........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

மனம் திறந்து-58

இந்து சமய (என்) நம்பிக்கைகள்!

                                                                                                -சந்தியா கிரிதர்.

நம்முடைய பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளில் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டையும் உணரலாம். இந்தியப் பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளுடைய சிறப்பை உணர்ந்த உலக மக்கள், அவைகளை மதித்து பின்பற்றுகிறார்கள். இத்தனை பெருமைகளைக் கொண்ட நம்முடைய பண்பாட்டையும், கலாசாரத்தையும் இந்த உலகமே வியந்து பாராட்டுகிறது. நம்முடைய பழக்க-வழக்கம், பண்பாடு, கலாசாரம் போன்றவைகள் எளிமையாகயிருந்தாலும், அவைகளனைத்தும் மனிதனுடைய அன்றாட வாழ்க்கையோடு என்றென்றும் இணைந்திருக்கின்றன. அவற்றுள் சில சிறப்பு அம்சங்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வணக்கம் சொல்லுங்க...

ஒருவரையொருவர் சந்திக்கும் போது அல்லது இல்லத்துக்கு வருகை தரும் வருகையாளரை இருகரங்கள் கூப்பி, உதடுகள் வணக்கம், நமஸ்காரம் அல்லது நமஸ்தேயென்று உச்சரித்தபடி வரவேற்கிறோம். இன்னொருவரைப் பார்த்து நமஸ்காரமென்று சொல்லும் போது இருவருடைய உள்ளங்களும், உணர்வுகளும் சந்தித்துக் கொள்கின்றன. இப்படிப்பட்ட ஆழ்ந்த பொருளடக்கத்தை கொண்ட வார்த்தைகளான வணக்கம் அல்லது நமஸ்தே போன்றவைகளை உச்சரிக்கும் போது நமக்குள்ளே பக்தி கூடிய சக்தியும் பிறக்கிறது. தலைகுனிந்து, இருகரங்கள் கூப்பி நமஸ்காரமென்று சொல்லி வருகையாளரை வரவேற்பு செய்யும் பாணியில் அன்பு, மனிதநேயம் நிறைந்திருக்கிறது. வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே போன்ற சொற்களை உச்சரிக்கும் போது நமக்குள்ளே சக்தி பிறக்கிறது, பக்தி பெருகுகிறது, தன்னம்பிக்கை வளருகிறது.

அரசமரம் சுற்றலாமா?

ஸ்ரீமத் பாகவதம் அரசமரத்தின் பெருமைகளைப் பற்றி வெகு அழகாக எடுத்துரைக்கிறது. மரங்களுக்குள்ளே அரசமரம்; மிகவும் புனிதமான மரமென்று கிருஷ்ணபரமாத்மா கீதையில் போதிக்கிறார். தினமும் அரசமரத்தை பூஜிப்பவர்களுடைய வாழ்க்கையில் என்றென்றும் சந்தோஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அரசமரம், மகாவிஷ்ணுவினுடைய இருப்பிடமென்று புராணங்கள் குறிப்பிடுகிறது. அரசமரத்தினுடைய வேரில் மகாவிஷ்ணு வாசம் செய்வதாகவும், அடிமரத்தில் கிருஷ்ணபரமாத்மா குடியிருப்பதாகவும், அதனுடைய கிளைகளில் நாராயணர் வாசம் புரிவதாகவும், அரசமரத்தினுடைய இலைகளில் ஹரி குடிகொண்டிருப்பதாகவும், அரசமரத்தினுடைய பழங்களில் அனைத்து தேவர்களும் குடியிருப்பதாக ஸ்கந்த புராணம் சொல்லுகிறது.

ஜபமாலை அவசியமா?

முன்காலத்து முனிவர்கள், ரிஷிகள், சாதுக்கள் ஆகியோர்களை அடையாளப்படுத்தும் போது, கைகளில் ஜபமாலை, உதடுகள் பகவானை உச்சரித்தபடியே தியானத்தில் அமர்ந்த வண்ணமாக புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். ஜபமாலை பல வகைகளைக் கொண்டது. தாமரைவிதைகளாலான ஜபமாலையை வைத்துள்ள இல்லத்தில் என்றென்றும் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. சிவப்பு ரத்தினக்கற்களாலான ஜபமாலை செல்வத்தை பெருக்குகிறது, ருத்திராக்ஷ மாலை பயத்தை அகற்றி, நோய் நொடியில்லாத நீண்ட ஆயுளைத் தருகிறது, ஹரித்ரா ஜபமாலை தடைகளைப் நீக்கி, காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது. சின்னசின்ன சங்குகள், துளசி போன்றவைகளால் செய்யப்பட்ட ஜபமாலை மகாவிஷ்ணு கூடவேயிருப்பதாக உணர்வைக் கொடுக்கிறது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற ஜபமாலைகள் நம்முடைய சாஸ்திரத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

தீபமேற்றுவது சரியா?

இல்லத்தில் தீபங்களை ஏற்றி கடவுளை வணங்குவது பாரத நாட்டினுடைய பாரம்பரிய வழக்கமாகும். கடவுளுடைய சன்னதியில் குத்து விளக்கேற்றி கண்களை மூடி தியானம் செய்யும் போது அந்த தீபமானது நம்முடைய மனதில் இருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றுகிறது,  பிரகாசத்தை கொடுக்கிறது, அறிவை வளர்க்கிறது. மனதில் நினைத்த காரியம் கைகூடுவதற்கு மக்கள் நெய்தீபமேற்றி பகவானை பிரார்த்தனை செய்கிறார்கள். தீபமேற்றி இருகரங்களைக் குவித்து பகவானை பிரார்த்தனை செய்யும் போது எல்லா வினைகளும் அகன்று இல்லம் சுபிட்சம் பெறுகிறது.

மந்திரம் சொல்வதால் பலனா?

இந்து சமய வழிபாட்டில் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் சில மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ஒவ்வொரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு ஓம் என்று சொல்லிக் கொண்டு உச்சரிப்பது நல்லது. அப்படியே மந்திரங்களை தவறுதலாக உச்சரித்தாலும் ஓம் என்கிற வார்த்தை இந்தப் பிழையை சரி செய்து அருள் புரிகிறது. ஓம் என்று சொல்லிக் கொண்டு செய்யப்படுகிற காரியம் நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரிக்கும் போது நமக்குள்ளே ஒரு சக்தி பிறக்கிறது, மனம் அமைதி அடைகிறது, அறிவு தெளிவு பெறுகிறது. ஓம் என்கிற உச்சரிப்போடு தொடங்குகிற ஒவ்வொரு காரியமும் வெற்றியோடு முடிவடைகிறது.

விநாயகர் வழிபாடு

ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வேண்டிக் கொள்வது நம்முடைய பண்பாடு என்று சொல்லலாம். நல்ல காரியங்கள் விக்னமில்லாமல் நிகழ்வதற்கு விநாயகரை துதிக்கிறோம். விநாயகருடைய கிருபையோடு தொடக்கம் பெற்ற ஒவ்வொரு செயலும் வெற்றியோடு முடிகிறது. கடவுளுக்குள் விநாயகரை முதலாவதாக வேண்டிக் கொள்கிறோம், இந்து சமயக் கோயில்களில் விநாயகர் சன்னதி முதலாவதாக இடம் பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

திருநீறு ஏன்?

இந்து சமயக் கொள்கைகளில் ஒன்றாக கெட்டவை அகன்று நல்லவை நடப்பதற்குக் கோயில்களில் ஹோமங்கள் நிகழ்த்தப்படுகிறது. ஹோமகுண்டத்தில் அக்னி வளர்த்து சந்தனம், நெய், நவதானியங்கள் ஆகியவற்றை அக்னிபகவானுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அனைத்தும் எரிந்து திருநீறாகிறது. நம்முடைய இதயத்தில் நல்ல எண்ணங்கள் உதிப்பதற்கு, நெற்றியில் திறுநீற்றை இட்டுக் கொள்கிறோம். திருநீறு என்ற வார்த்தை மனிதனுக்கு வாழ்க்கையின் சாரத்தை உணர்த்துகிறது. பிறப்பும், இறப்பும் கலந்தது மனிதனுடைய வாழ்க்கை, இறப்புக்கு பிறகு அவனுடைய உடல் அழிகிறது, அக்னிக்கு (நெருப்புக்கு) இரையாகிறது, சாம்பலாகிறது. மனிதனின் யதார்த்த வாழ்க்கைத் தத்துவத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்கு தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்கிறோம்.

துளசிச் செடி

முன்காலத்தில் ஒவ்வொருடைய வீட்டுப் பின்புறத்தில் துளசிமாடம் இடம் பெற்றிருப்பதைப் பார்த்திருக்கலாம். துளசிச் செடியிருக்கிற இல்லத்தில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன. பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு துளசி தேவியை வணங்கிவிட்டு தொடங்கினால் அந்தப் பணயம் தடங்கலின்றி சுமூகமாக செல்லுகிறது. மருத்துவகுணம் கொண்ட துளசிசெடியை தூயமனதோடு பிரார்த்தனை செய்தால் நினைத்துக் கொண்ட காரியம் நிறைவேறுகிறது.

மணி அடிப்பது...ஏன்?

கோயிலில் பகவானை பிரார்த்தனை செய்வதற்கு முன்பு அவருடைய சன்னதியிலிருக்கும் மணியை அடித்துவிட்டு பகவானை வேண்டுகிறோம். பகவானை எழுப்பவதற்காக மணி அடிப்பதில்லை, நமக்குள்ளேயிருக்கிற நல்லெண்ணங்களை தட்டியெழுப்பி, மனதை கடவுளிடம் ஒருநிலைப்படுத்தி தூய உள்ளத்தோடு பிறருக்காக நாம் செய்கிற பிரார்த்தனைகள் அவருடைய சன்னதியில் நிறைவேற்றப்படுகின்றன. மேலும் கோயில் மணியின் ஒலியும் நம்முடைய காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கிறதல்லவா?

உருவ வழிபாடு?

விக்கிரகங்கள், மூர்த்திகள் ஆகியவைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, இறைவனை அடைவதற்கு இதனை ஒரு மார்க்கமாக பயன்படுத்துகிறோம். கடவுளைப் பிரார்த்தனை செய்யும் போது நம்முடைய மனதையும், மூளையையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளே அடக்குகிறோம், அலங்காரத்தோடு காட்சி தருகிற மூர்த்தியைக் கண்குளிரப் பார்த்து ரசிக்கிறோம், அவரோடு மனம்விட்டு பேசுகிறோம், நம்முடைய குறைகளை சொல்லி அழுகிறோம், அதற்கு வேண்டிய நிவர்த்தனையும் பெற்றுக் கொள்கிறோம். விக்கிரகத்தை ஒரு மார்க்கமாக வைத்துக் கொண்டு இறைவனை அடைய முற்படுகிறோம், இந்த முயற்சி நமக்குள்ளே தூய்மையான பக்தியை வளர்க்கிறது.

-இப்படி இந்து சமயக் கொள்கைகளின் நடைமுறைகள் பல நம் வாழ்க்கையில் அர்த்தமுள்ள விசயங்களை நமக்கு உணர்த்துகிறது. இந்த உணர்தலைப் பலர் புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். அவர்கள் நம் சமயப் பண்பாட்டை உணர்ந்து அவற்றைக் கடைப்பிடித்து நல்நிலை அடைய வேண்டுகிறேன்.

(இந்த செயலுக்கு / நம்பிக்கைகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான கருத்துக்களை படைப்பாளர் சந்தியா கிரிதர் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். விஞ்ஞானப்பூர்வமான கருத்துக்களை அவர் அளிப்பாரா? -ஆசிரியர்)

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு