புதுக்கதை...?
வரப்புமண் எடுத்து
வாயின் நீர்சேர்த்து
கறையான் கட்டிய
கவின்மிகு மாளிகை
கம்பீரமாய்...
குட்டிக்குட்டிக் கோபுரங்களுடன்...!
மழையும் வெயிலும்
தாக்கவில்லை...
மனிதனும் அச்சத்தால்
அழிக்கத்
துணியவில்லை...!
அட
அங்கும் வந்தது
ஆக்கிரமிப்பு-
ஒன்றுசேர்ந்து
ஓராயிரம் கறையான்கள்
உருவாக்கிய வீட்டில்
சத்தமின்றி
சடங்குகளின்றி
இடம் பிடித்தது பாம்பு...!
இது
இந்தியாவின்
முந்தைய கதையா...?
இல்லை - இன்று
வீட்டை வாடகைக்கு
விட்டவன் கதையா...?
எந்தக் கதையானால் என்ன...?
இதோ
இன்னொரு புதுக்கதை-
பால் செம்புடன்
போய்க் கொண்டிருக்கிறார்கள்
பாம்புக்குப் பால் ஊற்ற...!
- செண்பக ஜெகதீசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.