ஆண், பெண் இருபாலருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்றவாறு இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக, மரபு வழியில் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளை நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்று சொல்கின்றனர்.
ஆண்களுக்குரிய நாற்பண்புகளாக, அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்ற நான்கு பண்புகளாகும்.
1. அறிவு
அறிவு என்பது எந்தப் பொருளானாலும், அந்தப் பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.
2. நிறை
நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்து, போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.
3. ஓர்ப்பு
ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்.
4. கடைப்பிடி
கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது, “நன்றென அறிந்த பொருளை மறவாமை” என்று கொள்ளலாம். ஆத்திசூடியும் இதனை, “நன்மை கடைப்பிடி” என்கிறது.
பெண்களுக்குரிய நாற்பண்புகளாக அகப்பண்புகளான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளாகும். (முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் இந்த நாற்பண்புகளை அடக்குமுறையின் வடிவம் என்று சொல்கின்றனர்)
1. அச்சம்
அச்சம் என்பது வரவிருக்கும் அபாயம் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும். பய உணர்வு என்று கருதப்படும்.
2. மடம்
மடம் இது மடமை எனக் கூறப்படும். அறிந்த ஒரு தகவலைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக் கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது.
3. நாணம்
நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும்.
4. பயிர்ப்பு
தாய், தந்தை தவிர்த்து, வேற்று நபர் உடல் பரிசம் பட்டதும் ஏற்படும் கூச்ச உணர்வு என இது விளக்கப்படுகிறது.