
கவன
வாழ்க்கையை ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழியின் வாயிலாக நமது
முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றனர். பகவத்கீதையில் கிருஷ்ணன் “மக்கள்
தங்களுடைய வேலைகளை முழு அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்..
இந்த ஈடுபாடு படிப்படியாக முழுமைக்கு கொண்டு செல்லும். இதுதான் சுயதர்மம்
என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான வழியாகும். முழுமை
அடைவதுதான் சரியான ஒன்று என்றாலும் அதை அடைவதில் சிரமமும் இருக்கிறது.
எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒவ்வொருவரும் வேலையில் நேர்மையாகவும்,
ஈடுபாட்டுடனும் இருக்க வேண்டும்.
மனதில்
சேர்ந்துள்ளவற்றை விட்டுவிட்டு, அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகுதான் விருப்பங்களை விலக்க முடியும். உலகியல் பொருட்களின் மீதுள்ள
பற்றுதலையும், ஆசைகளையும் விட்டு விடவும் ஒருவர் கற்றுக் கொள்கிறார்.
தூய்மையான புரிதல் மனதை கட்டுப்படுத்தவும், பொருட்களின் மீதுள்ள மனப்பற்றுதல்
அலைபாயாமலிருக்கவும் உதவுகிறது. விருப்பு வெறுப்புகள்தான் மனதை ஆட்டிப்
படைத்துக் கொண்டிருக்கிறது. இதனை விரும்பாத அனைத்து மனிதர்களையும், சமமாக
பாவிக்கும் மனத்திறமையை உறுதிப்படுத்துகிறது” என்று அர்ச்சுணனுக்கு பாரதப்
போரின் போது உபதேசிக்கிறார்.
வேலைகளில்
முழு அர்ப்பணிப்பும், ஈடுபாடும் ஒருவருக்கு எப்பொழுது வரும்? அலைபாயும்
எண்ணங்களை நீடிக்க விடாமல் வேலைகளில் கவனத்தை செலுத்தும் போதுதான் ஒருவருக்கு
அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவ்வேலைகளில் வரும். ஆகவே அர்ச்சுணனுக்கு கவன
வாழ்க்கை அல்லது விழிப்புணர்வு வாழ்க்கையைப் பற்றித்தான் கிருஷ்ணன்
எடுத்துரைக்கிறார்.
"மனதில்
சேர்ந்துள்ளவற்றை விட்டுவிட வேண்டும்." என்கிறார். ஏற்கனவே மேலே
குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது, கவனமுடன் வேலை செய்யும் போது மன அழுத்த
எண்ணங்கள் வெளியேறி மன அழுத்தம் காணாமல் போய்விடுகின்றது. அதாவது, கவலை மனதை
விட்டு நீங்கி விடுகிறது. நோய்கள் குணமாகின்றன. ஆகவே, கிருஷ்ணன் அறிவுரை
கூறியதைப் போல, கவன வாழ்க்கையில் மனதை கட்டுப பாட்டுக்குள் வைத்திருக்க
முடியும்.
மகான் ஓஷோ,
உபநிடதங்களிலிருந்து கதை ஒன்றினைச் சொன்னார்.
சுவேதகேது படிப்பை முடித்துவிட்டுப் பெரிய அறிஞராகத் திரும்பி வந்தான்.
புத்திசாலி மாணவன். எல்லாவிதமான பரிசுகளும், பட்டங்களும் கெளரவங்களும்
பெற்றுத் திரும்பி வீடு வந்து சேர்ந்தான்.
அவனுடைய வயதான தந்தை உத்தாலக், அவனைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டார். "பிரமாதமான
அறிவோடு வந்திருக்கிறாய். ஆனால் அறிந்து கொள்ள வேண்டியவனை அறிந்திருக்கிறாயா?
ஏகப்பட்ட தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். உன்னுடைய மனதில்
இரவல் அறிவுதான் இருக்கிறது. ஆனால் உணர்வு என்பது என்ன? நீ யார் என்பது
உனக்குத் தெரியுமா?"
சுவேதகேது ‘இந்தக் கேள்வியை யாரும் எங்கேயும் எழுப்பவில்லையே! வேதங்களைப்
படித்திருக்கிறேன்! மொழியைக் கற்றிருக்கிறேன்! தத்துவம், கவிதை, இலக்கியம்,
சரித்திரம், பூகோளம் ஆகிய அனைத்தையும் கற்றிருக்கிறேன்! ஆனால் இதை யாரும்
சொல்லித் தரவில்லையே! வினோதமான கேள்வியைக் கேட்கிறீர்கள். என்னிடம் யாரும்
இந்த கேள்வியைக் கேட்டதே இல்லை. பாடத் திட்டத்தில் இல்லாத கேள்வியைக்
கேட்கிறீர்கள்.".
உத்தாலக், ‘சரி, அப்படியானால் ஒன்று செய். இரண்டு வாரங்கள் உபவாசம் இரு. பிறகு
நான் வேறு கேள்வி கேட்கிறேன்’ என்றார்.
எந்த ஒரு இளைஞனும் தன் அறிவைக் காட்டத்தானே முனைவான். அப்படியேதான்
சுவேதகேதுவும் "தந்தைக்கு மகனை அறிவாளியாகக் கண்டால் மகிழ்ச்சியாகத்தானே
இருக்கும்! என்னதான் தந்தை இரண்டு வாரங்கள் உபவாசம் இரு. பொறு!" என்று
சொல்லியிருந்தாலும், அவன் கடவுளைப் பற்றியும் பரத்துவத்தைப் பற்றியும் பேசுவதை
நிறுத்தவில்லை. பிரம்மனைப் பற்றிப் பேசித் தீர்த்தான்.
இரண்டு நாட்கள் கழிந்தன. நான்காவது நாள் தந்தை மகனிடம், "பிரம்மம் என்பது
என்ன?" என்று கேட்டார். முதலில் என்னவோ பதில் சொன்னான். தான் மனப்பாடம்
செய்ததை ஒப்பிவித்தான். ஆனால் வாரக் கடைசியில் சோர்ந்து போனான்.
சரியான பசி! எனவே பிரம்மம் என்றால் என்ன என்று தந்தை கேட்டபோது அவன்,
‘இதெல்லாம் அப்புறம். எனக்குச் சரியான பசி. சாப்பாட்டைப் பற்றியேதான் சதா
நினைவு இருக்கிறது. நீங்களோப் பிரம்மனைப் பற்றிக் கேட்கிறீர்கள்.
இப்போதைக்குச் சாப்பாடே பிரம்மன்,’ என்றான்.
"அப்படியானால் உன்னுடைய அறிவெல்லாம் உனக்குக் கிடைத்ததற்குக் காரணம் நீ
பசியில்லாமல் இருந்து விட்டதுதான். உன்னைக் கவனித்துக் கொண்டார்கள்.
நேரத்துக்குச் சாப்பாடு போட்டார்கள். எனவே பெரிய தத்துவங்கள் பற்றிப் பேசுவது
சுலபமாக இருந்தது. இப்போது உண்மையான கேள்வி. உன்னுடைய அறிவை எல்லாம் திரட்டிப்
பதில் சொல்" என்றார் தந்தை..
"எனக்கு எல்லாம் மறந்து போய் விட்டது. என்னை இப்போது பிடித்து ஆட்டுவது பசி
மட்டும்தான். பசியினால் தூங்க முடியவில்லை. ஓய்வெடுக்க முடியவில்லை. என்னுடைய
வயிற்றில் தீ எரிகிறது. எரிந்து கொண்டிருக்கிறேன். வேறு எதுவும் எனக்கு
இப்போது தெரியாது. படித்ததையெல்லாம் மறந்து போனேன்." என்றான் சுவேதகேது.
"மகனே! உணவே இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. உணவே பிரம்மன்!"
ஆகவே உணவே இறைவன்! இறைவனே உணவு!
உணவுதான் இறைவன் என்று உபநிடத்து இறைவனை அடையாளம் காட்டுகிறதென்றால், தமிழன்
இறைவனுக்கு இறைவனை அடையாளம் காட்டுகிறான்! உணவை தருவது எது? உழைப்பு!
உழைப்பில்லாவிட்டால் உணவேது? உழைப்பைத்தான் "செய்யும் தொழிலே தெய்வம்" என்று
இறைவனுக்கு இறைவனை அடையாளம் காட்டிச் சென்றான் கி.மு. காலத்துத் தமிழன்.
உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்க்காக உழைப்பை தெய்வமாக நமது
முன்னோர்கள் சொன்னார்களா அல்லது உழைப்பிற்கும் தெய்வத்திற்கும் நேரடி தொடர்பு
உண்டா என்பதை சிறிது ஆராய்வோம்.
கவனமாக வேலையைச் செய்யும் பொழுது, வேலையை எடுத்துக் கொண்டு மேல்மனம் உள்
நோக்கிப் பயணமாகிறது. அப்படி பயணமாகும் போது, வழியில் பயணத்தை வழிமறிக்கும்
மன அழுத்தங்களை (நோய்க்குரிய மன அழுத்தம், பயம், பதட்டம், கோபம், பொறாமை,
வெறுப்பு முதலிய உணர்ச்சிகளால் ஏற்படும் மன அழுத்தங்கள்) எண்ணங்களாக
வெளியேற்றிக் கொண்டே வேகமாக கீழ் நோக்கிப் பயணமாகிறது (காற்றைக் கிழித்துக்
கொண்டு செல்லும் அம்பைப் போல) ஆழ்மனதை வந்தடையும் மேல்மனமானது தான் சுமந்து
வந்திருக்கும் வேலையுடன் ஆழ்மனதுடன் ஐக்கியமாகிறது. ஆழ்மனம் இவ்வண்டத்தின்
விரிவாக்கம்தான். அதாவது மனமும் அண்டமும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒன்றே.
அண்டமும் இறைவனும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒன்றே.
இரண்டும் இணையும் பொழுது அதிசயம் ஒன்று நிகழ்கிறது. செய்யும் வேலை, ஆற்றலைப்
பெற்று நுணுக்கமடைகிறது. வேலை செய்பவன், அபரிதமான ஆற்றலைப் பெற்ற இணைந்த
மனத்தினை மேல் மனமாகப் பெறுகிறான். ஆகவே கவனமுடன் ஒருவன் வேலை செய்யும் பொழுது
அவன் இறைவனுடன் ஐக்கியமாகிறான்; அபரிதமான ஆற்றலைப் பெறுகிறான்; அவன் செய்யும்
வேலையும் நுணுக்கமடைந்து சிறப்படைகிறது; வேலையில் அவன் சிறந்த அனுபவம்
அடைகிறான். மன அழுத்தங்கள் வெளியேற்றப்பட்டு மனக்கவலைகளிலிருந்தும்,
நோய்களிலிருந்தும் குணம் பெறுகிறான்.
"செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பேருண்மையை அறிந்து, கவன வாழ்க்கை வாழ்ந்து,
அத் தெய்வப் பழமொழியை தனது சந்ததியர்க்கு விட்டுச் சென்ற நமது முன்னோர்களுக்கு
நாம் தலை வணங்குவோம்! அவர்கள் வாழ்ந்த கவன வாழ்க்கையை நாமும் வாழ்வோம்!

ஆர்.ஏ.பரமன்
(அரோமணி) அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க
