திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது என்று சொல்கின்றனர். 24 தீர்த்தங்களில் நீராடினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்...
1. முகாரம்ப தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம் – இந்நீரில் நீராடுவோர் ஒருமை உள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் வட திசைக்கு அதிபரான குபேரனின் அன்பைப் பெற்று, அனைத்துச் செல்வங்களையும் பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம் – இந்நீரில் நீராடுவோர் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலகப் பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம் – இந்நீரில் நீராடுவோர் கங்கை, யமுனை, காவிரி முதலியவற்றில் நீராடினால் கிடைக்கும் பலனைப் பெறுவர்.
7. காயத்ரி தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
8. சாவித்ரி தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
9. சரஸ்வதி தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
11. வயிரவ தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் நீராடியதால் அடையும் பலனை அடைவர்.
12. துர்க்கை தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
13. ஞானதீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமையைப் பெறுவர்.
16. முனிவர் தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
18. பாவநாச தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியப் பலன்களையும் அளிக்க வல்லது.
19. கந்தப்புட்கரணி தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடப்பர்.
21. சேது தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைப் பெற்றிடுவர்.
22. கந்தமாதன தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம் - இந்நீரில் நீராடுவோர் அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாகப் பலனைக் கொடுக்கும்.
24. தென் புலத்தார் தீர்த்தம் - இந்நீரில் நீராடி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு, இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழிக் கிணற்று நீரில் மட்டுமே அதிக அளவில் நீராடி வருகிறார்கள். கோவிலுக்குத் தெற்கே 200 மீட்டர் தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராக இருப்பது குறிப்பிடத்தக்கது.