சிறீபலி பூசை என்பது சைவ சமயத்தில் சிவாலயங்களில் உள்ள பலிபீடத்திற்கு செய்யப்படுகின்ற பூசையாகும். இந்தப் பூசையை ஸ்ரீவேலி என கேரளத்தில் செய்கிறார்கள். வடமொழியில் ஸ்ரீபலி பூஜை என்று அழைக்கின்றனர்.
இந்தப் பூசையானது மூன்று சந்திப் பொழுதுகளிலும், அர்த்தயாம பூஜையின்போதும் செய்யப்படுகிறது. இறைவனுக்கு மலர், நீர், அன்னம் ஆகியவற்றோடு, இசையும், நடனமும் என அனைத்தையும் அர்ப்பணிக்கும் நிகழ்வாக இந்தப் பூசை அமைந்துள்ளது.
சிவாலயத்தில் உள்ள பலிபீடத்தின் அருகே ஸ்ரீபலி கொள்ளும் தேவர் அல்லது அஸ்த்ரதேவர் என்ற செப்புத் திருமேனிகளை தலையில் சுமந்து கொண்டு ஒரு பூசகர் நிற்பார். விளக்கு ஏந்திய ஒருவரும், இசைக் கலைஞர்களும், நாட்டியப் பெண்ணும் இருப்பார்கள். பலிபீடத்திற்கு அர்ச்சகர் பூசை செய்யும் போது, இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைப்பர், நாட்டியப் பெண் நடனம் ஆடுவார். அர்ச்சகர் அன்னம், நீர், மலர் ஆகியவற்றை பலிபீடத்தில் வைத்துப் பூசை செய்வார். நாட்டியப் பெண் ஹஸ்தம் எனும் முத்திரையைக் காட்டியவாறு நடனம் ஆடுவாள். அர்ச்சகரும் ஹஸ்த முத்திரையைக் காட்டிப் பூசை செய்வார். மத்தளம், கரடிகை, வெண்கலத்தாளம், பாடகம், எக்காளம் ஆகிய இசைக்கருவிகள் இந்த பூசையின் போது வாசிக்கப்பட்டதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.