எகிப்தில் இரண்டாம் நாள் சுற்றுலாவைத் திட்டமிட்டு இருந்தோம். கெய்ரோவிலிருந்து 218 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் அலெக்சாண்ட்ரியாவை ஒரே நாளில் சுற்றிப் பார்ப்பதே எங்கள் திட்டம்.
கெய்ரோவிலிருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கு ரயிலில் போனால் 3 மணி நேரத்தில் போய்விடலாம். கட்டணம் 25-லிருந்து 60 அமெரிக்க டாலர்கள். பஸ்ஸில் போனால் நான்கு மணி நேரத்தில் போய்விடலாம்.. கட்டணம் 5-லிருந்து 12 அமெரிக்க டாலர்கள். நாங்கள் எங்கள் வசதிக்காக முகமதின் டாக்ஸியையே தேர்ந்தெடுத்தோம்.
சரியாக காலை 5 மணிக்கு காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டார் முகமது. எங்களுக்கு இரண்டு கிலோ ஆரஞ்சு பழம் பரிசளித்தார். அழகிய முகமன் பரிமாற்றம்.
அதிநவீன கெய்ரோ-அலெக்சாண்டரியா பாலைவனச் சாலையில் கார் பாய்ந்தது. முகமது காரை ஒரு பந்தயக்குதிரை போலச் செலுத்தினார். ஸ்பீடாமீட்டர் 120 கிமீ வேகத்தில் முள் நிற்பதை காட்டியது.
தூரத்தில் அலெக்சாண்ட்ரியா துறைமுக நகரம் மெடிட்டரேனியன் கடலின் மணப்பெண்ணாய் காட்சி அளித்தது.
நைல் நதியின் வடக்கு மூலையில் அலெக்சான்ட்ரியா சம்மணமிட்டு அமர்ந்திருந்தது.
எகிப்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்.
அலெக்சான்ட்ரியா நகரத்தை கிமு 331ல் அலெக்சான்டர் தி கிரேட் நிறுவினார். மொத்தப் பரப்பளவு 1661 சதுர கிமீ. அலெக்சான்ட்ரியா விஞ்ஞானம், கலாச்சாரம் மற்றும் கல்வியின் உறைவிடம். இந்நகரின் கவர்னர் பெயர் அய்மான் முகம்மது இப்ராகிம் அஹமது அதேயா.
இடையில் ஒரு இடத்தில் இறங்கி தேநீர் பருகினோம்.
அலெக்சான்ட்ரியாவில் நாங்கள் முதலில் பார்த்தது கிரீக்கோரோமன் மியூசியம். ஒருவருக்குக் கட்டணம் 400 எகிப்தியன் பவுண்ட் அல்லது 765 ரூபாய். பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை. இந்த அருங்காட்சியகம் அமைய முக்கியமாக இருந்தவர் இத்தாலிய அறிஞர் ஜியுசெப் போட்டி. கிபி1892ல் கேடிவ் அப்பாஸ் ஹெல்மி 2 இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தை 2005 ல் மூடி 2023 ல் மறுபடியும் திறந்தனர். இந்த அருங்காட்சியகத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கிபி ஏழாம் நூற்றாண்டு வரையிலான நாணயங்கள், சிலைகள், மண்பாண்டங்கள் மற்றும் மம்மிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏபிஎஸ் காளை சிலை, டனக்ரா சிறு உருவங்கள், பெரிய கல் நினைவுச்சின்னங்கள் என 40000 கலைப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்துள்ளன. அருங்காட்சியகங்களைப் பார்த்தாலே ஆர்னிகாவுக்கு வால் முளைத்து விடும். அங்குமிங்கும் தாவினார்.
கண்கள் மின்னும். பழங்காலப் பொருட்களுக்குள் கூடு விட்டு கூடு பாய்வார். பழங்காலப் பொருட்களின் பழைமையை நுகர்வார். ஆர்னிகாவுடன் 40 வருடங்கள் குடும்பம் நடத்தி எனக்கும் அருங்காட்சியகங்களின் மேல் தனிக்காதல் வந்துவிட்டது.
ஒரு அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார் என்றால் குறைந்தபட்சம் 200 ஒளிப்படங்களாவது எடுப்பார். 90 சதவீத ஒளிப்படங்களில் நான்தான் இருப்பேன். பத்திரிகைகளில் அவரது ஒளிப்படங்களைப் பார்த்துப் பார்த்து அவருக்குத் திகட்டிவிட்டது. ஒளிப்படத்தில் நீ இருந்தால் என்ன, நான் இருந்தால் என்ன, இரண்டும் ஒன்றுதான் என்பார்.
அருங்காட்சியத்தைப் பார்த்துவிட்டுக் காருக்கு வந்தோம். முகமது தயாராக இருந்தார். காரில் ஏறிக் கொண்டோம்.
அடுத்து, புராதன ரோமானிய நாடக அரங்கிற்குச் சென்றோம். கட்டணம் 200 எகிப்தியன் பவுண்ட் அல்லது 382 ரூபாய். பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை.
பண்டைய ரோமானிய நாடக அரங்கம் கோம் எல்-டிக்கா தொல்பொருள் தளத்தில் அமைந்துள்ளது.
கிபி 1960ல் ஒரு போலந்து தொல்பொருள் ஆய்வு பயணக் குழுவால் இந்த நாடக அரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆன 13 அரைவட்ட இருக்கை வரிசைகள். வண்ணமயமான மொசைக்குகளைக் கொண்ட ஒரு இசைக் குழு மேடை. அஸ்வானிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல் தூண்கள்.
மாவீரன் அலெக்சான்டரின் கல்லறை இருப்பதாக கருதப்பட்ட ஒரு இடத்தில் தற்செயலாக இந்த நாடக அரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நாடக அரங்கம் கிபி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் கிபி 4 மற்றும் கிபி 6ஆம் நூற்றாண்டு புதுப்பிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் இந்த நாடக அரங்கின் ஒரு பகுதி அழிந்தது. முதலில் இசை மற்றும் கல்வி நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கமாக இருந்து பைசாந்தியக் காலத்தில் பொதுக்கூட்டங்களுக்காக இந்த நாடக அரங்கு பயன்படுத்தப்பட்டது.
இருக்கை அமைப்பு. கிரேக்க எண்களால் குறிக்கப்பட்ட சுமார் 600 - 800 பார்வையாளர்கள் அமரக்கூடிய குதிரைலாடம் போன்ற வடிவமுடைய பளிங்கு அடுக்குகள். இளம்சிவப்பு கிரானைட் தூண்கள். சுற்றியுள்ள வளாகத்தில் அரச குளியல் அறைகள், விரிவுரை அரங்குகள், ரோமானிய குடியிருப்பு மாளிகை அடங்கியுள்ளன.
முழுமையாக ரசித்துவிட்டு ராணிகளின் ஆபரணங்களை தொகுத்து காட்சிப்படுத்தப்பட்ட ராயல் ஜுவல்ஸ் போனோம். கட்டணம் தலைக்கு 420 ரூபாய். தொடர்பு எண் +20 3 5828348. பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை. அரச நகைகள் அருங்காட்சியகம், ஜிசெனியா பகுதியில் அமைந்துள்ளது. இளவரசி பாத்திமா அல் சஹ்ரா அவர்களின் முன்னாள் அரண்மனையே தற்போதைய அரச நகை அருங்காட்சியகம். எகிப்து அரச குடும்பத்தினரின் (முகமது அலி வம்சத்தினர்) தங்கம், வைரம் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த மணி மகுடங்கள், நகைகள் மற்றும் அரிய கலைப்பொருட்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் 11, 500 வகை நகைகள் கண்காட்சி படுத்தப்பட்டுள்ளன. முகமது அலி பாசாவின் நகைகள். பரீதா ராணியின் வைரம் பதித்த மகுடம் அவற்றில் அடக்கம். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எங்களுக்காகக் காத்திருந்தார் முகமது.
அடுத்து Oaitbay Citadel போனோம். அதன் தமிழ் அர்த்தம் கைட்பே கோட்டை. இந்தக் கோட்டை எகிப்து நாட்டின் அலெக்சான்ட்ரியா நகரின் மத்தியத் தரைக் கடற்கரையில் அமைந்துள்ள 15ஆம் நூற்றாண்டு பாதுகாப்பு அரண் ஆகும். இது பழங்காலத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கத்தின் இடிபாடுகள் மீது 1477 - 1479 ஆம் ஆண்டு சுல்தான் அல் அஷ்ரப் சைப் அல் தின் கைப்பே என்பவரால் இக்கோட்டை கட்டப்பட்டது.
இது எகிப்து நாட்டின் அலெக்சான்ட்ரியாவின் பாரோஸ் தீவின் வடக்கு மூளையில் அமைந்துள்ளது. சுண்ணாம்புச்சுவர்களும் வட்ட வடிவக் கோபுரங்களும் கொண்ட சதுர வடிவ கோட்டை இது. கட்டணம் தலைக்கு 200 பவுண்டு அல்லது 374 ரூபாய். பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. கைட்பே கோட்டைக்கு நெரிசலான மக்கள் கூட்டத்திற்கு இடையேதான் போனோம். கோட்டையில் இருந்து பார்க்க மத்திய தரைக்கடல் ஆர்ப்பரித்தது.

அடுத்து Pompey’s Pillar போனோம். தமிழில் பாம்பேயின் தூண். இந்த பாம்பே தூண் சிவப்பு அஸ்வான் கிரானைட்டால் செய்யப்பட்ட 88 அடி உயரம் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ரோமானிய வெற்றித் தூண் ஆகும். பெயர்தான் தளபதி பாம்பேயை கௌரவிக்கிறதே தவிர உண்மையில் இந்த தூண் பேரரசர் டயோகிளிஷியனையே கௌரவிக்கிறது. இந்த வெற்றித்தூண் கிபி298 மற்றும் 302 க்கும் இடையில் பேரரசர் டயோகிளிஷியனை கொண்டாடுவதற்காக ரோமானிய கவர்னர் போஸ்டுமஸால் கட்டப்பட்டது. கடுமையான முற்றுகைக்குப் பிறகு பட்டினியால் வாடிய நகரத்திற்கு உணவளித்ததற்காக டயோகிளிஷியன் கௌரவிக்கப்பட்டார். இடைக்காலத்தில் சிலுவைப் போர் வீரர்கள் இந்த தூண் பாம்பேயின் சாம்பலைக் கொண்டிருப்பதாக தவறாக எண்ணினர்.
அடுத்து எங்கள் கார் Catacomb எனப்படும் கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க நிலத்தடி சுடுகாட்டுக்குப் போனது. 1900ல் ஒரு கழுதை சுரங்கத்தில் விழுந்தபோது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல அடுக்குகளை கொண்ட இந்தப் பாறையில் செதுக்கப்பட்ட தளம் இது. இந்தச் சுடுகாடு பண்டைய எகிப்திய கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் தனித்துவமான கலைநயமிக்க கலவைக்காக போற்றப்படுகிறது. இந்தச் சுடுகாட்டுக்கு மூன்று நிலைகளும் சுழல் படிக்கட்டுகளும் உள்ளன.
இங்கே கல் சோபாக்கள் கொண்ட ஒரு விருந்து மண்டபம் உள்ளது. இங்கு துயருற்ற குடும்பங்கள் கூடி உணவருந்தி இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். கிபி 215ல் ரோமானிய பேரரசர் கராகல்லாவில் நிகழ்த்திய பெரும் படுகொலைகளை நினைவுபடுத்தும் கராக்கல்லா மண்டபமும் இங்கு உள்ளது, கிபி 2ஆம் நூற்றாண்டில் இந்த இடுகாடு ஒரு செல்வந்தர் குடும்பத்திற்காகக் கட்டப்பட்டு, பின் பொது உபயோகத்திற்கு வந்து கிபி 4 ஆம் நூற்றாண்டில் கைவிடப்பட்டது. கட்டணம் 200 எகிப்தியன் பவுண்ட் அல்லது 375ரூபாய். பார்வை நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை.
எங்கள் மகள் ஜாஸ்மின் அலெக்சான்ட்ரியாவின் ராட்சச நூலகமான Bibliotheca Alaxandrina -வுக்கு டிக்கெட் மறக்காமல் எடுக்கச் சொல்லி இருந்தோம். அந்த டிக்கெட் மட்டும் எடுக்க முடியவில்லை என கை விரித்திருந்தாள் ஜாஸ்மின்.
ஆர்னிகா படபடத்தார்., “அலெக்சான்ட்ரியா வந்து இந்த நூலகத்தைப் பார்க்கலேன்னா எப்படி? நேராகப் போவோம்… கையக் காலைப் பிடித்து டிக்கெட் வாங்குவோம். டிக்கெட் தரலைன்னா வெளியே நின்று சாஷ்டாங்கமாக விழுந்து அந்த நூலகத்தைப் பார்த்துவிட்டு வருவோம்!”
நூலகத்துக்குள் நுழைந்த எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது!