அவ ஒறங்குன பின்னாடி...!
“இப்படித்தே இருக்கணும்னு என்னமும்
எழுதிக்கிழுதி இருக்குதா என்ன? அவவ
அவஅவ முதுகச் சொரண்டிட்டுப் பிறகு பேசுங்கடி”
பின் தெருவிலிருந்து பொதுவாகப் பேசுவாள் அவள்.
“பொட்டுன்னு கண்ண மூட நீதியில்லாம என்னப்
பாழும் பய கடவுளு
காடு கரையில விட்டுச் சோதிக்குது”
“எவளும் இருக்கான்னு பாத்தனா?
செத்தான்னு பாத்தனா? தின்னுட்டுக்
கொழுப்பேறி வாய் அரிச்சுச்சுன்னா
சொறிக்கல்லுல தேயுங்கடி”
“அநாவசியமா எம் பேச்சப் பேசுறவ
வாயக் கிழிச்சித் தச்சுப்பிடுவேன்”
நம்மைத்தானோ எல்லோரும் நினைப்பார்கள்.
“ஏய் பக்கிப் பதவக் காடுகளா
வீதியில மனுசர நடக்கவிடுறிகளா?
போட்டதத் தின்னுட்டுக் கெடத்த வேண்டிதுதான
நாய் நொழஞ்ச நேரம் பெறந்ததுக”
இனிமேலு அந்தத் தெருப்பக்கம் போகனும்னா
ஊரப்போல நாட்டப்போல
அவளுக்கும்
சம்பாதிக்கும் புருசனும்,
உலகம் மறந்து உறங்கும் தருணமும்
வாய்த்த பிறகு போகணும்...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.