சுத்தம் காதலிப்போம்!
நீ சுத்தமாயின்
உன் பக்கத்தில் நெருங்குகிறான் இறைவன்
அசுத்த இருள் களைகின்ற போது
ஒளி பூக்கிறது வாழ்வு
உன் சுத்தம்
அமரச் செய்யும் ஆரோக்கிய நாற்காலியில்
சுவை உன் சமையலில் அல்ல
சமையல் அறையில்
உன் வீடு குப்பைக் கூடையானால்
அழுகிய பழமாகிடும் மனசு
குளியலறை அழுக்கெனில்
நாள் முழுதும் நீராடினாலும் நீ அழுக்குதான்
கழிப்பறையோடு காதல் வரவேண்டும்
கவிதைகூட அது தரவேண்டும்
பூக்களில் துர்வாடை வந்தால்
நெருங்காது எந்த வண்டும்
உன் தேகம் தண்ணீர் கண்டு நாட்கள் பல
அணிந்திருப்பாய் மடிப்புக்கலையாத ஆடை
இதழுக்கு மை தீட்டியிருப்பாய்
பல் விளக்குதலை விலக்கிய நீ
ஆடை உடல் இரண்டுக்கும் சேர்த்துதான்
பெய்கிறது மழை
நறுமணம் மலர்களுக்கனது மட்டுமல்ல
உன் உடலுக்கானதும்
சுத்தம் உன் பண்பாயின்
நீ ஆலயம்
இளமை உதிராத உடல் தரும்
சுத்தம்
முதுமையில் சுத்தம்
ஆயுளை வாசமாக்கி பூங்காவாக்கும்
வாழ்வின் செல்வம் பணம் பொருள் அல்ல
சுத்தமான உயிர்ச் சுவாசம்
குடிசையென்றாலும்
சுத்தம் மதிப்புத் தரும் மாளிகை அளவு
சுத்தந்தான்
உன் உயிரின் உயிர்
அறிவுக்கு உயிர் உண்டெனில்
சுத்தம் காதலிப்பாய் நீ .
- ராஜகவி ராகில்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.