பார்வைகள்
காலை எழுந்து முகம் கழுவி
கண்ணாடி முன் நான் நிற்க
பரிதாபமாய் என் உருவம்
என் பார்வையில்...
வாசல் கூட்டித் தண்ணீர் தெளித்து
கோலம் போட குனிகையில்
எதிர்வீட்டுச் சன்னலிலிருந்து
என் அங்க அசைவுகளில் நிலை
குத்தியிருக்கும் ஒரு பார்வை...
பேருந்து நெரிசலில்
என் இடக்கை
மேல் கம்பியை பற்றியிருக்க
ஏக்கமாய் இடைவனப்பை
மொய்க்கும் பல பார்வை...
பொருளாதார நிலையை
நேர் செய்ய வேண்டி
தட்டெழுத்து பணி செல்ல
அடிக்கடி அழைத்து
ஏதோ கேட்கும் அதிகாரியின்
அனலான பார்வை...
பேதமின்றி நான் பேச
கோப்புகளை
வாங்கும் போதெல்லாம்
என் விரலுரச நினைக்கும்
உதவியாளனின் கபட பார்வை...
உண்மையாகச் சிரித்து
நட்புடன்தான் பழகினேன்
‘ம்'
அழகா இருக்காளேனு
பக்கத்து இருக்கைக்காரியின்
சிடுசிடுப் பார்வை...
பெண்ணாகப் பிறந்ததில்
எத்தனையோ சகிப்புகள்
சில நேரங்களில்
ஈர்ப்பே இல்லாது
உறவுகளின் பார்வை...!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.