........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

மனம் திறந்து-62

கற்பனையைத் துரத்திக் கவனமாக இருங்கள்!

                                                                                                -ஆர். ஏ. பரமன் (அரோமணி).

கற்பனை என்பது என்ன என்பதை முதலில் ஆராய்வோம். எண்ணங்கள் உற்பத்தியாவது தானாகவே நடைபெறுகிறது! உறவுகளில் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பார்க்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகியவற்றைச் சம்பந்தப்படுத்தி உடனே கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர் காலங்களை இணைத்து எண்ணங்கள் தோன்றுகின்றன. சில வாசனைகளை நுகரும் போதும், சில பாடல்களைக் கேட்கும் போதும் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங்களில் சில அவசியமானதாகவும், சில அவசியமில்லாமலும், சில அநுபவத்தை தருபவையாகவும், சில உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவும் இருக்கலாம். அந்த எண்ணங்களை நாம் நினைத்தால் நீடிக்க விடாமல் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை மற்றும் அதற்குறிய ஆற்றலை மட்டும் இறைவன் மனிதவர்க்கத்திற்குக் கொடுத்திருக்கிறான்.

ஆனால் நாம் அதனைப் பயன்படுத்தாமல், உற்பத்தியாகும் எண்ணங்களை நீடிக்கவிட்டு அதன் வாயிலாக வேறு பல எண்ணங்களை உற்பத்தி செய்ய வைத்து, கோபம், பயம், பதட்டம், பொறாமை, வெறுப்பு, திருட்டுக் குணம், போதைக்கும் அடிமையாகும் குணம், காமவெறி, கொலை வெறி மற்றும் அனைத்து எதிர்மறைக் குணங்களும் நமது மனதினை ஆக்கிரமிக்க இடம் கொடுக்கிறோம். ஆக்கிரமித்த அந்த குணங்கள் நமது நாடி நரம்பு,மற்றும் சதை, எலும்புகளை சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுகின்றன. நோய்களின் ஆட்சிக்கு நமது உடல் உட்படுத்தப்படுகிறது. வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படுகிறது. சொல்லொண்ணாத துயரத்திற்குள்ளாகிறோம். துயரங்களை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் இந்த உலகில் தங்களுக்குள்ள கணக்கை முடித்துக் கொள்கிறார்கள். கற்பனை வாழ்வில் தினம் தினம் செத்துப் பிழைக்கிறான்.

ஒருவர், கற்பனையில் அழகான அறிவான குணவதியான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். வீரதீரம் மற்றும் அறிவு நிறைந்த அழகான ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். பல கிரவுண்டுகளின் மையத்தில் ஒரு அழகிய பங்களாவைக் கட்டி ஆடம்பரமாக கிரகப்பிரவேசம் நடத்திவிடலாம். விலை உயர்ந்த காரில் வந்து குடும்பத்துடன் கலகலப்பாக மகிழ்ச்சியுடன் இறங்கலாம். சாதனைகள் புரிந்து குடியரசுத் தலைவரிடம் பரிசுகள் பல பெறலாம். இவ்வளவும் ஒரு சில நிமிடங்களில் கற்பனையில் கிடைத்துவிடும்.

ஆனால் உண்மை நிலை என்ன! ஒரு சிறிய வீட்டைக் கட்டுவதற்குப் பல வருடங்கள் ஆகலாம். வீடு கட்ட முடியாமலும் போகலாம். திருமணம் நடைபெறலாம். ஆனால் கனவுக் கன்னியுடன் அல்ல. குழந்தைகள் பிறக்கலாம். ஆனால் நினைத்தபடி அல்ல. ஆண், பெண் குழந்தைகளாக இல்லாமல் ஆண் குழந்தைகளாகவே பிறக்கலாம் அல்லது பெண் குழந்தைகளாகப் பிறக்கலாம். பிறக்கும் குழந்தைகளில் உடல்நலக் குறைவுடன் பிறக்கலாம். குழந்தைகள் பிறக்காமல் கூடப் போய் விடலாம்.

கற்பனையால் ஏற்படும் சீரழிவுகள் பல இருக்கின்றன. ஒவ்வொன்றும் புதுவிதமாக இருக்கின்றன.

விரகன் ஏழ்மையால் மிகவும் துன்பத்திற்குள்ளாகியிருந்தான். சாப்பாட்டிற்கே வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவெடுத்தான். மலை உச்சியை நோக்கி நடந்தான். உச்சியை நெருங்குவதற்கு முன்பு ஒரு குகையைப் பார்த்தான். அந்த குகைக்குள் மெதுவாக நுழைந்து எட்டி உள்ளே பார்த்தான். அங்கே முனிவர் ஒருவர் அப்பொழுதுதான் மனப்பயிற்சியை (தவத்தை) முடித்துவிட்டு எழுந்திருப்பதைப் பார்த்தான். இவனை அவர் பார்த்து விட்டார்.

வறுமையால் வாடுவதாகவும், சாவதற்கு மலை உச்சிக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் முனிவரிடம் சொன்னான். அவனுடைய கொடுமையான வறுமைதான் அவனைத் தற்கொலை செய்யும் முடிவுக்குத் தூண்டியிருக்கிறது என்பதை முனிவர் புரிந்து அவனுக்காக இரக்கம் கொண்டார்.

நீ சாக வேண்டாம்! இங்கிருந்து மலை உச்சிக்குப் போகும் சிறிது தூரத்தில் ஒரு ஆல மரம் ஒன்று இருக்கும். அதுக்குப் பக்கத்தில கருவேல மரம் இருக்கும். அந்த மரத்துக்குக் கீழே பூமியை தோண்டு. இரண்டு பொற்காசுகள் நிரம்பிய மண் குடங்கள் இருக்கும். அதில ஒன்றை எடுத்துப் போய் மகிழ்ச்சியா வாழ்க்கையை நடத்து! என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன மாதிரியே கருவேல மரத்துக்கடியில் இரண்டு பொற்காசுகள் நிரம்பிய மண் குடங்கள் இருப்ப்தைக் கண்டவுடன் வியப்பில் ஆழ்ந்து கண்களை மூடினான். விரகனின் மனதில் எண்ணோட்டம் வேகமாக ஓடியது ஒரு பொற்காசுப் பானையைத்தானே முனிவர் எடுத்துக் கொள்ளச் சொன்னார்!.........ஒரு பானைக் காசை வைத்து நூறு ஏக்கர் நிலம் வாங்கி ஒரு பெரிய வீடும் கட்டலாம்! இரண்டையும் எடுத்துட்டுப் போனால் இன்னும் ஒரு நூறு ஏக்கர் வாங்கி ஐந்து பிள்ளைகளுக்கும் ஐந்து வீடுகள் கட்டி விட்டிடலாம் கண்களைத் திறந்த விரகன் இரண்டு பானைகளையும் எடுத்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அவன் செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவனிடமிருந்த இரண்டு பொற்காசுப் பானைகளையும் பிடுங்கிச் சென்று விட்டனர். விரகன் மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் மீண்டும் முனிவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ஆனால் பிடுங்கி சென்றது இரண்டு பானைகள் என்பதை மறைத்து ஒரு பானை என்று சொல்கிறான். அதற்கு முனிவர் அதனாலென்ன! அங்குதான் இன்னொரு பானை இருக்குமே... அதை எடுத்துக் கொள்! போய் வா! என்றார். விரகன் ஒன்றும் பேசாமல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு குகையை விட்டு வெளியேறினான்.

விரகன், தனது மனதில் ஓடும் எண்ண ஓட்டத்தை தடுத்து நிறுத்தாததால், பல தவறுகளைச் செய்கிறான். முதல் தவறாக முனிவர் கொடுத்த வரத்தை மீறுகிறான்; அதனால் அவரின் நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாகிறான். இரண்டாவதாக ஆசை பேராசையாக மாறுகிறது. மூன்றாவதாக முனிவரிடம், தான் எடுத்துச் சென்றது ஒரு குடம்தான் என்று பொய்யும் சொல்கிறான். இவ்வாறு விரகன் செய்த கற்பனை, அவனின் அழிவிற்கு காரணமாகி விடுகிறது.

முருகன் மனதில் தன் நண்பன் உயிருக்குப் போராடிய காட்சி மனக்கண்ணை விட்டு அகலவேயில்லை. அயோக்கிய பய.... என்று சொல்லிக் கொண்டே பற்களை நர நரவென்று கடித்தான். தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த படத்தில் அவனால் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. அவன் நண்பன் பரமசிவம் பற்களை நர நரன்னு கடிச்சியே! இன்னும் மறக்கலையா! மறக்கனுமுனுதானே படத்துக்கு கூப்பிட்டு வந்தேன். படத்தையே பார்க்கலையா? என்று கேட்டான். எப்படிடா மறக்கிறது! எவ்வளவு நேரம் கெஞ்சினோம் தெரியுமா! எங்க வேண்டுதலை நிறைவேத்தியிருந்தா என் நண்பன் உயிரை காப்பாத்தியிருப்போம். என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதான். பரமசிவம் அவன் தோல்களைக் கட்டிக் கொண்டு என்னடா பொம்பளை மாதிரி அழுதுகிட்டு! படத்தைப் பாரு! பாதுகாப்பு வளையத்தில இருக்கிற ஆனந்தராஜை எப்படி நம்ம கேப்டன் வெளியேத்தி அடிக்கிறார் பாரு! என்று கவலையில இருக்கிற நண்பனுக்கு அவனுடைய கவனத்தைத் திருப்பும்படியான ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான். அழுததால் மனழுத்தம் குறைந்துவிட்டபடியால். முருகனும் படத்தில் கவனத்தைச் செலுத்தினான்.

அது 4 மாடிக் கட்டிடம். அதில் வெங்கடேஸ்வரா மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டி ருக்கிறது. அது ஒரு தனியார் மருத்துவ மனை. சுந்தரம் அந்தப் பகுதியில் ஒரு மிகவும் புகழ்பெற்ற இருதய நிபுணர். அவர்தான் அதன் உரிமையாளர். அன்று காலை சுமார் 11 மணியிருக்கும். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கோபால் தன் இருக்கையையும் கம்ப்யூட்டரையும் பிரிண்டரையும் தூசி தட்டித் துடைத்துவிட்டு உட்கார்ந்து கம்ப்யூட்டரை இயக்கினான்.

இண்டர்நெட்டைத் திறந்து ஈமெயில்களைப் பார்க்கலானான். பார்த்துக் கொண்டே வரும் போது, ஒரு மெயிலைப் பார்த்து பயந்து உறைந்து விட்ட நிலைக்கானான். பக்கத்திலிருந்த நண்பன் குமாரை அழைத்து விரலால் கம்ப்யூட்டரைச் சுட்டிக் காட்டி படிக்கும்படி சைகையால் தெரிவித்தான். படித்த நண்பனும் பதட்டத்துக்குள்ளாகி என்னடா பேசாம மச மசன்னு உக்காந்திருக்க! எம்.டி. க்குப் போனைப் போடு! கோபால் போனில் சார் எம்.டிங்களா! நம்ம ஆஸ்பத்திரில நாலு மாடிலேயும் பாம் (bomb) வெச்சிருக்காங்களாம். இன்னும் ஒரு மணி நேரத்தில வெடிச்சிருங்களாம்! என்று சொன்னான். போனின் மறுபக்கத்தில் எம்.டி. சுந்தரத்தின் பதட்டத்தை கோபாலால் பார்க்க வாய்ப்பில்லை. பதட்டத்தில் டாக்டர் சுந்தரத்திற்கு போலிசின் அவசர எண் 100 என்பதைக் கூட மறந்து விட்டார். பக்கத்திலிருந்த உதவியாளரிடம் போப்பா! சீக்கிரம்! போலிஸ் ஸ்டேசன் போன் நம்பரை டைரக்டரியிலிருந்து எடுத்துட்டு வா! பதட்டத்துடனும், பரபரப்புடனும் கவலையுடனும் சொன்னார்.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் இரண்டு போலீஸ் வாகனங்களில் மள மள வென்று வெடி குண்டைச் சோதிக்கும் கருவிகளுடனும் மோப்பம் பிடிக்கும் நாய்களுடனும் போலீஸ்காரர்கள் வந்து இறங்கினார்கள். எம்.டி. சுந்தரத்திடம் நோயாளிகள் பீதியடையாமல், அவர்களை கட்டிடத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி போலீசார் அறிவுறுத்தினர். அடுத்த சில நிமிடங்களில் கை ஒலிபெருக்கிகள் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு உடனே வெளியேறும்படி காவல்துறை கேட்டுக் கொள்கிறது, என்று அலறின. உள்ளிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு பதட்டத்துடனும், பரபரப்புடனும், பயத்துடனும் வெளியேறிக் கொண்டிருந்தனர். சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அப்படி அப்படியே நின்று பீதியுடன் புரியாமல் மருத்துவமனையின் நுழைவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குள் அந்தப் பகுதியே கலவரப் பகுதியாகக் காட்சியளித்தது. தூரத்தில் ஒருவன் நடப்பதை அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் புன்முறுவல் இழையோடிக் கொண்டிருந்தது. எது நடக்க வேண்டுமென்று விரும்பினானோ அது மாதிரியே நடந்து கொண்டிருப்பதற்கான திருப்தி அவன் முகத்தில் பளிச்சிட்டது.

மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு, போலீசார் எம்.டி. சுந்தரத்திடம் வெறும் புரளிதான், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனர். சைபர் கிரைம் போலீசார் தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு முருகனை கைது செய்து ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர்.

இம்! சொல்லுப்பா! நிறையப் படிச்சிருக்க! நல்ல வேலையில வேற இருக்க. பாம் இருக்குன்னு பொய்யா ஏன் இ.மெயில் அனுப்பிச்ச? அந்த ஆஸ்பத்திரி மேல உனக்கு என்ன கோபம்? என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். எதுவும் பேசாமல் இருந்தான். ம்! சொல்லு! நீ பேசாம இருந்தா, நாங்க வேறு முறையில விசாரிக்க வேண்டியது வரும்!

எல்லாத்தையும் சொல்லிடுறேன் சார்! அந்த டாக்டர் என் உயிர் நண்பனை அநியாயமா கொன்னுட்டான் சார்! ஒருவாரத்துக்கு முன்னாடி எனது நண்பனுக்கு மூளையில நரம்பு வெடிச்சு இரத்தக் கசிவு ஏற்பட்டு இவன் ஆஸ்பத்திரில சேர்த்திருந்தோம். முதல் நாலு நாள் சிகிச்சையில என் நண்பனுக்கு சுய நினைவு வந்திருச்சு. நோயாளியிடம் அதிகமாகப் பேசாதீங்க. இரண்டாவது ஸ்ட்ரோக் வந்துட்டா என்னால காப்பாத்த முடியாது! என்று அவன் சொன்னான். எங்களுக்குப் பயம் வந்திருச்சு. எனது நண்பனுக்கு மிகவும் வேண்டிய டாக்டர் மூளை சம்பந்தமான நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்ட். சென்னையில இருக்காரு. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொல்லி விமானத்தில் புறப்பட்டு வரச் சொன்னோம். அதற்கு அவர் அந்த டாக்டர் வேறு டாக்டர் எவரையும் அனுமதிப்பதில்லை. ஏற்கனவே அவரோடு ஒரு கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கு. ஆம்புலன்ஸ்ல எல்லா வசதியும் இருக்கு. அதுல வச்சு சென்னைக்குக் கொண்டு வந்திருங்க. நான் காப்பாத்திடுறேன், என்று சொன்னார். அதை டாக்டர் சுந்தரத்திடம் சொன்னோம். அதற்கு அவன் கோபத்தில் சத்தம் போட்டு உங்க நண்பருக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலையில் நான் டிஸ்சாஜ் செய்து அனுப்ப மாட்டேன், என்று சொன்னான். அதற்கு எனது நண்பனது மனைவியும் நாங்களும் சார்! நீங்கள் எப்படி எழுதிக் கேட்டாலும் எழுதித் தருகிறோம். டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டோம். அவன் மறுத்துவிட்டான். டாக்டர் சத்தமாகப் பேசியது நண்பரின் காதிலும் விழுந்துவிட்டது. இதனால் தனக்கு என்ன நோய் என்பதை அறிந்தவுடன் அவனுடைய கண்களிலிருந்து நீராக வடிந்தது. அன்று இரவு நடு இரவில் இரண்டாவது ஸ்ட்ரோக் வந்து இறந்து விட்டான் சார், என்று சொல்லிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதான். இன்ஸ்பெக்டர் முருகன் மீது இரக்கம் கொண்டார் அழுகையை நிறுத்து! ஏட்டையா ஒரு டீ கொண்டு வந்து முருகனுக்குக் கொடுங்க!

முருகனுக்கு டாக்டர் மீதுதான் கோபம். அந்தக் கோபம் எத்தனை நோயாளிகளுக்கு மூன்று மணி நேர துயரத்தைக் கொடுத்து விட்டது! சில நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப் போயிருக்கலாம்; சில அவசர கவனிப்புத் தேவைப்பட்ட நோயாளிகள் சிகிச்சைகள் தள்ளிப் போனதால் இறந்தும் போயிருக்கலாம்.

அவனது நண்பணுக்கு நடந்த கொடூரமான சம்பவம் மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வந்து அவனைத் தூங்கவிடவில்லை என்பது உண்மைதான். அதற்காக பின் விளைவுகளை சிந்திக்காமல் தவறு செய்துவிட்டான். சரியான பயிற்சியின் மூலமே தொடர் எண்ண ஓட்டத்தை நிறுத்தி சகஜ நிலைக்கு வர முடியும். சகஜ நிலைக்கு வந்திருந்தால் டாக்டர் செய்த தவறுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நிதான யோசனை வந்திருக்கும்.

கவன வாழ்க்கையில் இடி விழுந்தது போன்ற நிகழ்வு நடந்து துயரம் ஏற்பட்டாலும் மிக விரைவில் சகஜ நிலைக்கு வந்து விட முடியும்.

பாபு தனது வீட்டின் வெராந்தாவில் உள்ள திண்டில் உட்கார்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனுடைய நண்பன் ராகவன் தன் அருகில் வந்து நின்றதைக் கூடக் கவனிக்காமல் பாபு சிந்தனையிலேயே மூழ்கியிருந்தான்.

பாபு! புரட்சி பண்ணி எந்த கோட்டையைப் பிடிக்கப் போறே! சத்தத்தைக் கேட்ட பாபு சிந்தனையிலிருந்து விடுபட்டவனாய் ராகவனைப் பார்த்தான்.

இருவரும் நீண்ட நாளைய நண்பர்கள். ஒரு பள்ளியில் ஒன்றாகவே படித்தவர்கள், கல்லாரிலேயும் ஒன்றாகவே சேர்ந்து படிப்பை முடித்தவர்கள். ராகவன் கிடைத்த வேலையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவன். படிப்புக்கேத்த வேலைக்காகக் காத்திருப்பவன் பாபு. மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வாடா! இன்னிக்குப் பேப்பர் பாத்தியா! மகாப் பெரிய ஊழலைச் செஞ்சிருக்காங்க! இதுக்குத் தாண்டா மக்கள் புரட்சி ஏற்ப்பட்டு புரட்சி அரசாங்கம் வரனுமின்னு சொல்றது! என்றான் பாபு. அவன் கண்களில் கோப வெறி தெரிந்தது.

ராகவன் அவன் தோலைத் தட்டியவாறு அமைதி மகனே அமைதி! புரட்சி அரசாங்கம் வந்துட்டா மட்டும் ஊழல் ஒழிஞ்சுடுமா? ஆட்சிக்கு வந்த சில வருடங்களிலேயே காடுகளில் வாழ்ந்த புரட்சித் தலைவர்கள் பதவி சுகத்தில் திலைத்துப் பிறகு ஆடம்பர சுகத்தில் மிதப்பார்கள். ஆடம்பரம் நிலைக்க சொத்துக்களைக் குவிப்பார்கள். தவறாக சேர்த்தச் சொத்துக்களை அனுபவிக்க, அதிகாரம் எப்பொழுதும் தங்களைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காக சர்வாதிகாரிகளாக மாறுவார்கள்.. அவர்களின் காலம் முடியும்போது, தங்களது வாரிசுகளை தங்களுக்குப் பின் சர்வாதிகாரிகளாக்கிவிட்டுச் செல்வார்கள். மக்கள் ஆட்சியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் செய்யலாம். சர்வாதிகாரி நாட்டில் போராட்டத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

உன்னுடைய வாதத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது! லெனின், மாசெதுங், பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்கள் சிறந்த ஆட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு என்ன ஆச்சு! ருஷ்யா துண்டு துண்டாப் போகல! ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் தங்களை சுதந்திர நாடுகளாப் பிரகடனப்படுத்தல! மனிதசமுதாயம் தோன்றிய காலத்திலயிருந்து பிரச்சனைகள் இருந்து கொண்டுதானிருக்கு. 1,76.000 மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னால நடந்தாகச் சொல்லப்படுகிற கதைகள்தான் இராமாயானமும் மகாபாரதமும். சுக்ரீவன் மனைவியை அவன் அண்ணன் வாலி அபகரிக்கல! ஆட்சிக்காக, பாண்டவர்கள் தங்கியிருந்த அரக்கு மாளிகையை தீ வைத்து அவர்களைக் கொள்ள துரியோதனன் சதித் திட்டம் தீட்டல! கி.பி. 2-ம் நூற்றாண்டில பொற்கொல்லனின் மோசடித் திருட்டினால் கோவலன் வெட்டிக் கொள்ளப் படல! ஒளரங்கசீப் சக்கரவர்த்தி, முடிசூட்டுவதற்குரிய வாரிசான தனது அண்ணன் தாரா சுகோவை (DARA SHUKOH) ஓட ஓட விரட்டி கொலை செய்து, தனது தந்தை ஷாஜஹானை சிறையில் அடைத்துவிட்டு ஆட்சிக்கு வரல! கி.பி. 15-ம் நூற்றாண்டில், சூரியனைச்சுற்றி பூமி முதலிய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானியலின் உண்மைத் தத்துவத்தை வெளியிட்டதற்காக புரூனோ என்ற இத்தாலியரை தீயிட்டுக் கொழுத்தியது திருச்சபை. இதே நூற்றாண்டில இங்கிலாந்து மன்னர் ஹென்றி தனது ஆசை நாயகியை மணப்பதற்காக, 25 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தனது மனைவி காதரினை விவாகரத்து பெறுவதற்காக மதகுருவான போப்பாண்டவரையே தூக்கி எறிந்தார். கத்தோலிக்க திருச்சபையை முடக்கிவிட்டு, ஆங்கிலேய திருச்சபையை (Church of England) நிறுவினார். அதற்குப் பிறகும் அவரது ஆசை அடங்கல. தொடர்ந்து நான்கு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்து கொண்டார். ச்ஐவி (HIV) யால் பாதிக்கப்பட்டவர்களை மனித நேயத்துடன் பாருங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்த கோடிக்கணக்கான பணத்தை இந்திய அரசு ஆண்டுதோறும் விளம்பரமாகச் செலவழிக்கிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரச் சுமை என்பதற்க்காக அந்நாட்டின் குடிமக்களில் ஓரினச் சேர்க்கையாளர்களையும், மாற்றுத் திறனாளிகளையும் (handicapped persons). மனநலம் குன்றியவர்களையும் லட்சக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறான் ஒரு கொடுங்கோலன்.

அவன் யாரப்பா?

யாரு! சர்வாதிகாரி ஹிட்லர்தான்!அவன் மாதிரி ஆட்களின் பிறப்பை உன்னால் தடுக்கமுடியுமா? பாபு! சில சமயம் மக்களும், அரசாங்கமும், மதங்களும் கூட தஙகளுடைய கொள்கைகளிலிலும். கோட்பாடுகளிலும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்திருக்கிறாயா? அரசும், மிருகங்கள் மற்றும் பறவைகளை வதைப்பதிலிருந்து பாதுகாக்கும் ஆர்வலர்கள் மிருகங்களை சர்க்கசில் பயிற்சி கொடுத்து வேடிக்கை காட்டுவது, பறவைகளை கூண்டில் அடைத்து மகிழ்வது ஆகியவற்றைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் என்று சரணாலயங்களை நிறுவி பறவைகளையும் மிருகங்களையும் அரசு பாதுகாக்கிறது. ஆனால் தினசரி கோடிக்கணக்கில் ஆடுகளும், மாடுகளும், பறவைகளும், மீன்களும் மனிதர்களின் உணவுக்காக கொன்று குவிக்கப்படுகிறதே! இதற்கு நீ புரட்சி செய்யமுடியுமா! ஆக்கப்பட்டப் பொருள்கள் அனைத்தும் மனிதனுக்குச் சொந்தம் என்று யேசுநாதர் போதித்து, கிறிஸ்தவர்கள் அசைவ உணவு சாப்பிடுவதற்கு சமரசம் செய்து கொண்டார். ஜப்பான் 3500 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. அவர்களுக்கு மீன்தான் முக்கிய உணவு. ஆகவே ஜப்பானில் வேறூன்றியுள்ள, அஹிம்சையைப் போதிக்கும் புத்தமதம், மீனை உணவாகச் சாப்பிடுவதை ஏற்றுக் கொண்டது! சமரசம் செய்துகொண்டு போய்க்கொண்டிருப்பதே வாழ்க்கை! உலக இயல்புபடி அதாவது மக்களின் இயல்புபடி, அதனை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை நடத்திச் செல்வதுதான் புத்திசாலிதனம். எந்தப் பிரச்சனையானாலும் நீ திருவள்ளுவர் பெருமானை அனுகலாம். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என்று அவர் தெள்ளத் தெளிவாச் சொல்லியிருக்கிறாரே! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை மறந்து விட்டாயா?

எல்லாம் முடிஞ்சு போச்சு.... என்று வாய்க்குள்ளேயே பாபு முணுமுணுத்தான்.

என்னவோ முணுமுணுத்தாயே!!

இல்ல! ஒன்னுமில்ல! பாபுவின் முகத்தில் கவலையின் சாயல் பளிச்சிட்டுத் தெரிந்தது. அப்பா உன்னைப் பார்த்தாரா?

என்னுடைய ஆபிசுக்கே வந்திருந்தார். எப்பப் பார்த்தாலும் தனியா உட்கார்ந்து எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கயாம்! அடிக்கடி அடையாளம் தெரியாத ஆட்கள் உன்னிடம் வந்து பேசிட்டுப் போறாங்களாம். சில சமயம் அவர்களோடு போனால் இரண்டு மூன்று நாட்கள் கூட வீட்டுக்கு வராம இருந்துடுறியாம். ஏன் இப்படி இருக்க? அவங்களெல்லாம் யாருன்னு கேட்டா, ஒன்னும் பதில் சொல்லாம பேசாம இருக்கியாம்! அந்த நேரத்தில் பாபுவின் அம்மா இருவருக்கும் காபி கொண்டுவரவே இருவருடைய பேச்சும் தடைபட்டது.

மறுநாள் காலையில் பாபுவின் அப்பா சோமசுந்தரம் அவனின் படுக்கையிலிருந்து ஒரு கடிதத்தை எடுக்கிறார். பதட்டத்துடன் அதில் உள்ளவற்றைப் படிக்கிறார்.

அப்பா! அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்! நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். சேர்ந்தது சரியா தவறா என்ற விவாதம் இப்போது தேவையில்லை. நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ஒழித்துக் கட்ட என்னுடைய பங்கை அளிக்க புரட்சி இயக்கத்தில் சேர்ந்துள்ளேன். இனி எனக்கு எல்லாமே புரட்சி இயக்கம்தான். பக்கத்தில் ஒரு மஞ்சள் பையில ரூபாய் இரண்டு லட்சம் இருக்கு. அதை அவர்கள் கொடுத்ததுதான். தங்கையின் திருமணத்தை முடித்து விடுங்கள். தம்பியை நன்றாகப் படிக்க வையுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள். எந்த உதவி தேவைப் பட்டாலும் ராகவனைப் போய்ப் பாருங்கள். அவன் எனக்காகச் செய்வான்.

புரட்சி ஓங்குக! புரட்சி வெல்க!
இப்படிக்கு
அன்புள்ள மகன்
எஸ்.பாபு.

கடிதத்தைப் படித்த முடித்த அவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்து வெளியேறியது. எப்படி லட்சுமியிடம் சொல்லுவேன்..... என்று சோமசுந்தரத்தின் வாய் முணுமுணுத்தது.

ராகவன் போஸ்ட்மென் கொடுத்துவிட்டுச் சென்ற கடிததைப் பிரித்துப் படித்தான்.

அன்புள்ள நண்பன் ராகவனுக்கு, வணக்கம். இந்தக் கடிதம் உன் கையில் இருக்கும் போது நான் காட்டுக்குள் சென்றிருப்பேன். ஆம்! புரட்சி இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். நீ எனக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறியிருந்தாய். கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்ளச் சொன்னாய். படிப்புக்கேத்த வேலைக்காகக் காத்திருந்தேன். இந்தியன், ரமணா போன்ற படங்களை அடிக்கடி பார்க்காதே! தனிமையில் உட்கார்ந்து யோசிக்காதே! உணர்ச்சி எழுப்பக்கூடிய செய்திகளைப் படிக்காதே; அதுவும் முடியாது என்றால், செய்தித் தாள்களைப் படிப்பதை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வை. செய்திகள் அனைத்தும் செத்துப் போன செய்திகள்; கடந்த காலச் செய்திகள்; அந்தச் செய்திகளால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. இப்பொழுது வேலைக்கு அப்ளிகேசனை நிரப்பிக் கொண்டிருக்கிறாயே, அதுதான் உனக்குப் பயன்படும் செய்தி. இப்படி நீ சொன்ன எந்த அறிவுரையையும் நான் கேட்க வில்லை. இரண்டு நாளைக்கு முன்பு கூட நீ சொன்ன அறிவுரைகள் என்னை மிகவும் பாதித்து விட்டது உண்மைதான். ஆனால் காலம் கடந்த அறிவுரை. நான் பல முறை காட்டுக்குள் சென்று மூளைச் சலவைக் (brain wash) குள்ளாக்கப் பட்டிருக்கிறேன். அவர்கள் பயிற்சி எடுக்குமிடங்களுக்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆகவே இனி நான் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அப்படி திரும்பினால், அவர்களது ரகசியங்களைத் தெறிந்தவன் என்பதினால், அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள். இனி எனது வாழ்க்கை, புரட்சி முத்திரை குத்தப் பட்ட வாழ்க்கைதான். என் குடும்பத்தை என் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள். என் தந்தைக்கு உடந்தையாக இருந்து என் தங்கையின் திருமணத்தை நடத்து. என் தம்பியின் உயர் படிப்புக்கு என் தந்தையை வழி நடத்திச் செல். புரட்சி ஓங்குக! புரட்சி வெல்க!

இப்படிக்கு
அன்புள்ள ஆருயிர் நண்பன்
எஸ்.பாபு.

பாபு தன் மனதினை கட்டுக்குள் வைக்காமல், கற்பனையில் சதா மூழ்கியதின் பலன், அவனை தீவிரவாதியாக்கியது. அவன் வாழ்க்கை பாழானதோடு, அவனது பெற்றோரையும் மீளாத் துயரத்திற்குள்ளாக்கி விட்டான்; உடன்பிறப்புக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டுச் சென்று விட்டான்.

பிரம்மன் அகல்யாவை எந்த ஆடவரும் பார்த்தவுடன் பிரமிப்பு அடையும்படியான பேரழகியாக படைத்திருந்தார். பல பேர் அவளுடைய கையைப் பிடிக்க விரும்பினாலும், பிரபலமான ஏழு முனிவர்களில் ஒருவரான கவுதம் முனிவர்தான் அவளுக்கு மாலை சூடினார்.

அகல்யா கிடைக்காததினால் பெருத்த ஏமாற்றமடைந்தவர்களில் மிக முக்கியமான ஒருவன் இந்திரன். அவள் மீது கொள்ளை ஆசை வைத்திருந்தான். அவனின் மனக்கண் முன்னாள் அவளுடைய உருவம் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அவளோடு உடலுறவு கொள்வது போல கற்பனையில் மூழ்கி செயற்கை இன்பத்தை அனுபவித்து வந்தான். இது முற்றி, அவளை ஒரு நாளாவது அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் பைத்தியமாகி விட்டான். அதற்கான சந்தர்ப்பத்திற்காக ஆவலோடு காத்திருந்தான்.

கவுதமும் அகல்யாவும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அவளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை இந்திரனால் அடக்க முடிய வில்லை. ஆகவே சேவல் கூவுவது போல ஒலியை எழுப்பி கவுதமரை கங்கைக் கரைக்கு காலைக் கடன்களை முடிப்பதற்காகச் செல்வதற்கு தூண்டுதல் செய்தான். பிறகு கவுதமராக உருமாறி அகல்யாவை அணைத்தான்.

ஆரம்பத்தில் அகல்யா, கவுதமர் வெளியில் சென்றுவிட்டு விரைவில் திரும்பியதை நினைத்து ஆச்சரியமடைந்தாள். ஆனால் சிறிது நேரத்திற்குள் தன்னைத் தழுவி அணைத்துக் கொண்டிருப்பவன் கவுதமராக உருமாறி வந்திருக்கும் இந்திரன் என்பதை அவளது கூர்மையான மூளை கண்டுபிடுத்து விட்டது. இருந்தாலும் அவள் அவனுடைய ஆசைக்கு இணங்கினாள். உண்மையில் இந்திரனே தன் அழகில் மயங்கினதை நினைத்து அவள் பெருமையே கொண்டாள்.

கங்கைக் கரையிலிருந்து திரும்பிய கவுதமர் இருவர்களின் தகாத உறவைக் கண்டு கோபமுற்றார். இருவரையும் சபித்தார். அவரின் சாபத்தால், இந்திரன் ஆண்மையை இழந்தான் மற்றும் அகல்யா சாப்பாடு இல்லாமல் ஆயிரம் ஆண்டுகள் பிறர் கண்களுக்குத் தெரியாமல் காற்றோடு காற்றாகக் கலந்து அந்த ஆசிரமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

இந்திரனின் கற்பனையின் பலனால் அகல்யாவுடன் தகாத உறவு கொண்டான்; அதனால் அவன் தன் ஆண்மையை இழந்தான். அகல்யாவை தன்னுடன் தகாத உறவு கொள்ளத் தூண்டும் பாவத்தைச் செய்தான்; அதனால் அவளும் சாபத்திற்குள்ளானாள். அன்பினால் பிணைக்கப்பட்ட தம்பதியரைப் பிரித்தப் பாவத்திற்கும் உள்ளானான் இந்திரன்.

வசந்தா கூடத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப் போயிருந்தது. காலையில் தெருவில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது, அவளது கணவரால், அவளுக்கு ஏற்பட்ட அவமான தலைக்குனிவு ஏற்படுத்திய நிகழ்ச்சியே அவளின் மனக்கண்ணிலிருந்து அகலாமலிருந்தது. அவள் அந்த முட்டைக் கண்ணுக்காரி, இன்னும் பத்துப் பேரிருக்க என் பக்க நியாயத்தைக் கேக்காம என் தலை முடியைப் பிடிச்சு அடிச்சு தர தர வென்று இழுத்து வந்தாரே! அவளுக மூஞ்சியில எப்படி முழிப்பேன்! என் மானமே போச்சே! நான் உயிரோடு இருக்கக் கூடாது! என்று முணு முணுத்தபடி வேகமாக எழுந்தாள்; கதவைத் தாழ்ப்பாளிட்டாள். ஒரு சேலையை எடுத்தாள்; மின்விசிறிக்கு மேலே உள்ள கம்பியில் சேலையை சொருகி கழுத்திலும் கட்டி தொங்கி, கால்கள் நிற்கும் ஸ்டூலையும் கால்களால் உதைத்துத் தள்ளிவிட்டாள். சிறிது நேரத்தில் வசந்தாவின் உடல் மட்டும் தொங்கியது; அவளுக்குச் சொந்தமில்லாத உயிர் அவளை விட்டுப் பிரிந்தது.

வசந்தா தனது உயிரை மாய்த்துக் கொண்டதால் யாருக்கு நஷ்டம்? இப்பொழுது அவளது ஆண் மற்றும் பெண் குழந்தையும் தாயில்லாக் குழ்ந்தைகளாகி விட்டன! மாற்றாந்தாய்க் கொடுமைக்காளாகப் போகின்றன! அவள் மட்டும் எண்ணங்களை நீடிக்க விடாமலிருந்து, செய்யும் வேலையில் கவனத்தைச் செலுத்தியிருந்தால், மனம் அமைதியடைந்து தெளிவு பெற்றிருக்கும்! தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியிருக்காது, வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிச் சென்றிருக்கலாம். கணவனிடம் சொல்லி உத்தியோக மாறுதலுக்கு ஏற்பாடு செய்து வேறு ஊருக்கே மாற்றிச் சென்று விடலாம்.

கவன வாழ்க்கைக்குப் பயிற்சி எடுத்துக் கொண்டால், எண்ண ஓட்டத்தை நிறுத்தி, கையிலிருக்கும் வேலையில், கவனத்தைச் செலுத்த முடியும்.

ஜெய்சர்மா மைனப்பூரின் சட்டமன்ற உறுப்பினர். அரசு விருந்தினர் மாளிகையில் கட்டிலில் படுத்திருந்தார். அவருடைய நிழல், எடுபிடி, பிஏ இப்படி இடத்துக்குத் தகுந்தபடி பல பெயர்களைக் கொண்ட முனிராம் அவருடைய கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.

ஜெய்சர்மா முனிராமைப் பார்த்துக் சொன்னார் அவ அழகுன்னா அப்படியொரு அழகு! ருஷ்மாவைத்தான்யா சொல்றேன்! இன்னிக்காவது பாவை படியுமா? போய் முயற்ச்சிக்கலாமா?

முனிராம் சில விநாடிகள் பேசாமலிருந்து விட்டு சொன்னான் படியாதுயா! நீங்களும் நிறைய தடவை முயற்சி செஞ்சீங்க! முடியலையே! ஒரு தடவை கதவு ஜன்னல்களை திறந்து வச்சுட்டா! இன்னொரு தடவை பக்கத்து வீட்டுப் பிள்ளையை கூட்டி தன்னோடு வச்சுக்கிட்டா! இப்படி ஏதாவது செஞ்சு தப்பிச்சுடுறா!

சிறிய இடைவெளிக்குப் பிறகு ஐயா! ஒன்னு சொல்லட்டுங்களா! கோபிக்கமாட்டீங்களே! என்று கேட்டான்.

அவனை கேள்விகுறியுடன் பார்த்து சொன்னார் எதிருந்தாலும் சொல்லு! கோபிக்கமாட்டேன்!

ஐயா!.....பாவமாயிருக்குயா! இப் பொண்ணை விட்டிடுங்க! வேற படியுற பொண்ணுக நிறைய வந்து விழுதுங்களே! அந்தப் பொண்ணு தன் புருசனை விரும்பி கலியாணம் பண்ணியதால இரண்டு வீட்டுத் தொடர்பும் அத்துப் போச்சு. இவளை ஒரு குழந்தையோடு விட்டுட்டு புருசங்காரன் துபாய்க்கு சம்பாதிக்கப் போயிட்டான். நீங்க அடிக்கடி அங்க போறதால, அக்கம் பக்கத்தில கச,கசன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னு, அந்தத் தெருவில குடியிருக்கிற என் நண்பன் சொன்னான். பாவம்யா! என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தான்.

ஜெய்சர்மா கோபமாகப் பேசினார் போடா மடப்பயலே! பாவம் பார்த்தா சந்தோஷம் கிடைக்குமாடா? புருசந்தான் இல்லியே, என் ஆசைக்கு இணங்க வேண்டியதுதானே! நான் அவளுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுப்பேன்ல! என் மனைவிகூடப் படுத்திருக்கும் போது கூட அவளைப் பற்றித்தாண்டா எண்ணம் மனசில ஓடிக்கொண்டே இருக்குது! ஒன்னு தெரியுமா? என் மனைவியோட தாம்பத்திய உறவு கொள்ளவே முடியலடா! ருஷ்மா அப்படி ஆட்டிப் படைக்கிறாடா!.

ஊர்ப் பொமபளைங்களை ஓம் பொண்டாட்டிகள்ன்னு நினைச்சா ஓம் பொண்டாட்டி அடுத்தவன் பொண்டாட்டிதான! என்ற எண்ணங்கள் முனிராம் மனதில் ஓடின.

என்னடா யோசிக்கிற?

ஒன்னும் இல்லீங்கய்யா!

நான் முடிவு பண்ணிட்டேன். அடுத்த வாரத்தோடு சட்டசபை முடிஞ்சிறும், அவளையும் அவ குழந்தையையும் கடத்திட்டுப் போயி டார்ஜிலிங்கில உள்ள நம்ம பங்களாவில ஒரு வாரம் வச்சிருந்து என் ஆசையைத் தீத்துக்கப் போறேன்! என்று ஒரு முடிவுக்கு வந்தது போலப் பேசினான்.

ரேஸ்பிருந்தா ருஷ்மாவின் வீட்டுக் கதவை நீண்ட நேரம் தட்டியபிறகு கதவு திறந்தது. கதவைத் திறந்த ருஷ்மாவின் முகத்தைப் பார்த்த ரேஸ்பிருந்தா அழுதிட்டுருந்தியா! என்று கேட்டாள். அழுது அழுது ருஷ்மாவின் முகம் வீங்கியிருந்தது. இருவரும் கூடத்திலிருந்த சாய்வு பிளாஸ்டிக் நாற்காலிகளில் சென்றமர்ந்தனர்.

ரேஸ்பிருந்தா ருஷ்மாவின் முகத்தைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டாள் நேற்று ராத்திரி வந்து தொந்தரவு கொடுத்தானா?

நேற்று ராத்திரி வரல! நேற்று ராத்திரி தலையில இடி விழுந்தமாதிரி ஒரு தகவலைச் சொல்லிஅனுப்பிச்சிருக்காரு!

யாரு அவன் பிஏ முனிராமா? நாசகாரப் பயகிட்ட இப்படி ஒரு நல்ல மனுசன் வேலை பாக்கிறாரே?

அவரு மட்டும் அப்போதைக்கப்போது எனக்குத் தகவல் கொடுக்கல, எப்பவோ அவன் என்னைச் சீரழிச்சிருப்பான்!

என்ன தகவலாம்?

ஒரு வாரம் கழித்து என்னை டார்ஜிலிங்குக்கு கடத்திக்கொண்டுப் போகப் போறானாம்! இந்த ஊரை விட்டே போகச் சொல்றார் அந்த முனிராம்! நான் எங்க போவேன்! என்று சொல்லிக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுதாள்.

ரேஸ்பிருந்தா எழுந்து அவளுடைய தோள்களை ஆதரவாக பிடித்து அணைத்துக் கொண்டாள். ரேஸ்பிருந்தாவின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து வெளியேறியது.

புதிய ரேசன் கார்டு வாங்க அப்பிளிகேசனை அவன்கிட்ட கொடுக்கப் போயிருக்கக் கூடாது! தாசில்தாரு ஆபிசில கொடுத்திருக்கனும்! என்று முணுமுணுத்தவாறு நான் தப்புப் பண்ணிட்டேன்! தப்புப் பண்ணிட்டேன்! என்று சொல்லிக் கொண்டே, தன் தலையிலேயே இரு கைகளாலும் மடார் மடார் என்று அடித்துக் கொண்டாள்.

ரேஸ்பிருந்தா அவளுடைய கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

உன் அம்மா அப்பா ஊருக்கே போயிரேன்

நானும் அவரும் ஒரே ஊர்தான். இரண்டு வீட்டிலேயும் ரொம்பவும் கோபமாக இருந்தாங்க! உங்க உயிருக்கு பாதுகாப்பு எப்பவும் எங்களால கொடுக்க முடியாது!; ரொம்ப தூரமா போயிடுங்கன்னு போலீசுல சொல்லிட்டாங்க! அதனாலதான் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால வந்து இங்க குடியேறினோம்.

அம்மா பசிக்குதம்மா! என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த ஐந்து வயது பையன் தோள்பட்டையில் உள்ள புத்தகப் பையை கீழே இறக்கி வைத்தான்.

ருஷ்மா, எம் பொண்ணும் வந்திருப்பா. உங்க ஊருக்கே போகமுடியுமான்னு நல்லா யோசித்துப் பாரு. நான் வர்றேன்! என்று சொல்லிக்கொண்டே ரோஸ்பிருந்தா புறப்பட்டாள்.

எம்.எல்.ஏ ஜெய்சர்மா அவனுடைய அரசு வழங்கிய அலுவலகத்தில் ஒருவர் கொடுத்த மனுவை படித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் முனிராம் நின்று கொண்டிருந்தான். ஜெய்சர்மாவுக்கு பக்கத்தில் இருபக்கங்களிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவருடைய அறைக்கு எதிர் கூடத்தில் பொதுமக்கள் இருபது பேர்கள் ஆண்களும் பெண்களுமாக இரும்பு நாற்காலிகளில் எம்.எல்.ஏ விடம் மனுக்கொடுப்பதற்காக உட்கார்ந்திருந்தனர். வெளியில் வந்த ஒரு ஆள் நீ உள்ள போமா! என்று சொன்னான். முக்காடு போட்டிருந்த பெண் உள்ளே போனாள். எம்.எல்.ஏ விடம் மனுவை நீட்டினாள். குனிந்து எழுதிக் கொண்டிருந்த ஜெய்சர்மா அப்பொழுதுதான் நிமிர்ந்து அந்த பெண்ணைப் பார்த்தார். முக்காடு விலகிய சிறிது இடைவெளியில் முகத்தைப் பார்த்தவுடன் அவரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் செத்துப்போடா! செத்துப்போடா! பொம்பளை பொருக்கி! என்ற குரல் அந்த அறையே அதிரும்படியாக கேட்டதில் அறையில் இருந்த அனைவரும் அந்தக் காட்சியை பார்த்து உறைந்து விட்டனர். ருஷ்மா ஜெய்சர்மாவை சரமாரியாக கத்தியால் குத்திக் கொண்டிருந்தாள். எவருக்கும் அதைத் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை. அந்த அளவுக்கு அவளுடைய சத்தமும் செயலும் இருந்தது. ஜெயசர்மாவின் தலை தொங்கி உடல் சரிந்து கீழே சாய்ந்தது. ருஷ்மா குத்துவதை நிறுத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் யாரும் என்கிட்ட வராதீங்க! நானே போலீசுல சரணடையிறேன்!

போலீஸ் ஸ்டேசனுக்குள் ஓரு பெண் கையில் இரத்தம் படிந்த கத்தியுடன் நுழைவதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் பதட்டத்துடன் எழுந்து நின்றார். தன் மேஜைக்கருகில் வந்து நின்ற ருஷ்மாவைப் பார்த்து அந்த கத்தியை அப்படியே மேஜை மேலே வச்சிரும்மா! என்னம்மா நடந்தது?

காமவெறிபிடித்த எம்.எல்.ஏ வைக் கொன்னுட்டேன்!

எதுக்காகம்மா கொலை செஞ்ச?

எனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு (sexual torture) கொடுத்துக் கொண்டேயிருந்தான். என்னால பொறுக்க முடியல. அவனை இந்தக் கத்தியால குத்தியே கொன்னுட்டேன்!

எம்.எல்.ஏ ஜெய்சர்மா, ருஷ்மாவின் அழகை எப்பொழுதும் தன் மனக்கண்முன் கொண்டுவந்து ரசித்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார். அவர் செய்த கற்பனை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதனால் அவர் தன் தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்ய முடியவில்லை. ருஷ்மாவின் வீட்டுக்கு அடிக்கடி போனதால் அவருடைய நேரம் வீணானதுடன் அவளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அதனால் கணவன் அருகில் இல்லாத நிலையில், ருஷ்மா, தன் கற்புக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஜெய்சர்மா அடிக்கடி செய்த கற்பனையால், தன் மனைவி கூடச் செய்யும் தாம்பத்திய உறவின் போது, தற்காலிகமாக ஆண்மையற்றவராகி (temporarily impotent) விட்டார்; மனைவிக்குத் துரோகம் செய்தார்; ருஷ்மாவை கொலைகாரியாக்கி விட்டார்; அவரும் கொலை செய்யப்படுகிறார்; அவருடைய குடும்பமும் ருஷ்மாவின் குடும்பமும் அனாதைகளாகி நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன.

மேற்குறிப்பிட்டதைப் போல, தினசரி கோடிக்கணக்கான நிகழ்வுகளும் அதனால் விளையும் துன்பங்களும், ஏமாற்றுதல்களும், மோசடிகளும், பித்தலாட்டங்களும், வழிப்பறிகளும், திருட்டுகளும், குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகளும், கற்பழிப்புகளும், தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இவ்வளவுக்கும் ஒரே ஒரு காரணம் கற்பனை. இதில் இறைப் பணியில் ஈடுபட்டுள்ள சாமியார்களும், பாதிரியார்களும் விதி விலக்கல்ல. பாதிரியார்கள் குழந்தைகளைப் பாலியல் தொந்தரவுகள் (sexual torture) கொடுத்ததற்காக ஆஸ்திரிலேயாவுக்குச் சென்ற போப் ஆண்டவர் அங்கு தவறு செய்த பாதிரியார்களுக்காக மன்னிப்புக் கோரினார்.

இரண்டாம் உலகப் போர் துவங்கியதற்கும், அந்தப் போரில், ஏழு கோடியே இருபது லட்சம் பேர் மாண்டதற்கும் காரணம் அந்த ஒரே ஒரு வார்த்தை கற்பனை தான். இத்தாலியின் சர்வாதிகாரி முஸோலினி. அவன் இத்தாலியை சீசர் காலத்திய ரோமப் பேரரசாக்க கற்பனையால் கனவுக் கோட்டை கட்டினான். அதன் விளைவு ஜெர்மானிய சரவாதிகாரியோடு கைகோர்த்தான். ஜப்பானின் ஆதிக்கத்தை விரிவாக்கி கொரியா மற்றும் சைனாவின் கனிவளத்தை சுரண்ட கற்பனை கனவு கண்டனர் அதன் துருப்புக்களின் படைத் தளபதிகள். ஆகவே அச்சு நாடுகளின் ஒரு அங்கமாகச் சேர்ந்து முதல் அணுகுண்டுகளின் தாக்குதலுக்காளான நாடு என்ற பெயரைப் பெற்றது.

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்து, அதில் ஜெர்மனி அடைந்த தோல்வியைப் போரில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போர்வீரன் அடால்ப் ஹிட்லர் கேள்விபட்டவுடன் தேம்பித் தேம்பி அழுதான். ஜெர்மனி அடைந்த தோல்விக்கு முழுக்க முழுக்க தன் நாட்டில் வாழ்ந்த யூதர்கள்தான் காரணம் என்று அவர்கள் மீது கோபவெறி கொண்டான். அவர்களை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. அதன் விளைவு ஐம்பத்தைந்து லட்சம் யூதர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பட்டினி போட்டும் இன்னும் பல படுமோசமான முறைகளில் முகாம்களில் அடைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கற்பனை மனதில் எவ்வாறு வேலை செய்கிறது!

அனைத்து எதிமறை உணர்வுகளான கோபம், பொறாமை, வெறுப்பு, பயம், படபடப்பு, ஏமாற்றும் குணம், பொறுமையின்மை, திருட்டு குணம் காமவெறி, கொலை வெறி முதலிய உணர்வுக் குணங்களும், நேர்மறை உணர்வுகளான அமைதி, அன்பு, பொறுமை, நிதானம், ஈவு, இரக்கம், நேர்மை முதலிய உணர்வுக் குணங்களும் ஆழமான மனதில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு விதமான உணர்வுக் குணத் தொகுதிகளிலிருந்து மனமானது ஆழ்மனதிற்குச் சென்று அப்போதைக்கப்போது நடக்கும் நிகழ்ச்சியின் தேவைக்குத் தகுந்தாற் போல ஒரு உணர்வை எடுத்து மேல் மனதிற்கு வந்து பயன்படுத்துகிறது. மனதில் தானாக தோன்றும் எண்ணங்களை நீடிக்கவிட்டு தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எண்ணங்களை தோற்றுவித்து அதிலேயே மூழ்கிக் கிடப்பதுதான் கற்பனை. அவ்வாறு செய்யும் கற்பனைதான் மேற்குறிப்பிட்ட உணர்வுகளை, ஆழ்மனதில் தோண்டி, மேல் மனதிற்குக் கொண்டுவரும் வாகனமாகும்.

கற்பனையில் தனது உடன்பிறப்புக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் மீதுள்ள அன்பினால், பெரிய தொகையைக் கொடுத்து அதை வைத்து முன்னேறுவதைப் போல எவரும் கற்பனை செய்து கனவு காண்பதில்லை.

ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருக்கும் மருதநாயகத்திற்கு, தான் உட்கார்ந்திருக்கும் மேஜைக்கு முன்னால் ஒரு கூலிக்காரன் அழுக்கு உடையுடன் பல நாட்களாக சவரம் செய்யாத முகத்தோற்றத்துடன் உட்காருகிறான். கூலிக்காரன் மீது மருதநாயகம் இரக்கப்பட்டு, அவனுக்கு எந்த எந்த விதத்தில் உதவி செய்து முன்னுக்குக் கொண்டு வரலாம் என்ற கற்பனை வருமா? அவர் என்ன செய்வார்? மனதிற்குள் அருவருப்படைந்து வேறு மேஜைக்குச் சென்று அமர்வார். ஆகவே அன்பு, ஈவு, இரக்கம் ஆகிய உணர்வுகள் மேல் மனதிற்கு வருவது அபூர்வம். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். மேல் மனதிற்கு பெரும்பாலும் எதிர்மறை உணர்வுகள்தான் வருகின்றன; நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

பஞ்சனாதனுக்கு தன் தங்கையை பொது இடத்தில் வைத்து அமரன் கேலி செய்ததை நினைத்துப் பார்க்கிறான். தன் தங்கை அவமானத்தால் கூனிக்குறுகிப் போனதைப் பற்றி கற்பனையில் நினைத்துப் பார்க்கிறான். கோப உணர்வு உடல் பூராவும் குப்பென்று பரவுகிறது.

இராமலிங்கம், ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எங்கும் முடியாத நிலையில், தன் ஒன்றுவிட்ட அண்ணனிடம் உதவி கேட்டுச் செல்கிறான். அண்ணன் உதவிகரம் நீட்ட மறுக்கிறான். அந்தச் சமயத்தில் இராமலிங்கத்திற்கு ஏமாற்றம் ஏற்பட்டு அண்ணன் மீது வெறுப்பாக மாறுகிறது.

கணேஷ் தன் கையில் டெஸ்ட் ரிஸல்ட் அடங்கிய பேப்பர்களைக் கொண்ட ஒரு பெரிய கவர் ஒன்றை கையில் வைத்து டாக்டரைப் பார்க்க வரிசையில் உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் கற்பனை ஓடிக் கொண்டிருந்தது பசி இல்லை. அதனால புற்று நோயாக இருக்கலாம் என்று டாக்டர் சொல்லாட்டிப் போனாலும், சந்தேகப் பட்டுத்தானே பயாப்சி டெஸ்ட் செய்யச் சொல்லியிருக்காரு! இதை நினைத்த மாத்திரத்தில் கணேஷ்க்கு பயம் தொற்றிக் கொண்டது.

பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் இராமிடம் தேர்வு முடிவு வெளிவந்து விட்டதாக நண்பன் தெரிவித்தவுடன் இராமுவுக்கு படபடப்பு ஏற்பட்டு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

மேற்குறிப்பிட்டவாறு மனித இனம் கற்பனையினால் எதிர்மறை உணர்வுகளில்தான் அநுபவம் அடைந்து வருகிறது.

நமது உணர்வுகளில் காம உணர்வு மிகவும் முக்கியமானது; நமது வாழ்க்கையில் அத்தியாவசியமானது. இறைவன் இந்த உணர்வை வைத்துத்தான் உயிரினங்களின் உற்பத்தியைப் பெருக்குகிறான். இந்த உணர்வை சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தும் போது பயன்படுத்துகிறவருக்கு பலன்கள் ஏராளம். இதற்கு எதிர்மறையாக செய்யும் போதுதான் விபரீதங்கள் பல நடக்கின்றன. இந்த உணர்வில்தான் மனித இனம் சொல்லமுடியாத துன்பங்களையும் துயரங்களையும் அநுபவிக்கிறது. பெரிய பெரிய பேரரசுகளெல்லாம் சரிந்திருக்கின்றன.

மஜோல்சிங், 19 வயது நிரம்பிய வருண் மைரா என்ற கல்லூரி மாணவியை முதன் முதலாக பார்க்கிறான். மற்ற இளம் பெண்களிடம் இல்லாத முகக் கவர்ச்சி, உடல் வனப்பு மற்றும் நடை அவனை அவள்பால் ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பை உருவாக்கின்ற கற்பனை தோன்றியவுடன், அந்த கற்பனையை சுமந்து செல்லும் மேல்மனமானது கீழ் நோக்கி ஆழ்மனதிற்குச் சென்று புதைந்து கிடக்கின்ற காம உணர்வைக் கிளப்ப தோண்டுகின்றது. வருண் மைராவைப் பார்த்ததிலிருந்து, மஜோல்சிங்கிற்கு அவளின் முகம், உருவம் அவன் கண்முன் வந்து போய்க் கொண்டிருந்தது. அவ்வாறு அவன் அவளை நினைக்கும் போதெல்லாம் மனமானது ஆழ்மனதில் காம உணர்வைத் தோண்டிக் கொண்டிருக்கும். மஜோல்சிங்கின், வருண் மைராவைப் பற்றிய தொடர் கற்பனையால், ஆழ்மனதோடு ஐக்கியமாகிய மேல்மனமானது சக்தி பெற்று தோண்டப்பட்ட காம உணர்வை சுமந்து கொண்டு மேல் நோக்கிப் பயணமாகிறது. காலம் நகருகிறது. இதற்குத் தகுந்தாற் போல, காம உணர்வும் மனதின் பல்வேறு மேல்பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. வருண் மைராவை அநுபவித்தே தீர்வது என்ற முடிவுக்கு மஜோல்சிங் வருகின்றபோது, கம்ப்யூட்டரில் கோப்பைத் (file) திறந்தவுடன், அது அந்த கோப்பை திரைக்குக் கொண்டுவந்து விடுவதைப் போல, மேல் மனமானது காம உணர்வை தனது நுனிப்பாகத்தில் கொண்டுவந்து வைத்துக் கொள்ளும். இந்த நிலையில், இரைக்காக பாயத் தயாராக இருக்கும் புலியின் நிலையில்தான் மஜோல்சிங் இருப்பான். அவன், ஒரு நாள் தனியாக வரும் வருண் மைராவை கற்பழித்துக் கெடுத்து விடுகிறான்.

இதே போலத்தான், முன் விரோதத்தால், மீண்டும் மீண்டும் நடந்த சம்பவத்தை பெருமாள்சாமி நினைக்கிறான். மேல் மனமானது கதிர்வேலு மீதுள்ள வெறுப்பு உணர்வையும், கோப உணர்வையும் தனது நுனிப் பகுதியில் கொண்டு வந்து வைத்துக் கொள்கிறது. என்றாவது ஒரு நாள் சிறு சண்டை ஏற்பட்டாலும் பெருமாள்சாமி கதிர்வேலுவைக் கொன்று கொலையாளியாகி விடுவான்.

ஆகவே கற்பனையில் வாழும் மனிதன் அரைமனிதன்; ஆன்மீக ஆற்றல் வெளியிலிருந்து கிடைக்கிறது என்று நம்புவான்; அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தாதவன்; சாஸ்திரங்களை அதிக அளவு நம்புகின்றவன். துன்பவலையைத் தனக்குத்தானே பின்னிக் கொள்பவன்; கவன வாழ்க்கை வாழும் மனிதன்தான் முழு மனிதன்; ஆன்மீக ஆற்றல் தனக்குள்ளிருந்து வருவதை உணர்பவன்; அவ்வாற்றல் முழுமையாகப் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாய்ந்தோடிப் பயனளிப்பதை தெளிவாக உணர்பவன்; சாஸ்திரங்களைப் பற்றிக் கவலையில்லாதவன்; துன்ப வலையைப் பின்னத் தெரியாதவன்.

கற்பனை ஆலகால விஷம். அதைத் தினம் தினம் பருகுகிறிர்கள். அதைத் தூக்கி எறியுங்கள். புதுக் கிண்ணத்தில் கவனம் என்னும் அமிர்தத்தை நிரப்புங்கள், குடியுங்கள், மகிழ்ச்சியில் மிதங்கள். சாதனைகள் பல புரியுங்கள்.

ஆர்.ஏ.பரமன் (அரோமணி) அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு