இந்து சமயக் கோயில்களை வலம் வருகின்ற முறையினை ‘பிரதட்சணம்’ என்கின்றனர்.
நாரதர் கொடுத்த மாம்பழத்திற்காக சிவ - பார்வதி மகன்களான விநாயகருக்கும், முருகனுக்கும் போட்டி ஏற்பட்டது. சிவபெருமான் நடுவராக இருந்து, முதலில் உலகைச் சுற்றி வருபவருக்கே மாம்பழம் என்று சொன்னார். அவ்வேளையில், முருகன் தன்னுடைய வாகனமான மயிலின் மீது ஏறி, உலகைச் சுற்றினார். ஆனால், விநாயகர் தன்னுடைய பெற்றோர்களான பார்வதி மற்றும் சிவபெருமானை வலம் வந்து வணங்கினார். பெற்றோரை வணங்குவது உலகை வணங்குவதற்கு சமம் என்று சொன்னார். அவரது செயல்பாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் மாம்பழத்தை விநாயகருக்கேக் கொடுத்தார். இந்நிகழ்வே முதன் முதலாக ஏற்பட்ட பிரதட்சணமாகக் கருதப்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டே, ஆலயப் பிரதட்சண முறையை விநாயகரே அறிமுகம் செய்தார் என்கின்றனர். கோயிலை வலம் வருவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
* அங்கப் பிரதட்சணம் - உடல் அங்கங்களை பூமியில் படும்படி பிரகாரத்தைச் சுற்றிலும் உருள்வது
* அடிப் பிரதட்சணம் - கால்களை அடி மேல் அடி வைத்து பிரகாரத்தைச் சுற்றி வலம் வருவது
* ஆத்ம பிரதட்சணம் - தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பிரகாரத்தை வலம் வருவது.
* சோம சூக்தப் பிரதட்சணம்
* வேப்பிலை ஆடையோடு பிரதட்சணம்
* கரும்பு தொட்டில் பிரதட்சணம்
இது போன்று, பிரதட்சணத்தில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன அம்மன் கோயில்களில் வேப்பிலை ஆடைப் பிரதட்சணம் முறையும், சிவாலயங்களில் சோம சூக்தப் பிரதட்சண முறையும் தனித்துவமானவையாகக் கருதப்படுகின்றன.
இந்து சமயக் கோயில்களை எண்ணிக்கை அடிப்படியில் பிரதட்சணம் செய்ய வேண்டும் என்பதும், அவ்வாறு செய்யப்படுகின்ற பிரதட்சணங்களுக்கு ஏற்பத் தனிப்பட்ட பலன் உண்டு என்பதும் நம்பிக்கையாகும்.
* மூன்று முறை - விரும்பிய காரியம் நிறைவேறும்.
* ஐந்து முறை - காரிய வெற்றி.
* ஏழு முறை - நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி.
* ஒன்பது முறை - குழந்தைப் பேறு.
* பதினொரு முறை - ஆயுள் விருத்தி.
* பதினைந்து முறை - செல்வம் பெருகும்.
* ஆயிரத்து எட்டு முறை - விரும்பிய பெண் மனைவியாகக் கிடைப்பாள்.