காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. புலி, யானை, மான், முயல், கிளி, குருவி, குயில் போன்ற எல்லா மிருகங்களும், பறவைகளும் அதைக்கண்டு பயந்தன.
சிங்கத்துகுக் கர்வம் வந்தது. பிற எல்லா மிருகங்களையும் துச்சமாக நடத்தியது.
இரவில் மிருகங்கள் தூங்கும்போது வேண்டுமென்றே உரத்த குரலில் கர்ஜிக்கும். மிருகங்களும், பறவைகளும் திடுக்கிட்டு விழிக்கும். அப்போது சிங்கம் அவற்றைப் பார்த்துக் கேலியாகச் கிரிக்கும்.
ஒரு நாள் குரங்குக் குட்டி ஒன்று மர உச்சியில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
அங்கே வந்த சிங்கம் சப்தமாக உறுமியது. குட்டி பயந்து விழித்தது.
அம்மா குரங்கு கை கூப்பிச் சிங்கத்திடம் வேண்டியது.
“சிங்க ராஜா, சிங்க ராஜா, தயவுசெய்து உரக்க உறுமாதீர்கள். என் குட்டி பயப்படுகிறது”
“போடா குரங்குப் பயலே. நான் அப்படித்தான் சப்தம் போடுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது”
சிங்கம் தொடர்ந்து சப்தமிட்டது. இரவு முழுக்கக் குரங்கும் அதன் குட்டியும் தூங்கவேயில்லை.
குரங்குக்குப் பல நண்பர்கள். அதில் ஈ நெருங்கிய நண்பன். குரங்கு தோழனிடம் தன் சோகக் கதையைச் சொன்னது.
ஈ மகா புத்திசாலி. கொஞ்ச நேரம் ஆலோசித்தது. அப்போது சொன்னது.
“குரங்கு நண்பா, நான் உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்”
குரங்குக்குச் சிரிப்பு வந்தது.
“ஈயாரே,ஈயாரே, யானை, புலிகள்கூடச் சிங்கத்தைக் கண்டு பயந்து ஓடுகின்றன. நீங்கள் பொடியன். உங்களால் என்ன செய்யமுடியும்?”
“என்னோடு வாருங்கள். சிங்கத்தின் குகை அருகே போகலாம். நீங்கள் பத்திரமாக மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு நான் நடத்தப் போகும் வேடிக்கையைப் பாருங்கள்”
ஈ சிங்கத்தின் மூக்குக்குள் நுழைந்தது. அதன் மூக்கைக் குடைந்தது. சிங்கத்துக்கு உபத்திரவம் தாங்க முடியவில்லை. கோபத்தில் கத்தியது.
“யாரது என்னைத் தொந்தரவு செய்வது? மரியாதையாகப் போய்விடு”
“மாட்டேன்,மாட்டேன்”
ஈ சிங்கத்தின் மூக்கிலிருந்து வெளியே வந்தது, அதன் முகத்தைச் சுற்றி ரீங்காரமிட்டது, மறுபடியும் மூக்கினுள் புகுந்தது.
“ஈயே, பொடிப்பயல் நீ. மரியாதையாக ஓடிவிடு. இல்ல்லாவிட்டால் உன்னை என்ன செய்வேன் தெரியுமா?”
“என்னை என்ன பண்ணுவீங்க? என்னை என்ன பண்ணுவீங்க?”
ஈ கேலி செய்தது. சிங்கத்துக்கு ஈயின் செய்கை சித்திரவதையாகிவிட்டது. இப்போது ஈயிடம் வேண்டிக்கொண்டது.
“ஈயாரே, ஈயாரே, என்னை விட்டுவிடும்”
“நீங்கள் இனிமேல் எந்த மிருகத்தையோ, பறவையையோ தொந்தரவு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். அப்புறம் நான்தான் காட்டுக்கு ராஜா என்று சப்தமாகச் சொல்லுங்கள்”
சிங்கம் கத்தியது, “இனிமேல் காட்டுக்கு ராஜா நானில்லை, ஈ தான்”
குரங்கு ஈக்கு நன்றி சொன்னது.
இப்போது ஈக்கு, தான்தான் காட்டுக்கு ராஜா என்ற நினைப்பும் கர்வமும் வந்துவிட்டது. கண்ணை மூடிக்கொண்டு உயரே பறந்தது. அங்கே, ஒரு சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது.
ஈ மகாராஜாவைச் சிலந்தி சாப்பிட்டு ஏப்பம் விட்டார்.