........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-56

இயற்கை உணர்த்தும் பாடம்

                                                                                                -சந்தியா கிரிதர்.

வெளிச்சமும், இருளும் கலந்த அந்தி வேளை பூமியை மிதமாக, மென்மையாக ஆலிங்கணம் செய்கிறது. தரணியை எப்போது தழுவிக் கொள்வோமென்று வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருக்கும் அந்திப் பொழுது, நேரம் போகப்போக வெண்ணிற கருமை பூமியை கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொள்கிறது. நேரம் செல்லுகையில் பிரம்மராட்சசனைப் போல கும்மிருட்டு பூமியைத் தன்னுடைய பிடிக்குள் அடக்கிக் கொண்டு, உயிரினங்களுக்கு பயம் கலந்த அனுபவத்தை நிசப்தமாகக் கொடுக்கிறது. ஆனால் மின்சாரக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கின் மங்கலான வெளிச்சத்திலிருந்து தொடருகிற ஏதோவொரு அமானுஷ்ய சக்தியொன்று நமக்குள்ளே ஒருவித திகிலைக் கிளப்புகிறது. சலனமற்ற இரவுப் பொழுதினுடைய நிசப்தமும், திகிலும் சொல்லாத கதைகளை சுமந்து கொண்டு நம்மோடு நடை போடுகிறது. இதுபோல எத்தனை இரவுகள் கழிந்திருக்கக் கூடும், எத்தனை ஸ்வப்னங்கள் பார்த்திருக்கக் கூடும், எத்தனை கதைகள் கேட்டிருக்கக் கூடும். இந்த கும்மிருட்டு ஆழ்ந்த நித்திரையினுடைய சுகத்தை உணர வைத்து, இரவுப் பொழுதினுடைய சலனமில்லாத அமைதியின் மகத்துவத்தை தரணிக்கு புரிய வைப்பதற்காகவே படர்ந்து கொள்கிறது.

நட்சித்திரம் நிரம்பிய வானம், குளுமையைப் பொழியும் சந்திரனென்று ரம்மியமான சூழ்நிலை நம்முடைய மனதை நெருடிவிட்டு சென்றாலும் மீண்டுமொரு விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கும் இரவுப் பொழுது கனவுகளை ஏந்திக் கொண்டு, வருகின்ற அதிகாலையை இன்முகத்தோடு வரவேற்கிறது. இரவுக்கு பின் தொடருகிறது அதிகாலைப் பொழுது. பிரம்மராட்சசனுடைய கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு, கும்மிருட்டு பூமியைவிட்டு நகருகையில், அதிகாலையில் நீராடி விட்டு, மனையுடையாள் மஞ்சள் பூசிக் கொண்ட மேனியோடு மங்களகரமாக காட்சி தருவதைப் போல, பொன்னிற ஆடையை உடுத்திக் கொண்டு வானம் ஜொலிஜொலிக்கும் தங்கத்தைப் போல பொன்மயமான பிரகாசத்தால் தரணியை குதூகலமாக அலங்கரிக்கிறது. மலை, கடல், சமுத்திரம் இவைகளுக்கு அப்பாற்பட்டு மறைமுகமாகக் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த கதிரவன், தகதகவென்று மின்னுகிற அதிகாலைப் பொழுதின் பொன்னிற மேனியை தன்னுடைய இளங்கதிர்களால் அரவணைத்துக் கொள்ள, வெட்கித்து நிற்கும் தரணி சிவப்பாக காட்சி தருகிறாள். தரணியினுடைய வெட்கம் தரணிக்கு மென்மேலும் மெருகூட்டுகிறது. அதிகாலையின் அதீத அழகை அதனுடைய விடியலில் பார்க்கிறோம். இது இயற்கைக்குரிய தனிப்பட்ட குணம். இந்தக் கூற்றை எவரேனும் மறுக்க முடியுமா?

புல்தரையின் மீது நடக்கும் போது கால்கள் பசுமையை உணருகிறது. அதனுடைய நுனிகளில் படந்திருக்கும் அதிகாலைப் பனித்துளிகளின் மீது சூரியகிரணங்கள் பட்டவுடன் நீர்த்துளிகளாகி புல்தரையை நனைக்கிறது. தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் மொத்த அழகையும் விடியல், திருமணத்தில் மணப்பெண்ணை தாரைவார்த்துக் கொடுப்பதைப் போல, இயற்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, இன்னும் இயற்கைக்கு மெருகு தீட்டி அதனுடைய அழகில் லயித்து நிற்கிறது. இயற்கையினுடைய சலசலப்பு, பறவைகளுடைய கானம், மிருதுவான தென்றல,; ரம்மியமான சூழ்நிலை புத்துணர்வைக் கொடுத்து, இந்த விடியல் தனக்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும் இனிய பொழுதை சுவைப்பதற்கான வாய்ப்பை உயிரினங்களுக்கு தவறாது கொடுக்கிறது.

அதிகாலைக்கு பிறகு மதியம் பிறக்கிறது. பகலவன் நெருப்பாக கொதிக்க, தரணி தணலாக சுடுகிறாள். மண்டையைப் பிளக்கும் வெய்யில், நிழலில் ஒதுங்கும் ஜந்துக்கள், தண்ணீரைத் தேடி அலையும் உயிரினங்கள், இளநீர், நுங்கு நிரம்பிய தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வியர்வைச் சொட்டசொட்ட, தொண்டை கிழிய கத்திக் கொண்டு விற்கும் வியாபாரிகள் ஆகியவைகள் கோடை காலத்துக்குரிய பாணியை அந்தந்த காலத்தில்தான் பார்த்து ரசிக்க முடிகிறது. உஷ்ணம் தாளாமல் உயிரினங்கள் அகால மரணமடைதல், நோயாளிகள் நிரம்பிய மருத்துவமனைகள் போன்றவைகளும் கோடைக்காலத்தின் சிறப்பு அம்சமாகும். அவ்வப்போது அதிர்வுகளை உணருகிற தரணி, வெடிக்கும் எரிமலை வாயிலிருந்து வழிந்தோடும் நெருப்புக்குழம்பு, அங்காங்கே தோன்றும் பிளவுகள் போன்ற எதிர்பார்த்திருக்காத சம்பவங்களும் நிகழ்கின்றன. பகலவனைப் பார்த்து வன்மத்தை கக்காதே என்று கெஞ்சும் தரணி, மழைத்துளிகளில் நனைந்து தன்னையே மறந்து ஆடும் சந்தோஷத்தை நினைத்து நினைத்து ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கிறாள்.

அதிகாலையின் அதீத அழகை அதனுடைய விடியலில் பார்க்கலாம், ஆதவனின் அதீத அழகை அதனுடைய உதயத்தில் பார்க்கலாம், மலர்களின் அதீத அழகை அதனுடைய இதழ்களில் பார்க்கலாம், மரங்களின் அதீத அழகை அதனுடைய கனிகளில் சுவைக்கலாம், மழையின் அதீத அழகை அதனுடைய சாரலில் பார்க்கலாம், சந்திரனின் அதீத அழகை அதனுடைய வெண்ணிறத்தில் பார்க்கலாம், வெய்யிலின் அதீத அழகை அதனுடைய வெப்பத்தில் பார்க்கலாம், குளிரின் அதீத அழகை அதனுடைய குளுமையில் பார்க்கலாம், மனிதனின் அதீத அழகை மனிதனுடைய உள்ளத்தில் பார்க்கலாம். சொல்லாதவற்றை சொல்ல வேண்டுமென்று துடிக்கும் இயற்கையின் பரிபாஷையை நாம் புரிந்து கொண்டு செயல்படுவோம்!

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.