
நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை
வளம் நிரம்பிய மரங்கள்,
காய்கள் பயிர்கள், வயல்வெளிகள், பூக்களென்று
நம்முடைய சுற்றுப்புறம்,
நம்முடைய கண்களை விட்டுக்
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. கிராமத்திலுள்ள சின்னச்சின்ன
ஊர்கள், ஊருக்குள்ளே வாழும் மனிதர்கள், மனிதர்களோடு
தோழமை கொண்டு துள்ளித்திரிந்த ஆடு மாடுகள், நாய்கள்,
பூனைகள், வீட்டுக்குள்ளே கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள், மழைக்காலத்தில்
உள்ளுக்குள்ளே தலைநீட்டிப் பார்க்கும் தவளை போன்ற எண்ணற்ற உயிரினங்கள்
அனைத்துக்கும் சோறு போட்டு மகிழ்வித்த
சுற்றுப்புறத்துடைய இயற்கை வளம், காலப்போக்கில் அதன்மீது அக்கறை
காட்டாமையாலும், பராமரிப்பு எடுத்துக் கொள்ளாமையாலும், கவனிப்பாரற்று
சீரழிந்து கொண்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தப் சீரழிவு ஒரு பிரம்மராட்சசனைப்
போல விசுவரூபமெடுத்துக் கொண்டு
வருகிறது.
முன்னேற்றம் அதனுடனே பயணிக்கிற நாகரீகம் ஆகியவைகளுடைய ஆதிக்கத்தால் காடுகள்
அழிந்து கொண்டு வந்தது. காடுகளிலுள்ள மரங்கள், மலைகளிலுள்ள மரங்கள் வெட்டி
வீழ்த்தப்பட்டதாலும், சுற்றுப்புறத்தின் பசுமை
அழிந்ததாலும், பெய்யும் மழை குறைந்ததாலும், அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
செழிப்பான மழை காடுகளுக்குள்ளேயிருக்கும் உலர்சருகுகள்,
மக்குகளென்று இயற்கையான உரங்களை சுமந்து கொண்டு
ஆறுகளின் படுகைகளில் படியச்செய்து அவைகளுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து வந்தது.
ஆறுகளை சுற்றியிருக்கிற வயல்வெளிகள் படுகைகளிலுள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சிக்
கொண்டதோடு, வயல்வரப்புகளுடைய செழுமை நிறைந்த மண், எண்ணற்ற
உயிரினங்களுக்கு உணவுக் களஞ்சியமாக இருந்து வந்தது.
முன்னேற்றம் என்கிற பெயரில் வனமரங்கள் வெட்டப்படுவதாலும், முட்செடிகள்
அறுக்கப்படுவதாலும், மூலிகைச்செடிகள் வேரோடு
பிடுங்கப்படுவதாலும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாலும், காட்டுநிலங்கள்
அபகரிக்கப்படுவதாலும் இயற்கை தன் அழகை மட்டுமல்ல தன்
உடைமையையும் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறது. இந்த
சட்டவிரோதமான செயல்களால் காடுகளுடைய பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.
இயற்கையின் அருமையை புரிந்து கொள்ளாமல் இந்தப் பேரழிப்பினால் மனிதன் ஈடுகட்ட
முடியாத செல்வங்களை இழந்து கொண்டு வருகிறான்.
1980ஆம் ஆண்டு காடுகளுடைய பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டத்தை இந்திய அரசாங்கம்
நடைமுறைக்குக் கொண்டு வந்தது. காடுகளின் பரப்பளவு குன்றாமலிருப்பதற்கும்,
அதனுடைய வளம் சீரழிக்கப்படாமலிருப்பதற்கும், அரசாங்கம் அதற்குரிய திட்டங்களை
நடைமுறைக்கு கொண்டு வந்து திறமையாக செயல்படுத்தியிருக்கிறது.
1. காடுகளில்
செயல்படும் சட்டவிரோதமான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
அவ்வாறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள்
உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
2. காடுகளிலுள்ள மரங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
காடுகளுடைய செழிப்புத்தன்மை சீரழிந்து போகாமலிருக்க ஆங்காங்கே
காணப்படுகிற காலியான நிலங்களில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
3. காடுகளுடைய பரப்பளவு குறையாமலிருக்க, அழிந்து போன
மரங்களை அப்புறப்படுத்தி அந்த இடங்களில் இன்னொரு
மரங்களை வளர்க்க வேண்டும். அவைகளுக்கு பாதுகாப்பு
கொடுத்துக் காடுகளை அடர்த்தியாக வைத்துக்கொள்ள
வேண்டும்.
4. காடுகளில் தீ பற்றிக்
கொள்வது இயற்கை, இந்த தீவிபத்து நிகழ்வைக் கட்டுக்குள்
வைக்க வேண்டும்.
5. பன்முகத்தன்மையைக் கொண்ட உயிரினங்கள் அழிந்து போகாமலிருக்க, காடுகளுடைய
செழிப்புத் தன்மை பாழாகாமலிருப்பதற்கும், அதனைப்
பேணிக்காப்பதற்குமுரிய தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
- ஆகிய செயல் திட்டங்களை
இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்திய அரசு அனைத்து
செயல் திட்டங்களையும் திறமையாகச்
செயல்படுத்தியதோடு, விளம்பரங்கள், போஸ்டர்கள் மூலம் சுற்றுப்புறச்
சூழலுக்கான விழிப்புணர்வின் அருமையை மக்களுக்கு
தெரியப்படுத்தியிருக்கிறது. மேலும் மக்களுக்கு, இயற்கை வளத்தை மேம்படுத்துவதற்கான
செயல் திட்டங்களை நடைமுறையில் திறைமையோடு
செயல்படுத்துவதற்குரிய பயிற்சிக் கூடங்களையும்
அமைத்துக் கொடுத்திருக்கிறது.
1972ஆம் ஆண்டு வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்ற சட்டத்தை
இந்திய அரசாங்கம் அமல்படுத்தி, அதனை நடைமுறைக்குக்
கொண்டு வந்த பெருமையையும் பெற்றிருக்கிறது.
1. வனவிலங்குகளை வேட்டையாடும் சட்டவிரோதமான செயலுக்கு உடனடியாகத்
தடை விதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு சட்டவிரோதமாக வனவிலங்குகளை
வேட்டையாடுபவருக்கு கடுமையான தண்டனை உடனடியாக விதிக்கபட வேண்டும்.
அவைகளுடைய சுதந்திரம் பறிபோகாமலிருக்க தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
2. நோய் நொடிகள் பீடிக்கப்படாமலிருப்பதற்கு
வனவிலங்குகளுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு நோய் பீடிக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உரிய
நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
3. அழிவின் விளிம்பிலிருக்கும் வனவிலங்கினங்களுக்கு அதிகமான அக்கறையும்,
கவனமும் கொடுத்து பாதுகாக்கப்பட வேண்டும்.
4. நோயினால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகளை மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லுவதற்கு வேண்டிய ஊர்திகளை வனத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டும்
ஆகிய
செயல்திட்டங்களை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. மேலும் புலிகளின் எண்ணிக்கை
குறைந்து கொண்டு வருவதால் அவைகளுடைய எண்ணிக்கையை
பெருக்க வேண்டுமென்பதற்காக இந்திய அரசாங்கம் பல அருமையான செயல்திட்டங்களை
வடிவமைத்ததோடு அவைகளை நடைமுறையிலும் சிறப்பாக
செயல்படுத்திக் கொண்டு வருகிறது. புதுமை, நவீனத்துவம், முன்னேற்றம், மாற்றம்,
வல்லரசாகுதல், உலகமயமாக்குதல் ஆகிய முயற்சிகள் புவியின் இயற்கைவளத்தைக்
கொஞ்சம் கொஞ்சமாக நசித்துக் கொண்டு வருகிறது. இத்தகைய முயற்சிகள் இயற்கைக்கு
எத்தகைய பாதிப்பைக் கொடுத்திருக்கும் என்பதை அதனுடைய
சீற்றத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்த முயற்சிகளை விட்டுக்
கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டிருந்தால், மனிதன் எண்ணற்ற உயிரிழப்புகளைச்
சந்திக்க நேரிடும்.
தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறுகிற கரியமில
வாயு பூமியின் மேல்மட்டத்தில் பரவிக் கொண்டு வருவதாலும், புவியினுடைய
வெப்பத்தை அதிகரித்து, மேல்மட்டத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.
தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்துடைய செழிப்புத்தன்மையை சீரழிந்திருக்கிறது,
மேலும் கடலோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும்
மக்கள் தொகையால் உருவாகியுள்ள சத்தங்கள் புவியை அதிர
வைத்திருக்கிறது. இனி வருங்காலத்தில் நதிகளும் மற்றும் ஆறுகளும் வற்றிப்
போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், குடிநீர்
கிடைக்காமல், பட்டினி, பஞ்சம் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு அதிகமான
பேரிழப்புகளைச் சந்திக்க
நேரிடலாம். தொழிற்சாலைகளுடைய முன்னேற்றம் நதிகளை மாசுபடுத்தியிருக்கிறது.
காற்றை மாசுபடுத்தியிருக்கிறது,
நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை மாசுபடுத்தியிருக்கிறது.
சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக அரசு
பல வழிகளை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறது. அவை;
1. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகிற கழிவுப்
பொருட்களால் விளையக்கூடிய அபாயத்தின் தீவிரத்தை
ஆராய்வதற்கு பல ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
2. தொழிற்சாலைகளுடைய கழிவுகள் அதிகபட்சமான அபாயத்தை விளைவிக்கக்
கூடியதாகயிருந்தால் அவைகளுடைய செயல்பாடு வேகத்தை குறைப்பதற்கான வழிகளை
வகுத்துக் கொடுத்திருக்கிறது.
3. மாசுபடிந்த நதிகளை சுத்தமாக்குவதற்கும், மாசுபடிந்த காற்றைச்
சுத்தமாக்குவதற்கும் தகுந்த வழிமுறைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.
4. புவியிலுள்ள சத்தங்களை குறைப்பதற்கான விதிமுறைகளை, போஸ்டர்கள்,
விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது .
5. கடலோரப்பகுதிகளின் செழிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக பல பாதுகாப்பு
திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
இயற்கையோடு
தோழமை கொள்வோம், இயற்கையை அரவணைத்து கொண்டு செயல்படுவோம், இயற்கையின்
தோள்களில் தலைசாய்த்து இளைப்பாறுவோம், இதனைப் புரிந்து
கொண்டு நடந்தால் நாளைய தலைமுறைக்கு ஒரு அழகிய, அருமையான புவியைக்
கொடுக்க முடியும்.
வாருங்கள்
சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்!
இயற்கையை நேசிப்போம்!! இந்த
பூமியைக் காப்பாற்றுவோம்!!!

முந்தைய மனம் திறந்து பார்க்க
