பண்டைய எகிப்தின், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் மற்றும் 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுப்பிய ஊசி போன்ற செங்குத்தான மூன்று கல்தூபிகள், கிபி 1819-ஆம் ஆண்டில் அலெக்சாந்திரியா, அல்-உக்சுர் மற்றும் ஹெலியோபோலிஸ் நகரங்களைத் தொல்லியல் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்டன.
இக்கல்தூபிகளுக்குப் பிரான்சு நாட்டவர்கள் கிளியோபாட்ராவின் ஊசிகள் (Cleopatra's Needles) எனப் பெயரிட்டனர். பண்டைய எகிப்தை கிமு 332 முதல் கிமு 32 முடிய ஆண்ட தாலமி வம்சத்தின் ஏழாம் கிளியோபாட்ராவுக்கும் இக்கல்தூபிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
19-ஆம் நூற்றாண்டில் இந்த மூன்று கல்தூபிகளைச் சீரமைத்து அதில் ஒன்று நியுயார்க் நகரத்திலும், ஒன்று இலண்டன் நகரத்திலும், ஒன்று பாரிசு நகரத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் கிமு 1450-இல் ஹெலியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய கிளியோபாட்ரா ஊசியை, கிபி 1819-இல் எகிப்திய மன்னர் முகமது அலி பாட்சா, ஐக்கிய இராச்சியத்திற்குப் பரிசாக வழங்கினார். சில காரணங்களுக்காக இது எகிப்திலே இருந்தது. பின்னர் 1877-இல் இது இலண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த கிளியோபாட்ரா ஊசி, இலண்டன் கிளியோபாட்ரா ஊசி எனப்படுகிறது.
எகிப்திய இசுலாமிய சுல்தான் முகமது அலி பாட்சாவால், ஐக்கிய அமெரிக்காவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் கிளியோபாட்ரா ஊசி நியூயார்க் நகரத்தின் மையத்திலுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த கிளியோபாட்ரா ஊசி, நியுயார்க் கிளியோபாட்ரா ஊசி என்றழைக்கப்படுகிறது.
எகிப்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் என்பவர் அல்-உக்சுர் எனுமிடத்தில் நிறுவிய இந்தக் கல்தூபியை, கிபி 1828 ஆம் ஆண்டில் எகிப்தின் சுல்தான் முகமது அலி பாட்சா, பிரான்சு மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பிரான்சில் நிறுவப்பட்டுள்ள இந்தக் கிளியோபாட்ரா ஊசி, பாரிஸ் கிளியோபாட்ரா ஊசி என்றழைக்கப்படுகிறது.