........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

மனம் திறந்து-68

அன்பு செலுத்துவோம்!

                                                                                                -த. சத்யா.

இந்த உலகத்தை செலுத்தும் சக்தி அன்பு மட்டும்தான். பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பது இந்த அன்பு மட்டும்தான். இன்பமும் துன்பமும் நிறைந்த நம் வாழ்க்கையில் நமக்கு ஒரே ஆறுதல் பிறர் நம் மீது செலுத்தும் அன்பு மட்டும்தான். ஒருவரது வாழ்க்கை சந்தோசமாக போகும் போது அவன் உற்றார், உறவினர்கள், உடனிருப்போர் என்று யாரையும் மதிப்பதில்லை. அதே நேரத்தில் அவனுக்குத் துன்பம் வரும் போது அதே மனம்தான் தன் சொந்தம்பந்தம், உற்றார் உறவினர் என்று தேடி அலைகின்றது. பிரச்சனைகள் உள்ள போதும், பிரச்சனைகளைப் பிறரிடம் சொல்லும் போதும், நமக்கு நாமே பாதுகாப்பாக உணர வைப்பதுதான் இந்த அன்பு என்ற ஆயுதம். இன்று சமுதாயத்தில் மிகவும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது இந்த அன்பு என்ற வார்த்தையில் அடங்கியிருக்கும் முதியோர்களின் பிரச்சனைகள்தான். வயது இருக்கும் வரை யாரையும் தேடாத அவர்களின் மனம் வயதானவுடன் தன் மகனோ அல்லது மகளோ தன்னிடம் அன்பாகவும் பாசமாகவும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் விரும்பும் அன்பை மட்டுமே. ஆனால், இன்று பெரும்பாலான வீடுகளில் உள்ள முதியோர்களுக்கு அவர்கள் விரும்பும் அன்பு கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு சுமையாகவே கருதப்படுகின்றனர். இதற்குச் சான்றாக உண்மையில் நடந்த சம்பவத்தை நாம் அனைவரும் நாளிதழ்களில் படித்திருப்போம்.

தினமும் செய்தித்தாளில் ஏதோ ஒரு பக்கத்தில் இந்த மாதிரியான செய்தியை நாம் படித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சமீபத்தில் மூதாட்டி ஒருவர் தன் சொந்தப் பிள்ளையால் கைவிடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டு இரக்கமே இல்லாமல் வீடு வந்து விட்டனர். தன் மகனிடம் அந்தத் தாய் கேட்டது காசோ, பணமோ இல்லை. பாசத்தை மட்டும்தான். கடைசிக்காலம் வரை தன் மகனோ அல்லது மகளோ தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும்தான் அந்த தாயிடம் உள்ளது. அன்பு என்ற வார்த்தை ஆயிரம் அர்த்தங்களுடன் பொதிந்த வார்த்தை. இதுதான் அன்பு என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. அன்பு, பாசம், காதல், நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் பார்த்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது. ஒரு மனிதன் தன் தாயையோ அல்லது உறவினர்களையோ நேசித்தால் அது பாசம் என்றாகிறது. அதுவே தன் காதலியிடமொ அல்லது காதலனிடமொ அன்பாய் இருந்தால் அதை காதல் என்கிறோம். தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ செலுத்தினால் அது நட்பு என்றாகி விடுகின்றது. ஆகவெ காதல், அன்பு, பாசம், நட்பு என்று பல பெயர்களில் பார்த்தாலும் அது அன்பு என்ற ஒற்றைச் சொல்லில்தான் உருவாகிறது என்பதை மனிதர்களாகிய நாம் மறந்து விடக்கூடாது. அன்பு என்ற உணர்வு, உன் மனதிலிருந்து எழ வெண்டும். சந்தோசத்தை விரும்புவதும், கடவுளிடம் அன்பாக இருப்பதும், தாயை நேசிப்பதும், காதலிப்பதும் உணர்வுப் பூர்வமாக செயல்படுத்த வேண்டும். மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரே மருந்து அன்பு ஒன்றுதான். ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் இன்று வரை உணராமலிருப்பதுதான்.

சொல்லுங்கள், அன்பை நாம் எப்படி உணரப் போகிறொம், அன்பாக இருப்பதுதான் அன்பு என்று நாம் எப்போது உணரப் போகிறோம், பலரிடமும் நாம் அன்பாக இருக்கிறோம் என்று சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே நாம் அனைவரிடமும் அன்பாகத்தான் இருக்கிறோமா, காலையில் இருந்து மாலை வரை பல மனிதர்களிடம் பேசுகிறோம், சிரிக்கிறோம், சந்திக்கிறோம். ஆனால் நாம் அனைவரிடமும் உள்ளன்போடுதான் சிரித்துப் பேசுகிறோமா, நம்முடைய உதடுகள் மட்டுமெ புன்னகை செய்கிறது. உள்ளம் என்பது புன்னகை செய்ய மறுக்கிறது. ஏன் நம் மனதில் உள்ளன்பு இல்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றது. பொய்யாகச் சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயத்தில் அனைவரின் வாழ்க்கைச் சக்கரமும் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏதொ ஒன்றை எதிர்பார்த்து அன்பு செலுத்தினால் உண்மையான அன்பை நாம் யாரிடமும் பெற முடியாது. மனம் நிறைந்த அன்பு மட்டுமே நல்ல பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்த செயலும் மனமகிழ்வைத் தரும். இதைத்தான் ஒரு கதை மூலம் நமக்கு புத்தர் விளக்கம் அளிக்கிறார்.

ஒருவன் வயல்வரப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வரும் புலியைப் பார்த்து விட்டான். அவனைப் புலி துரத்த ஓட ஆரம்பித்தான். சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவனது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இதற்கிடையே இரண்டு எலிகள் மரத்தின் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியில் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிழத்துக் கொண்டு மறு கையால் பழத்தைப் பறித்துத் தின்றான். அப்போது அவன் மனதில் பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது என்று தோன்றியது. இக்கதையில் வருகிற கனியைச் சுவைக்கும். மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது. ஆகவே எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அதனை மறந்து விடச் செய்வது பிறர் நம் மீது காட்டும் அன்பு மட்டுமே. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு என்பதை இக்கதை மூலம் புத்தர் நமக்கு புரிய வைக்கின்றார். ஒருவன் நான் கடவுளிடம் அன்பாக இருக்கிறேன் என்கிறான். உண்மையிலேயெ அவன் அன்பாகத்தான் இருக்கின்றானா, இல்லை. வாழ்க்கை இன்பமாக போகும் போது நாம் இறைவனை நினைப்பதில்லை. கேட்டால் கோவிலுக்குச் செல்ல நெரமில்லை என்கிறோம். இல்லையென்றால் வேறு ஏதாவது காரணங்களைச் சொல்கிறாம். அதே மனிதன் துன்பத்தில் இருக்கும் போது தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறான். இறைவா! நீ என் துன்பத்தை போக்கு. நான் உனக்குப் பூசை செய்கிறேன் என்கிறான். கடவுளிடமும் அவனது சுயநலம் வெளிப்படுகிறது. நீ இதைக் கொடு, நான் அதைத் தருகிறென் என்று பேரம் பேசுகிறானே தவிர கடவுளிடம் கூட உள்ளன்போடு வேண்டுவதில்லை.

உயிர்களிடத்து அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். கடவுளின் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீக்கிச் செயல்பட உத்வேகம் பிறக்கின்றது. நம் மீது நாமே அன்பு செலுத்துவதுதான் வழிபாடு. இதைத்தான் மதராசி பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன் அன்பு என்ற சொல்லுக்கு தொடர்புடையாரிடம் மட்டும் உண்டாகும் பற்று எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் பிற உறவினர் அனைவரிடமும், பிற உயிர்களிடத்தும் அது மட்டுமின்றி உலக மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். பண்டைய தமிழ் நீதி நூல்கள் அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமின்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ள வெண்டும் என்கிறது. திருக்குறள் அன்பைப் பற்றிக் குறிப்பிடும் போது அதனை அகத்துறுப்பு என்கிறது. பண்டைய தமிழ்கள் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போலிருக்கின்றது. ஆகவே பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துவதன் மூலம் பல உயிர்கள் இன்று முதியோர் இல்லம் செல்வதை நம்மால் தடுக்க முடியும். ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் நம் வாழ்க்கையும் பிரகாசமாகும்.

த.சத்யா அவர்களின் மற்ற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு