இழந்த காதல்..!
அவளும் பழகினாள்
அவனும் பழகினான்
ஆனால்
அவள் காதலோடு
பழகவில்லை என்றாள்..!
அவள் காதலை
அவன் இழந்து விட்டான்...!
இந்த உலகில்
யார்தான்
எதைத்தான்
இழக்கவில்லை...?
மழை ஓய்ந்த பின்னும்
அழுதுகொண்டிருப்பது
கூரைதான்
கோபுரமல்ல...!
பஞ்சு மெத்தையில்
படுத்துக் கிடந்தாலும்
நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சில் குத்துவது
அவள் சொன்ன
வார்த்தைகள்தான்...!
அவளோடு பழகிய
இறந்தகாலம்
உயிர் பெறுவது
நினைவுகளால் மட்டுமே...!
மலரின் நறுமணத்தை
காகிதப் பூவில் தேடியது
அவன் தவறுதான்...!
தென்றலைச்
சோலைக்குள் தேடாமல்
தெருவில் தேடியது
அவன் குற்றமே...!
தோல்வியை ஏற்றுக் கொண்டான்...!
பாறைகள் தடுப்பதால்
வேர்கள் தளர்ந்து விடுவதில்லையே?
நியான் விளக்கு
நிராகரித்தாலென்ன?
ஏதோ ஓர்
இருண்ட வீட்டில்
ஒளி வீச
காத்துக் கிடக்கிறது
அவனது
தனிமைத் தீபம்...!
எத்தனையோ சொல்ல வேண்டும்
எவரறிவார் அவன் மனதை...?
- பாளை. சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.