........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

மனம் திறந்து-60

பாதகமில்லாத பால்ய நட்பு!

                                                                                                -சந்தியா கிரிதர்.

நட்பு என்பது வாழ்வின் அஸ்திவாரம், உணர்வுகளின் எல்லை, மனிதனுடைய உயிரோட்டம். நட்பின் சிறப்பை எவ்வளவுதான் விவரித்த போதிலும், இந்தப் புத்தகத்தைப் புரட்டிப்புரட்டி வாசித்தாலும் அலுக்கவில்லை, இந்தத் தோழமையின் தேனைச் சுவைக்கச் சுவைக்க சலிக்கவில்லை. பால்ய பருவம், தாய்மடி கதகதப்பை உணர்ந்திருக்கிறது, தந்தைஅரவணைப்பை உணர்ந்திருக்கிறது, உடன்பிறப்புகளின் பாசத்தை உணர்ந்திருக்கிறது. இவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனுடைய முதற்படிகட்டு.

பெற்றோர்களின் கைப்பற்றி நடக்கக் கற்றுக் கொண்ட நாள் முதல் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை பால்ய சகாக்கள் நிரம்பிய வாழ்க்கையோடு தொடங்குகிறது. பால்ய நண்பர்களோடு தொடக்கம் பெற்ற வாழ்க்கை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நண்பர்களைப் பெற்றிருந்தாலும், எப்போதும் நிழல் போல தொடருகிற இந்த பால்ய சினேகிதர்களை நம்மால் மறக்க முடியாது. அந்த நினைப்பு நமக்கு அவர்களோடு இணைந்திருப்பதைப் போன்றதொரு உணர்வைக் கொடுக்கிறது. எத்தனை காலங்கள் கடந்து சென்ற போதிலும், பால்ய சினேதிர்களுடைய முகம், பெயர், நினைவுகள் அனைத்தையும் மறக்க முடியுமா?

கமர்கட்டை காக்காக் கடி கடித்து பங்கிட்டுக் கொண்டதும், பகைமை அறியாது விளையாடிய விளையாட்டுக்கள், காய் விடுவதும், பழம் விடுவதும், கோபித்துக் கொண்டு பேசாமலிருந்த நாட்களில் சினேகிதனை நினைத்து நினைத்துப் பரிதவித்ததும், இது போன்ற பசுமை நிறைந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கையில் மனம் பூவாக மலருகிறது, பரவசமென்கிற நறுமணம் நிரம்பிய நம்முடைய வாழ்க்கை சந்தோஷத்தில் திளைக்கிறது. மனம் சஞ்சலமடையும் போது, நாம் வாழ்க்கையை பின்னோக்கி அழைத்துச் செல்லுகிறோம். பால்ய நண்பர்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். பால்ய பருவத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நினைத்துச் சுவைக்கிறோம். இந்தப் பழைய ஞாபகங்கள் நமக்கு எவ்வளவு சுகத்தைக் கொடுக்கிறது... இந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் போதாது.

பால்ய நட்பு பணம், பதவி ஆகிய எதிர்பார்ப்புகளோடு உருவாகியதில்லை, அப்படி உருவாகியிருந்தால் அந்த நட்பு நிலைத்திருக்காது. பிரியத்திலிருந்தும், அன்பிலிருந்தும் உருவாகிற இந்த பால்ய நட்பை சுவைக்காதவர்கள் வாழ்க்கையில் இழந்தவைகள் அதிகம். இது ஒரு உன்னதமான நட்பு, பிரியத்திலிருந்து பிறப்பெடுத்த இந்த பால்ய நட்பு மட்டும்தான் நம்மோடு என்றென்றும் நிழல் போல தொடருகிறது. மற்றவை ரயில் சினேகிதத்தைப் போல தோன்றி மறைந்து விடுகிறது.

பால்ய நட்பை தாய்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் எது எதை விடப் பெரிது என்று சொல்ல முடியவில்லையென்று ஒரு கவிஞர் பால்ய நட்பின் உயரிய குணங்களை அழகாக எடுத்துரைக்கிறார். நல்ல நண்பர்கள் பெற்ற மனிதனுடைய வாழ்க்கையில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, அவைகளுடைய வாசம் வாழ்க்கையை மணக்கச் செய்கிறது. உலகம் கைக்குள்ளிருப்பதைப் போன்றதொரு உணர்வைக் கொடுக்கிறது.

வாழ்க்கையில் அனைத்தையும் பெற்று விட்டதாகரு நினைப்பைத் தருகிறது. சந்தோஷத்தையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். துக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். நட்பு மட்டும் தான் நம்முடைய உணர்வுகளுக்கு ஒரு வடிகால். நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது. உறவுகள் எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு பிரிந்து செல்லும், காதல் என்பது விருந்தினரைப் போல எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லுகிறது. நட்பு ஒன்றுதான் நம்மோடு சங்கிலியைப் போல பிணைத்துக் கொள்ளுகிறது. நம்முடைய வாழ்க்கையின் திறவுகோளாக பிறப்பெடுத்திருக்கிறது. தக்க சமயத்தில் பிறருக்கு உதவிகளைப் புரிகிற மனிதன் உயர்ந்த குணங்களைக் கொண்டவன். இதுதான் தோழமையுணர்வு, இந்த உணர்வில்லாத மனிதன் கல்நெஞ்சம் படைத்தவன்.  

சந்தியா கிரிதர் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு