........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-54

இயற்கையின் மௌனக்குரல்!

                                                                                                -சந்தியா கிரிதர்.

தற்சமயம் நிகழ்ந்த இயற்கைச் சீற்றம் வருங்காலத்தில் புவியிருப்புத் தன்மையை நிலையற்றதென்று சுட்டிக் காட்டுகிறது. இந்தச் சீற்றத்தினால் விளைந்த அழிவுகள், அதனால் ஏற்பட்ட வலி, தங்களுடைய வாழ்க்கை, இருப்பிடம், உடமைகள், உறவுகள் அனைத்தையும் தொலைத்து விட்ட வேதனையில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒரு பக்கமிருக்க, இவை அனைத்தையும் பரிசாகக் கொடுத்து அடங்கிப் போகும் இயற்கையின் கோபம் இன்னொரு பக்கமிருக்க, அவ்வப்போது தலையெடுக்கும் இயற்கையின் பரிமாணங்கள் எதையோ சொல்லத் துடிக்கிறது. மனிதம்தான் இயற்கையினுடைய வேறுபாட்டு நிலையறிந்து கொண்டு அந்தக்கணமே அவன் வாழ்க்கை நடைமுறையில் இயற்கைக்கு தகுந்தால் போல மாற்றி அமைத்துக் கொள்ள முனைய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுகிற இந்த மனிதம், அண்மையில் நிகழவிருக்கும் அழிவு என்கிற எதிரியானவன் நினைத்துப் பார்க்க முடியாதளவு விசுவரூபமெடுத்து உலகத்தையே விழுங்கக் கூடிய சக்தியோடு படையெடுப்பதைப் பார்த்து, தான் செய்த தவறை எண்ணி எண்ணி மனம் வருந்த நேரிடும்.

பனிமலைகள், உயரமான வானத்தை தொடுமளவு மரங்கள், வளைந்து செல்லும் ஓடைகள், பறவைகளின் பரிபாஷைகள், தங்கநிற ஆதவன், திடீரென்று சீறிக்கொண்டு பாயும் ஊதக்காற்று, அதற்குப் பின்னால் தொடரும் தென்றல், இப்படி பூமியில் கொட்டிக் கிடக்கும் இயற்கையினுடைய அழகையும், வளத்தையும் காலப்போக்கில் மனிதன் சீரழித்து விட்டு இன்றைய தினத்தில் வெற்றுப் பாதையின் கூர்முனையில் நின்று கொண்டு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறான். 2012-ல் புவியினுடைய அழிவைப் பற்றிய நிகழ்ச்சியொன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. புவியிருப்புத்தன்மையை அழிக்கக் கூடிய சக்தியைக் கொண்ட சூரியனுடைய வெப்பம், நாளுக்குநாள் மாற்றம் கண்டு வரும் சூரியனுடைய இயல்பு ஆகிய இரண்டும் புவியின் அழிவுக்கு காரணகர்த்தாவாக இருக்கக்கூடுமென்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், அக்கறையற்ற அரசாங்கப் போக்குகள், சட்டென்று முடிவெடுக்கும் மக்களுடைய இயல்பு, நகரமயமாக்க வேண்டுமென்கிற வேகம், எண்ணற்ற தொழிற்சாலைகள் ஆகிய அனைத்தும் இயற்கையினுடைய விதியை மாற்றி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எத்தனை வருடங்கள் ஓடினாலும் ஒருவரையொருவர் பழி சுமத்துவதும், தர்க்கம், விவாதம் செய்வதும், அவரவர்கள் எண்ணத்தை நிலைநாட்ட பிரயத்தனிப்பதிலும் காலத்தை கழிப்பார்களே தவிர உலகமக்கள் ஒரு நடுநிலையான கருத்துக்கு ஒத்து வராமல் என் வழி தனி வழி என்ற போக்கில் செயல்படுகிறார்கள்.

அண்மையில் பிரேஸிலில் சூரியனுடைய நெருப்புக்கனல் பயங்கர வேகத்தில் சுழல்போல சூழ்ந்து கொண்டு அங்குள்ள பல கிராமங்களை எரித்து விழுங்கியது.

கட்டுக்கிடங்காத மழையினால் பெருக்கெடுத்த வெள்ளம் சீனாவிலுள்ள பல கிராமங்களை விழுங்கி விட்டது.

பாகிஸ்தானில் பெய்த அடைமழையினால் பல கிராமங்கள் மிதக்கத் தொடங்கின, மேலும் அங்குள்ள மக்கள் இன்று வீடுவாசல் அனைத்தையும் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறhர்கள்.

லத்தாக்கில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் மண்ணுக்குள் புதைந்தார்கள்.

சில நாட்களுக்கு முன்பு மாபெரும் நிலநடுக்கத்தால் ஹைத்தி என்ற சின்ன நாடு உருக்குலைந்து நின்றது. இப்படிப்பட்ட இயற்கையின் லீலைகளை எவராலும் மறக்க முடியாது. இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன, இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கவிருக்கின்றன. ஆனால் மனிதன், தான் வாழுகின்ற இந்த புவியையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறான்.

புவியின் சீதோஷ்னநிலை மாற்றத்தால் உருவாகிற பாதகமான விளைவு ஏழை மக்களைத்தான் அதிகமாக பாதிக்கிறது. காடுகளை அழித்து நகரமயமாக்க வேண்டுமென்று திண்ணமான எண்ணத்தோடு செயல்படும் பல நாடுகள் இப்படி நிலநடுக்கம், நிலச்சரிவு, வெள்ளம், தண்ணீரில்லாமை போன்றவைகளால் அவதியுறும் நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகள், முன்னேற்றமடைதல், நவீன அமைப்புகள் , இயற்கைக்கு எதிராக புதுமையான கண்டுபிடிப்புகள் எல்லாம் ஒருமித்தமாக இணைந்து இந்தப் புவியோடு மோதிக்கொள்வது மட்டுமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புவியை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. புவியின் அழிவைப் பற்றி அறிக்கை விடுக்கும் உலக விஞ்ஞானிகள் அதற்குரிய பாதுகாப்பு முறைகளை செயலாக்கத்தில் கொண்டு வருவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காமலிருப்பது மிகவும் சிந்தனைக்குரியது. கையிலிருப்பதை  விட்டுவிட்டு வேற்றுக் கிரகத்துக்கு குடியேற முடியுமா என்ற ஆராய்ச்சிகளில் முனைந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் சற்று நிதானித்து செயல்பட்டால் தாம் பிறந்த இந்த அன்னை பூமியை நிச்சயமாக காப்பாற்ற முடியுமல்லவா? எதற்காக இந்தத் தயக்கம், இந்த அன்னை மடியில் தவழுகிற நம்மைப்போன்ற மக்கள் தான் துரிதமாக செயல்பட வேண்டும். வாருங்கள்! சிந்திப்போம்!! செயல்படுவோம்!!

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.