முயற்சி இருந்தால் வெற்றியடையலாம்!
ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய தேயிலையை அனைத்துக் கடைகளிலும் விற்பதற்கான கடுமையான முயற்சியில் செயல்பட்டு வந்தார். ஆனால் அந்த பகுதியில் அந்தத் தேயிலை பிரபலமானதாக இல்லை. இருப்பினும், விற்பனை பிரதிநிதியின் வற்புறுத்தலுக்காக ஒரு சிலர் அந்தத் தேயிலைப் பொட்டலங்களை வாங்கி கடையில் வைத்திருந்தனர். ஆனால் ஒரு கடைக்காரர் மட்டும் அந்தத் தேயிலையை வாங்க முடியாது என்று மறுத்து வந்தார்.
உடனே அந்த விற்பனைப் பிரதிநிதி தன் மகளை அழைத்து, அந்தக் கடைக்குச் சென்று அந்த தேயிலையின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா? என்று கேட்டு வாங்கி வரச் சொன்னார்.
இரண்டாவது நாள் வேறு ஒரு சிறுவன், மூன்றாவது நாள் வேறு ஒரு சிறுவன் என்று அந்தக் கடையை நோக்கி அனுப்பிக் கொண்டே இருந்தான்.
வேறு வழியின்றி அந்தக் கடைகாரரும், அந்த விற்பனைப் பிரதிநிதியும் அந்தத் தேயிலைப் பொட்டலங்களைத் தனது கடையில் வாங்கி வைக்கத் தொடங்கினார்.
அவருடைய கடையிலும் அந்தத் தேயிலைப் பொட்டலங்களை பார்த்த சிலர், புதிதாக இருக்கிறதே என்று அதை வாங்க முன் வந்தனர். அந்தப் பிரதிநிதியும் அந்தத் தேயிலையுடன் இலவசங்கள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அந்தத் தேயிலையை மக்கள் மனதில் பதிய வைத்தார்.
நாளடைவில் அந்த தேயிலையில் தயாரிக்கும் தேநீர்தான் சுவையானது என்று பரவலாக மக்களுக்குத் தெரியத் தொடங்கியது.
இரண்டே ஆண்டுகளில் போட்டிக்கான தேயிலைகளைப் பின்னுக்குத் தள்ளி புதிய தேயிலையை வெற்றி பெற வைத்தார்.
முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி அடையலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.