மனம் திறந்து-67
மகாத்மா ஆக முடியுமா?
-சக்தி
சக்திதாசன்.

பார்க்க முடியாத காட்சி, பேச முடியாத மொழி.
பாட முடியாத ராகம், நுகர முடியாத மலர் இவையனைத்துக்கும் விவரிக்கும்
சக்தி இருந்து விட்டால் என் மனதின் உணர்ச்சிகளை விவரிக்கும்
சக்தி எனக்கும் வந்து விடாதா? உலகம் உருள்கிறது அதனோடு உருண்டு கொண்டே நாம்
நேராக நடக்கிறோம்.
உணர்வு என்னும் சக்தி நமக்கிருந்திரா
விட்டால் எத்தனை வகையான உணர்வுகளை நாம் இழந்து விட்டிருப்போம். சோகம், இன்பம்,
ஆத்திரம், அவமானம், அழுகை, சிரிப்பு என விதவிதமான
விளைவுகள் வினாடிக்கு வினாடி நம்மைத் தாக்குகின்றன.
அன்னை என்னும் அன்பு தெய்வத்தின் அன்பின் வலிமையை உணரும் இதயத்தினால்தானே
அந்தத் தாய்மையின் பெருமையை உணர முடிகிறது. தந்தை என்னும் அந்த பாதுகாப்பான
உறவு தரும் இரு இதமான சூடு கொடுக்கும் சுக உணர்வுதானே தந்தையின் அருமையை உணர
வைக்கிறது.
கண்கள் ஒரு கன்னியின் விழிகளின் மீது படரும் போது காளையின் மனதில் உணர்வலைகள்
கிளம்ப ஆரம்பிக்கிறது. ஆனால் அவையனைத்துமே காதல் என்றொரு புனிதமன உறவு
வலைக்குள் அவர்களைச் சிக்க வைப்பதில்லையே! பலரது பார்வைகள் காமம் என்றொரு
அசிங்கமான உணர்வுக்குள் சிக்கித் தப்பித்துக் கொள்கின்றனவே!
ஒரு நிமிடம் தெய்வத்தன்மையைக் கொண்டிருக்கும் சிலர் மறுகணமே மிருக உணர்விற்கு
ஆளாகின்றார்களே! இவ்வுணர்வு மாற்றத்தின் நிகழ்விற்குக்
காரணம் என்ன? விடையில்லா வினாக்கள் மனதினுள் உருண்டு கொண்டிருக்கும் போது தான்
அங்கே தேடல்களின் வேகம் கூடுகிறது.
தேடல்களின் வழி நடக்கும் ஓடுதல்கள் அனைத்தும் உணர்வெனும் ஊருக்குள் நம்மை
அழைத்துச் சென்று விட்டுவிடுகின்றன. மிருக உணர்வினில் இருந்து, மனித
உணர்வினுக்குள் நுழைந்து மகாத்மா உணர்வுகளைத் தாங்கிக் கொள்கின்றவர்கள் தமது
உணர்வினை அடக்கி ஆளப் பழகிக் கொண்டவர்களா? கேள்விகள் ஆழியின் அலை போல
தொடர்ந்து எழுந்து இதயத்தின் ஓரத்திலே நுரைகளைத் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன.
ஆம் உணர்வு ஒரு வலிமை மிக்க சக்தி. அந்தச் சக்தியை நமது
கட்டுப்பாட்டுக்குள் கொன்டு வந்து விட்டால்
வாழ்க்கையில் வெற்றியடையும் வாய்ப்பை அடைகிறோம்,
அவ்வுணர்வுகள் நம்மை அடக்கியாளத் தொடங்கி விட்டால்
வாழ்க்கையில் நாம் வெற்றி அடைந்தோமா? இல்லையா என்பதை புரிந்து கொள்ள
முடியாதவர்களாகப் போய் விடுகிறோம்.
உணர்வே ! உன்னை நான் அறிய முயற்சிக்கிறேன் முயற்சியே ஒரு கடுமையான சோதனையாகவே
இருக்கிறது. உணர்வின் மூலம் ஒருவரை வெறுக்கலாம் அல்லது ஒருவரை நேசிக்கலாம்
வெறுப்பு உணர்வுகளை நேச உணர்வுகளாக மாற்றும் மனிதர்கள் தான் மகாத்மாக்களாகின்றார்களோ?

|