீரும் நேருப்பு வரை; அழகான நதியிலிருந்து அகன்ற கடல்
வரை; மெல்லிய மனிதரிலிருந்து விரிந்து பரந்த வானம் வரை சொந்தமாக்கி, என்
கடிதங்களை எல்லாம் கவிதைகளாகவும் கதைகளாகவும் நாவலாகவும் கட்டுரைகளாகவும்
மாற்றித் தந்து வித்யசாகரென பெயர்சூட்டி ‘உலகமகா பொறுப்பு கொடுத்தது என் எழுத்து.
உறங்கிக் கொண்டே விழித்திருந்தும், விழிமுழுதும் எழுத்துக்களைச் சுமந்துக்
கொண்டும், உண்ணும் போதும் உறங்கும் போதும், வேலைக்கு மத்தியிலும், குழந்தையின்
அழுகையிலும், குளியலறை ஈரத்திலும் ‘காகிதம் நனையக் ‘கொதித்தெழும் எண்ணங்களை
எழுதுகோலுக்கும் சுடாமல் எழுதித் தீர்ப்பதுமாகவே என் வாழ்க்கையை நகர்த்திக்
கொண்டிருப்பது என் எழுத்து.
கணினியின் ஜால வித்தைகளுக்கு நடுவே வாழும் மனிதர்களுக்கு நாவல் குறுநாவலாகி,
குறுநாவல் சிறுகதையாகி, சிறுகதை நிமிடக் கதையாகி; நிமிடமும், அரை, காலென்றாகி
விட்ட காலத்திலும், எழுதுவதைத் தவமாக நினைத்துக் கொண்டு, தன் தமிழ்த்தாயிற்கு
எழுத்துக் காணிக்கை கொடுக்க வெற்றி எனும் சக்தி கேட்டு, ஏங்கிக் கொண்டிருக்கும்
ஒரு சாதாரண இளைஞனின் எழுத்து, என் எழுத்து.
அண்டசராசரம் வரை நீளும் பார்வையில் வீட்டை உலகமாகவும், உலகை வீடாகவும்
பார்த்துப் பார்த்து...
1, சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய் (சிறுகதை)
2, விற்கப்படும் நிலாக்கள் (குறுநாவல்கள்)
3, வீழ்ந்தது போதும்; வாழ்ந்து காட்டு (கவிதை)
4, திறக்கப்பட்ட கதவு (குறுநாவல், சிறுகதை)
5, கனவுத் தொட்டில் (நாவல்)
6, வாயிருந்தும் ஊமை நான் (சிறுகதை)
7, இதோ என் வீர முழக்கம் (கவிதை)
8, சாமி வணக்கமுங்க (ஆன்மிக விளக்கக் கதைகள்)
9, Dreams Cradle (கனவு தொட்டிலின் ஆங்கில மொழிபெயர்பு நாவல்)
10, பிரிவுக்குப் பின் (கவிதை)
11, எத்தனையோ பொய்கள் (சிறுங்கவிதை)
12, அவளின்றி நான் இறந்தேனேன்று அர்த்தம் கொள் (காதல் கவிதைகள்)
13, விடுதலையின் சப்தம் (ஈழக் கவிதைகள்)
14, கண்ணடிக்கும் கைதட்டும்; ஆனால் கவிதையல்ல (சமூகக் கவிதை)
15, சில்லறை சப்தங்கள் (சமூகக் கவிதை)
16, உடைந்த கடவுள் (சிறுங்கவிதை)
17, மூன்றாம் உலகப் போர் (சிறுகதை)
என என்னை இத்தனை புத்தகம் வரை கொண்டு வந்தது என் எழுத்து.
இந்த என் எழுத்துப் பயணத்தில், என்னை முதலாய் அங்கீகரித்து, என் உயிரை
மையிலிட்டு எழுதத் துவங்கிய என் எழுத்துக்களுக்கு முதல் விலாசம் கொடுத்து என்
முதல் கவிதையைப் பிரசுரித்தது 'ராணி வார இதழ்'.
இடையே நடிகர் குட்டிக்கு நானெழுதிய “நம்பிக்கையின் நலவேந்தன்” என்ற வாழ்த்துக்
கவிதை குவைத்திய விழா மலரொன்றில் வெளிவந்து, இப்படி ஒருவன் குவைத்தில்
எழுத்துக்களைச் சுமந்து வாழ்கிறேன் என குவைத்திய தமிழர்களுக்கு அறிவித்த நேரம்
அது. அதே என் கவிதை தலைப்பையே “குவைத் பாரதிக் கலை மன்றத்தின்' முன்னாள்
செயலாளர் திரு.கவிசேய் சேகர் அவர்கள் ‘நடிகர் குட்டிக்கு பட்டமாக கொடுத்ததாய்
தெரிவிக்க, குவைத்தின் தமிழுள்ளங்கள் என் எழுத்துக்கு பலமூட்ட என் கவிதைகள்
ஒவ்வொன்றாய் மேடையேறத் துவங்கின.
இதற்கு இடைப்பட்டக் காலத்தில் என் எழுத்துக்கு மதிப்பளித்து அவைகளைப்
புத்தகமாக்கி என்னை எழுத்தாளனாய் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ரவி
தமிழ்வாணன் அவர்கள், அதேநேரம் என் கவிதைக்கு மேடை தந்து என்னைக் கவிஞனாக
மேடையேற்றியது செம்பொன் மாரி கா.சேது அவர்கள். இதற்கிடையே என்னை மென்மேலும்
நிறைய எழுதத் தூண்டி எந்நேரமும் துணை இருந்தவர்களில் முதலாய் என் தம்பி
வித்யாகரனும் இன்னும் பல தம்பிகளும் சக நண்பர்களும் ஏராளம்.
இதற்கிடையில் "சிறகுகள் இருந்தும் சிறைக் கைதிகளாய்" எனும் என் முதல்
புத்தகத்தின் வெளியீட்டு விழா சேது அவர்களின் உதவியினால் அவர் நிறுவிய 'வளைகுடா
வானம்பாடி கவிஞர் சங்கத்தினால்' வெளியிடப்பட்டு, அந்நேரம் குவைத்திலிருந்த
பொதிகை தொலைக்காட்சியின் கிளை மையத்தின் மூலம் முதல் முதலாய் அரைமணி நேரத்திற்கு
அந்த வெளியீட்டுவிழா பொதிகையில் ஒலிபரப்பப் பட்டு சின்னத்திரையில் முதல்
நுழைவும் கிடைத்தது.
ஆயினும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் பணம் தேடி அலைகையில், பணமெதற்கு எங்களிடம்
தாருங்கள் நாங்கள் இலவசமாகவே அச்சிட்டுத் தருகிறோமென கூறி 'என் எழுத்துப்
பாலத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்தவர்கள் லியோ பதிப்பகத்தாரான சந்திரமதி
அவர்கள்.
ஆக, மொத்தக் கைதட்டல்களின் சப்தங்களோடும், உதவ தோள் தந்த பலத்தோடும் உலகத்தின்
அடையாளங்களில் என் பெயரையும் பதித்துக் கொள்ள புதுரத்தம் பாய்ந்து எழுதியவைகளை
எல்லாம் அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்ப ஆரம்பித்தேன், இரண்டாவதாய்.. 'நான்
வீடு பெசுகிறேனென்ற' கவிதையை வெளியிட்டது 'பாக்யா வார இதழ்'.
அந்நேரம் தான் நிகழ்ந்தது அது, ஒரு சின்ன முல்லைக் கொடிக்கு தன் தங்க வைர
வைடூரியத்தாலான தேர் தந்த பாரியை போல, இந்த சிறியவனைப் பாராட்டி, என் “இதுபோன்ற
வரிகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்துள்ளன” என மேதகு ‘மூத்தறிஞர் அப்துல் கலாம்
அவர்கள் இந்திய தேசத்தின் ஜனாதிபதியாக இருந்த போதே 'இந்திய அரசுச் சின்னம்
பொறித்த கடிதத் தாளில்' அவரின் கைப்பட கையொப்பமிட்டு வாழ்த்துக் கடிதம்
அனுப்பியிருந்தார்.
நான் இன்றுவரை, திரும்பத் திரும்ப எடுத்துப் பார்த்துக் கொள்ளும் கடிதத்தில்
அதுவும் ஒன்று. உண்மையில், குருடாகவே இருந்து இறக்கப் போகும் ஒருவனுக்கு
பார்வையும் கொடுத்து 'கூடவே வாழவும் சொன்னால் அவன் எத்தனை மகிழ்வானோ தெரியவில்லை,
ஆண்டாள் தவத்திற்கு ஒரு கண்ணன் கிடைத்தபோது 'அவள் எப்படி மகிழ்ச்சியில்
திளைத்துப் போயிருப்பாளோ தெரியவில்லை, என் இத்தனை காலம் இருந்த என் எழுத்து
தவத்திற்கு 'ஒரு பெரிய அங்கீகாரமே கிடைத்ததென நான் வானத்திற்கும் பூமிக்குமாய்
மனதிற்குள்ளேயே குதித்து மகிழ்ந்த நாள் அக்கடிதம் கிடைத்த அந்த நாள்.
இது என் எழுத்திற்கு கிடைத்த வெற்றியல்ல, அந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின்
பெருந்தன்மைக்கு ஒரு சான்று என ஊரெல்லாம் சொன்னேன். பார்த்தவரெல்லாம் புகழ,
குவைத் செய்தி தாள் கூட அதை மெச்சுதலோடு தன் செய்தியில் வெளியிட, என்
நிறுவனமெல்லாம் பாராட்ட, இத்தனை தகுதி நம் எழுத்திற்கு இருக்குமா என சிந்தித்து
சிந்தித்து, இனி விடவேண்டாம், எழுத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளென
பிடித்துக் கொண்டு, அதைக் கொண்டு சேர்க்க மீண்டும் வாரப் பத்திரிகை ஒன்றே என்
இலக்கென தேடி ஓடி அலைந்தேன். நாட்களை மாதங்களை விழுங்கி விழுங்கி 'ஒவ்வொன்றாய்'
ஒவ்வொன்றிலாய் வெளிவர ஆரம்பித்தது.
இப்படி ஒரு சமயந்தானே வேண்டும் எழுத, எழுதிக் குவிப்போம், உலகின் இயலாமையை தன்
எழுத்தால் தீர்ப்போமென எழுதுவதும் தபால்தலை தேடி அலைந்து வார இதழ்களுக்கு
அனுப்புவதுமாக இருந்த நேரம் ராணி வார இதழில் தொடர்ந்து சிறு சிறு கவிதைகளாக வர
ஆரம்பித்தது. பாக்யாவும் தொடர்ந்து என் சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. அந்நேரம்
பார்த்து “தேவி வார இதழிலும் வெளியானது ஒரு கவிதை.
மடிந்து வீழும் மரம் கூட விறகாக வீழ, வாழ்ந்து வீழும் மனிதனேன் வெறும் மண்ணாவதா?
முடியாது. முடியாதெனில் மறுப்பை எப்படி மனிதனுக்குத் தெரிவிப்பது? எழுதிக்
கொண்டே இரு ‘எழுத்தின் வாசத்தில் ஒரு நாள் அதற்கான அடையாளத்தை மனிதர்களே கண்டு
கொள்வார்களென 'என் இரவையும் பகலையும் எழுத்தாக்கினேன். அதில் ஒரு கவிதை
“தினமலரின் வார மலரிலும் வெளிவந்தது.
விடுவேனா, வெறும் எழுதுகோலில் என்னுயிரை மையாய் விடுவேனா, உயிரையும் மையையும்
ஒன்றென கலந்து எழுத்துக்களில் குவித்தேன். எழுதிய புத்தகங்களை எல்லாம் எடுத்துக்
கொண்டு கடைகடையாய் அலைந்தேன். பணம் போட்டு அச்சடித்த பணத்தில் வந்த
பணமத்தனையும் பணமற்று தவிக்கும் “இல்லார்க்குக் கொடுத்தேன்.
என்ன செய்ய.. வேறென்ன செய்ய.. போதாது, இவர்கள் போதமாட்டார்கள், நான் எழுதும்
தூரம் வரை ‘எனக்கென்று மட்டுமாய்’ எந்த வார இதழ்களும் துணை வரத் தயாரில்லை.
பன்னிரண்டு புத்தகமெழுதி, படியுங்கள் படியுங்கள் என கெஞ்சி அலைந்துவிட்டு, என்னை
மக்களிடத்தில் அடையாளப் படுத்திக் கொண்டால் மட்டுமே ‘என் எழுத்து உலக
தமிழரங்கில் மேடையேருமென புரிந்த நேரம், வெறும் ஐந்தாறு கதைகளும், எட்டொன்பது
கவிதைகளும் மட்டுமே வெளிவந்திருக்க மீதமுள்ள என் உழைப்பு சுமந்த படைப்புகளை
என்ன செய்ய? கேள்விகள் இதுவரை முழு பதிலாகவில்லை... (புத்தகங்கள் மட்டும்
பதினேழினை கடந்துவிட்டது).
தேடல்களுக்கு பின்னேயே வாழ்க்கை நகர்த்தும் எறும்பிற்குத்தான் இன்னொரு எறும்பைத்
தெரியும். நானும் அப்படியே என் வாழ்க்கையை தேடலாக நகர்த்தினாலும் என் தேடலைப்
புரிந்துக் கொள்வோரின்றி தவிக்கையில், தவிப்புகள் கூட எழுத்துகளானது.
அப்போது எனக்கெனவே துவங்கினாற் போல் குவைத்தின் சுடும் பாலை நிலத்தில் “தமிழ்
டாட் கம்” மற்றும் “குவைத் நீதியின் குரல்” என இரு மாத இதழ்கள் ஒன்றன்பின்
ஒன்றாய் துவங்கப்பட்டது. இருவரும் நம் கவிதைகளை வெளியிட்டாலும் நீதியின் குரலின்
ஆசிரியர் திரு.விழுப்புரம் ஷாஜி அவர்கள் தோழமையோடு கைகோர்த்தார். என் 'பிரிவுக்குப்
பின்'னென்னும் தொடர் கவிதையை பத்து மாதங்களுக்கு தொடர்ந்து பிரசுரித்து வந்து 'குவைத்
தமிழர்களின் பிரிவின் வலியைத் தெரிவிக்க நானும் ஒருவன் இருப்பதாய் அவர்கள் முன்
பறைசாற்றியது.
அதோடு மட்டுமல்லாமல் நம் 'கனவுத் தொட்டில்' நாவல் விமர்சன விழாவில் “வெண்மனச்
செம்மல் வித்யாசாகரென” ஒரு விருதையும் தந்து கவுரவித்தது குவைத் நீதியின் குரல்.
என் முதல் படைப்பான 'சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்' போல கனவுத் தொட்டிலும்
தமிழக நூலகத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி
அவர்கள் அவருடைய பவளவிழாவை முன்னிட்டு அனைத்து பதிப்பகத்திலிருந்தும்
தேர்ந்தெடுத்து வெளியிட்ட எண்பத்தைந்து புத்தகத்தில் 'கனவுத் தொட்டில்'
நாவலையும் வெளியிட்டு.. அத்தனை செய்தித் தாள்களிலும் மற்ற படைப்புகளோடு நம்
கனவுத் தொட்டிலும் ஒன்றாக ஜொலித்தது. (அந்த கனவுத் தொட்டில் நாவல் தான் தற்போது
ஆங்கிலத்தில் மணிமேகலை பிரசுரத்தால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது).
அதற்காக போதுமென ஓய்ந்து போவேனா? இல்லை இல்லை.. என் இலக்கு இதோடு
நிற்பதற்கானதில்லையே. கொதிக்கும் ரத்தம் முழுதும் சமூகத்தில் காணும் அத்தனை
ஒழுங்கீனங்களும் நெருப்பு ஈட்டிகளாய் வந்து புத்தியைச் சுட, நாட்கள் அப்படியே
நீண்டு கொண்டிருந்த ஒரு தினத்தில், எதையோ எழுதினேன் என்று நினைத்திருந்த
தினத்தில், எதற்காக எழுதுகிறோமோ என்றும் வருந்திய ஒரு தினத்தில், எப்படி இவைகளை
எல்லாம் என் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என படாத பாடுபட்ட ஒரு தினத்தில்,
முதுமைக்கும் பெருமைக்கும் உரிய “கலைமகள் இலக்கிய மாத இதழ் கடந்த மே 2009 – ல்
நடத்திய அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் நம் கதையான 'பாவ மன்னிப்பிற்கு'
முதல் பரிசு தந்து கவுரவித்தது.
மதம் பற்றி பேசுகிறோமே, கடவுள் பற்றி எழுதுகிறோமே, உலகம் எப்படி எடுத்துக்
கொள்ளுமோ, எப்படி எல்லோருக்கும் புரியும் வண்ணம் பாவ மன்னிப்பு குறு நாவலை
கொண்டு சேர்ப்பதோ என தவித்த ஒரு படைப்பு, ‘சில எதிர்ப்புகளையும் தாண்டி முதல்
பரிசுக்கு தேர்வு பெற்றதற்கான நன்றியறிதல் ஆசிரியர் திரு.கீழாம்பூர்
அவர்களுக்கும், தேர்வுக் குழுவிற்குமே உரித்தாகும். (அந்த குறுநாவலும், அப்துல்
கலாம் பாராட்டிய ஒரு ஆன்மீக குறுநாவலும், மதப் பிரச்சனை குறித்து பேசும் ஒரு
சிறுகதையும் சேர்த்துதான் தற்போது 'சாமி வணக்கமுங்க' என ஆன்மீக தொகுப்பாக
வெளிவந்துள்ளது).
இதற்கு இடைப்பட்ட நாட்களில், மலேசிய நண்பனில் கவிதை, ஆங்காங்கே வெளிவரும்
சிற்றிதழ்களில் கவிதை, வீட்டிற்கு வரும் கடிதங்களென என் இந்த பத்து
வருடத்திற்குமான பலன்கள் ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருக்கையில், ஈகரை தமிழ்
களஞ்சியமென்ற ஒரு அரிய சொல்லவொணா சிறப்பு மிக்க தமிழ்வலைப் பகுதி ஒன்றினை தம்பி
தமிழன் மணியன் மூலம் அறிந்து, அதில் உறுப்பினராக சேர்ந்து, எனக்கென ஈகரை வலை
பகுதியில் “வித்யாசாகரின் பக்கங்களென” ஒரு பக்கமும் ஒதுக்கப் பட்டு, என்னை
மிகையாய் ஊக்குவித்து.. விமர்சித்து.. பாராட்டி.. உலகளவில் என்னை முதலாய்
அறியவைத்த பெருமை ஈகரை குடுமபத்திற்கே சாரும். (ஈகரையை பற்றி முழுமையாய் சொல்ல
ஒருநாள் நம் தமிழ்வரலாறே முற்படலாமென்பது பாராட்டத் தக்க உண்மை).
இருப்பினும், எங்கு வாழ்கிறோம் நாம்? சுட்ட புண் பல ஆறாத சமூகத்திற்கு
மத்தியிலல்லவா நம் வாழ்க்கை நடக்கிறது. பரிசுகள் மகுடமாகலாம் முடிவாகுமா? எழுதத்
துடித்த கைகளும், உலகை எண்ணி எண்ணி வாழும் புத்தியும் அடங்கிப் போகுமா? எழுதித்
தீர்க்க குருதியில் வீரம் சேர்த்துக் கொண்டது வெறும் பரிசிற்கும் விருதிற்குமா?
இல்லையே. வேறென்ன செய்ய -
ஒரு பெரிய லட்சியத்தை வெல்ல சிறிய பல லட்சியம் கொள் என்பார்கள், அப்படி என்
படைப்புகளை படிப்போர் மத்தியில் கொண்டு சேர்க்க அனைத்து வார இதழ்களுக்கும்
அனுப்பிக் கொண்டிருந்த நான், லட்சியம் ஒன்றாக இருப்பின் வெல்லும் என உறுதி
கொண்டு ஆனந்த விகடனுக்கு மட்டுமே கவிதைகள் கதைகளை அனுப்புவது என முடிவு
கொண்டேன்.
அடங்காத உணர்வுகள், அடக்கமுடியாத உணர்வுகள் அத்தனையையும் படைப்பாக்கி, ஆனந்த
விகடனுக்கு மட்டுமென அனுப்பினேன். இரவும் பகலும் எழுதியதையும் எழுதுவதையும்
கணினியில் தமிழாக மாற்றி மின்னஞ்சலில் விகடனிடம் பதிவு செய்தேன். அங்ஙனம்
செய்ததில் இந்த விகடப் பிரியனின் கவிதை 'கடந்த 07.10.2009 ' அன்று “அம்மாவிற்கு
தெரியாத ரகசியமென்ற” தலைப்பில் ஆனந்தவிகடனிலும் முதன் முறையாய் வெளியானது.
என் வாழ்வின் அத்தனை வெற்றிகளையும் தூர எறிந்து விட்டு.. முன்னே முந்தி கொன்டு
வந்துவிட்டது ஆனந்த விகடனில் வெளிவந்த என் கவிதை. அதைப் பார்த்த போது தரைதொட்ட
என் ஒரு சொட்டுக் கண்ணீரில், ‘இந்தப் பூமியையே நனைக்கத் துணிந்த அந்தமுதல்
வெற்றி என் எழுத்துப் பயணத்தை சற்று கூடுதல் வேகமாக நீட்டிக் கொண்டிருக்க ,
எத்தனையோ வருடம் எழுதுகோல் தாங்கி இதயங்களை உழுது பார்க்க, கொட்டக் கொட்ட
தூக்கம் தொலைத்து விழித்திருந்த.. புத்தகங்களைக் காகிதங்களாய் நிரப்பி உலகின்
தூரம் வரை கொண்டு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு சாமனியனை தன் ஒரு
சின்ன அரவணைப்பினால் உலகத்தின் முன்னே என்னையும் ஒரு கவிஞனென பறைசாற்றிய
விகடனுக்கு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நன்றிகளே கண்ணீரின் ஈரமாக எழுத்துகளில்
கரைந்தது.
இன்று சிற்றிதழ் மற்றும் இணையத்தின் ஒவ்வொரு மூலையிலும் என் பெருத்த
நன்றிகளுக்குரியவர்களாய் 'நண்பன் இணையம், தமிழ் ஆத்தர்ஸ், யாழ்தேவி, மீனகம்,
தமிழ்த்தோட்டம், வார்ப்பு, செய்தி.காம், கூடல், நாம் தமிழர், திண்ணை, தமிழ்மணம்,
திரட்டி, தமிழரின் சிந்தனை களம், ஈழநேசன், லங்காஸ்ரீ, தினக்குரல், தமிழ்வின்,
தமிழ்மீடியா, உலக தமிழ் இணையம், தமிழ்.நெட், கேள்வி.நெட், தமிழ்வெளி, காற்றுவெளி,
தமிழமுதம், மகாகவி, நட்பு, நந்தவனம், என நீண்டு கொண்டிருக்க என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்து புதிய வலைதளம் திறக்க உதவியது வேர்ட்ப்ரெஸ் வலைமையம்.
அதன் உதவியினால் 'வித்யாசாகரின் எழுத்துப் பயணம்' எனும் வலைதளத்தை துவங்கி, 'நான்
எழுதாத நாள் என் வாழாத நாளென' எண்ணி இயங்கிக் கொண்டிருக்க, முகநூல் உறவுகளால்
மேலும் பலம் பெற்று 'அம்மா 'மனைவி 'குழந்தை 'உறவுகள் போல, எழுத்தும் என் ஒரு
அங்கமாக நகர்கிறது வாழ்க்கை.
இந்த நகர்தலின் இடைவெளியில் தான் வாழ்வின் இன்னொரு அங்கீகாரம் கிடைத்தது. அது 'தமிழகஅரசு
இணையப் பல்கலைகழகப் பாடத்தில் 'என்னைப்பற்றியும் என் படைப்புகளை பற்றியும்
சேர்த்திருக்கும் செய்தி. வாழ்வில் பட்ட அத்தனை துயரத்திற்கும், உழைத்த மொத்த
உழைப்பிற்கும் உரிய பலன் கண்டிப்பாக உண்டென உணர்த்தி, உடலெல்லாம் எழுத்தின்
பூரிப்பாய் பூத்த கணம் அது.
எங்கோ இருந்து கொண்டு, எப்படியோ என் படைப்புகளை வாசித்து, என்னையும் உலகின்
பார்வைக்கு பதிய நினைத்த அந்த பாடத்தின் ஆசிரியர், ஆசிரியர் குழு, முகம் காணாத,
யாரென்றே தெரியாத அந்த அன்பு இதயங்களுக்கு, அந்த இணையப் பல்கலைகழகத்திற்கு 'நன்றிகளாய்
நினைவில் கரைந்த நாள் அது.
எப்படியோ, உலகின் ஒரு ஓரத்திலிருந்து மிக சாதாரணமாகத் துவங்கிய என் எழுத்துப்
பயணம் 'இந்த பன்னிரெண்டு வருட போராட்டத்தில் சில புத்தகங்களாக பதிக்கப்பட்டு
வந்தாலும், அதையும் 'இப்படி பதித்துக் காட்டுகிறேன் பாருங்களென' ஒரு தனிச்
சிறப்பினை நம் படைப்புகளுக்குள் புகுத்தியதும், ஏன் நாமே ஒரு பதிப்பகம் துவங்கி
இதுவரை வெளிவராத படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடக் கூடாதென எண்ணிய அடுத்த
வாரத்திலேயே, தானாக முன்வந்து ஆலோசனை தந்தது மட்டுமின்றி 'முகில் பதிப்பகத்தின்'
முதல் புத்தத்தையும் நூலகழகு செய்து அச்சிட்டுக் கொடுத்தவர் 'தமிழலை ஊடக உலகின்'
நிறுவனர் கவிஞர் இசாக் அவர்கள்.
கடைசியாய் அல்ல, மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள பெயர் அறிவித்து
கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாமல் பெயர் சொல்லாத நிறைய பேர் இருந்தாலும்,
குறிப்பாய் சொல்ல வேண்டிய இன்னொரு நபர் ரேனுகா. GTV -யின் மூலம் நம்
படைப்புக்களையும் வாசித்து உலகின் சின்னத் திரை நேயர்களுக்கு நம்மை அறிமுகப்
படுத்தி வைத்தவர். அதே வேளை 'இணையத்தில் நம்மவரென ஒரு அரைப்பக்க அறிமுகமாக
இணைந்து வெளியிட்ட யாழ்தேவி இணையம் மற்றும் தினக்குரல் நாளிதழும், எனக்கே
தெரியாமல் என் கனவுகளை, கற்பனைகளை, எழுத்தின் வெற்றிகளை சுமந்து 'வெளிவரும் வேறு
பல இதழ்கள் மற்றும் இணையமுமென நான் நன்றி கூறி நினைவில் வைத்திட வேண்டிய உறவுகள்
மரணம் வரை நீளும், நீள்கின்றன.
முடிவாய், வணக்கம் சொல்லக் கூடப் பொறுமையின்றி ஆரம்பித்த இந்தக் கட்டுரையை
முடிக்கும் முன் ‘என் எழுத்துப் பயணத்திற்கு இன்னொரு துணையாகி என்னை இத்தனை
தூரம் படித்து வந்த, என் அன்புள்ளங்களாகிய தமிழ் மக்கள் உங்களுக்கும், என்னை
இத்தனை தூரம் சுமந்து வந்து தாயென வளர்த்த அனைத்து இதர இதழ்களுக்கும்
இணையங்களுக்கும், என் கடை வணக்கமும் முழு நன்றியும் உரித்தாகட்டும்.
ஆக, எந்த நிலைக்கும், தன்னை முழுதாக இழந்திடாத போது இறைவனுக்குள் இருப்பதாகவே
உணர்கிறேன். எவர் இழப்பையும் வருத்தத்தையும் தனதாய் உணரும் போது எல்லாம் நானாய்
ஆகிறேன். எல்லாம் நானென்று கொண்டதில் எல்லோருக்குமாய் உடைகிறேன்.
எல்லாருக்குமாய் உடைந்த பாதி பாதிக்கு இடையேயுள்ள இடைவெளியில் தான் முளைக்கிறது
என் எழுத்து.
இனி, உடைதலுக்கு விளக்கம் தேடியும்; உடையாதலுக்கு வழி தேடியுமே... எழுத்தின்
பயணமாக... ...

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க
