தோழமை தொலையாது...!
நமதான தோழமை
தொலைந்து போகவில்லை
தொலைதூரத்தில் உள்ளது...
#
அவ்வப்போதான
ஞாபகப் பயணத்தில்
ஏறி இறங்கிக்கொள்ளும்
நடந்தவைகள்...
#
தடுப்பூசி போடுகையில்
நான் அழுக நீ சிரிக்க
நீ அழுக நான் சிரிக்க
அப்பார்வை வழி தான்
நட்பு உயிர் புகுந்ததோ...
#
ஆரம்பப் பள்ளிக்கூடம்
அருகருகே அமர
தத்தமது பெயர்களை
பதிவு செய்தோம்
புரிதலில் புன்முறுவல்
முடிச்சிட்டுக் கொண்டோம்...
#
உடைக்க முடியா
கல்கோணாவை
மாறி மாறி சப்பி
ஏற்ற தாழ்வு உடைத்து
காக்கா கடி ஆரஞ்சு
மிட்டாய் பகிர்தலில்
சம தித்திப்பு உணர்ந்தோம்...
#
ஆறாவதுக்கு மேல
அடுத்த ஊர் போகனும்
உன் அப்பா வாங்கித்தந்த
ஒற்றை மிதி வண்டியில்
றெட்டை பெடல் போட்டு
சிட்டுக்குருவி வயதை
றெக்கை விரித்து மகிழ்ந்தோம்...
#
எப்போதும் குளிர்ந்த
விட்டுக்கொடுத்தலில்
நமது நட்பு கெடாதென
நம்பிக்கொண்டிருக்கையில்
நான்
பொறியியல் படிப்பாக வெளியூர்
உனக்கோ
இங்கேயே தொழில் படிப்பு...
காத்திருந்த காலம்
கல்வியில் பிரித்தது...
#
விடுமுறை நாள்
சந்திப்புக் களங்களில்
தேனிலூரிய அந்த பலா
நினைவுகளை சுவைத்தோம்...
#
தொடக்கமென
வாழ்க்கை வந்தது
வெகு தூரமென்று வேலையானது
நாளை நாளையென
கடந்து போகும் நிலையில்
நீயும் நானும்...
#
தோழமை தொலையாது...
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.