சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுலப் பெண் பாம்பு உருவம் எடுத்து, கயிலாயத்தினுள் இருப்பவர் யாரும் அறியாமல் உள்ளே நுழைந்தாள்.
பிறகு, பார்வதி தேவியாக உருவ மாற்றம் பெற்றுச் சிவபெருமான் அருகில் சென்றாள்.
அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன்னிடமிருந்த ஆயுதத்தைக் கொண்டு ஆடியை அழிக்க முயன்றார். அப்போது, அந்த ஆயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியைப் புனிதமடையச் செய்தது.
அவள் இறைவனை வணங்கி, “ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என் மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டேன், என்னை மன்னித்தருள வேண்டும்” என்று வேண்டினாள்.
ஆனால் சிவபெருமான், “என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப் போல வடிவம் கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு. எனவே நீ பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய்” என்று சாபம் கொடுத்தார்.
அவள் தன்னை மன்னித்துச் சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டாள்.
அதற்குச் சிவபெருமான், “பெண்ணே, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த மாதம் இறைவி பார்வதி தேவிக்கு உகந்த மாதமாகவும் அமையும். அவ்வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய்” என்று அருளினார்.
இறைவனால் சாபம் பெற்ற ஆடி என்ற தேவலோகத்துப் பெண்ணேப் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். இறைவனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வநிலை பெற்ற வேம்பு மரம் ஆதிசக்தியின் தோற்றமாகவும் ஆனது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்ட வேம்பு மரமாக இருக்கிறாள் அந்த ஆடிப்பெண்.