அரசனின் தலைமை அமைச்சன் உக்கா, ஒரு நாள் புத்தரிடம் ஒருவரைப் பற்றிச் சொன்னான்:
“புத்தர் பெருமானே, அவன் எவ்வளவு பெரும் செல்வம் உள்ளவனாக இருக்கிறான்! அது நிலையாக இருக்கிறது. ஆச்சரியம்”
புத்தர், “உக்கா, அவனிடம் எவ்வளவு செல்வம் இருக்கும்?” என்று கேட்டார்.
அதற்கு உக்கா, “அவனிடம் தங்கமும், வெள்ளியும் இருக்கும், அதை யாரால் சொல்ல முடியும்?” என்றார்.
புத்தர், “ஆனால் இவை உண்மையான செல்வமா? இந்தச் செல்வத்திற்கு நெருப்பாலும், நீராலும், அரசர்களாலும், திருடர்களாலும், எதிரிகளாலும், வேண்டாத சந்ததியினராலும் ஆபத்துண்டு” என்றார்.
“அப்படியானால், ஆபத்தில்லாத செல்வம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார் உக்கா.
“இருக்கிறது. நான் குறிப்பிட்டவர்களால் ஆபத்தில்லாத ஏழு செல்வங்கள் உண்டு. அவை; 1. நல்ல நம்பிக்கை, 2. நல்லொழுக்கம், 3. மனசாட்சி, 4. பழிக்கு அஞ்சுதல், 5. நல்ல கல்வி, 6. பெருந்தன்மை, 7. அறிவு ஆகியவைதான் ஆபத்தில்லாத செல்வங்கள்”