அன்றும் இன்றும் - 1
அன்றைய நாளில் கால்நடையாக
அயலூர் சென்றோம் நோயில்லை !
ஆதவன் எழுமுன் துயிலெழச் செய்தோம்
அழகிய உடலில் நோயில்லை !
நன்றென எண்ணிக் காய்கறி உண்டோம்
நலிவும் மெலிவும் வரவில்லை !
நாள்தொறும் ஆற்றில் குளத்தில் குளித்து
நீச்சலடித்தோம் அயர்வில்லை !
இன்றைய நாளில் ஊர்தியில் அன்றி
எங்கும் எதற்கும் செலல் இல்லை !
இரவில் விழித்துப் பகலில் உறங்கும்
இழிகுணம் இன்னும் விடவில்லை !
கண்டதை உண்டு வயிறும் வாழ்வும்
கனலாய் எரிவது நினைவில்லை !
கால்கள் அளைந்திட அறையில் குளியல்,
நீச்சல் கற்கவும் வழியில்லை !
அன்றைய மாந்தன் நீராகாரம்
அருந்தி நலமுடன் வாழ்ந்திட்டான் !
அமுதாய்ப் பழைய சோறும் தயிறும்
அளவாய் உண்டு மகிழ்ந்திட்டான் !
இன்னலம் நல்கும் எருவை இட்டான்;
எள்ளும் கொள்ளும் விளைத்திட்டான் !
எங்கணும் கரும்பும் நெல்லும் விளைந்தது
இனிதாய் வாழ்வைக் கழித்திட்டான் !
இன்றைய மாந்தன் எழுந்ததும் குளம்பியை
இரைப்பைக் குள்ளே ஊற்றுகிறான் !
இட்டளி சத்துணி இரண்டையும் மாந்தி
இருக்கும் வலுவையும் இழக்கின்றான் !
நன்மைகள் தாரா உரத்தை, மருந்தை
நயந்தே வயலில் தெளிக்கின்றான் !
நலிவை ஊட்டும் வேதிப் பொருள்களை
நாளும் உண்டு இளைக்கின்றான் !
அன்றைய மாந்தன் உண்மையைப் பேசி
நன்மையைச் செய்து வாழ்ந்திட்டான் !
இன்றைய மாந்தன் பொய்களை விற்றுப்
பைகளைப் வாங்கித் தாழ்ந்திட்டான் !
அன்றைய மாந்தன் நேரிய வழியில்
ஈட்டிய பணத்தை ஈந்திட்டான் !
இன்றைய மாந்தன் கொள்ளை அடித்துக்
குவிப்பதில் மிகவும் தேர்ந்திட்டான் !
அன்றைய மாந்தன் ஏய்த்துப் பிழைத்தல்
ஈனத் தொழில் என வாழ்ந்திட்டான் !
இன்றைய மாந்தன் எதையும் செய்யும்
இழிகுணம் தன்னில் வீழ்ந்திட்டான் !
அன்றைய உலகம் அமைதியும் வளமும்
அரும்பிடச் செழித்து இலங்கியது !
இன்றைய உலகம் பித்தம் பிடித்தவர்
ஆட்சியில் நித்தமும் அழிகிறது !
கண்கள் இருந்தும் குருடாய் வாழும்
மாந்தரை நினைத்தால் துயிலில்லை !
கவலை மனதில் சடுகுடு ஆடும்
காட்சியை நினைத்தால் துயிலில்லை !
பெண்கள் இங்கே பாலியல் துன்பம்
அடைதல் கண்டால் துயிலில்லை !
பேய்கள் போல ஊர்தியில் பறக்கும்
பேதையை நினைத்தால் துயிலில்லை !
மன்பதை தன்னில் நீதியும் நேர்மையும்
மடிவதைக் கண்டால் துயிலில்லை !
மானம் பெரிதென வாழ்ந்த தமிழினம்
மயங்குது மதுவில் துயிலில்லை !
அன்பும் அருளும் நலியுது நாட்டில்
அந்தோ தமிழா ! உணர்வாயா ?
அன்னைத் தமிழைக் கண்போல் காக்கும்
அறிவை நீயும் பெறுவாயா ?
- பாலு ராமச்சந்திரன், எண்டப்புளி, தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.