புதியதோர் சமுதாயம் படைப்போம்!
சாதிகளின் பிரிவுயின்றி உயர்வு தாழ்வு
சண்டையின்றிச் சாத்திரத்தின் பேதமின்றி
ஆதிக்க மதங்களின்றி வணங்குகின்ற
ஆண்டவனில் முரண்பட்ட கருத்துமின்றி;
உழைக்கின்ற வர்க்கமென்றும் உழைப்பைத் தின்றே
உடல்கொழித்த வர்க்கமென்றும் இருந்ததெல்லாம்
தழைக்கின்ற பொதுவுடைமை நிலையினாலே
தகர்ந்ததென்ற புதுக்குமுகம் படைப்போம் வாரீர் !
வாக்களிக்கத் தொகை கொடுக்கும் வழக்கமின்றி
வன்முறைகள் மிரட்டல்கள் ஏதுமின்றி
ஆக்கத்தை அளிப்போரைத் தேர்ந்தெடுக்கும்
அமைதியான தேர்தலாக நடத்தித் தேர்ந்த
ஆட்சியிலே ஊழலின்றி அமைச்சரெல்லாம்
அதிகார ஆர்ப்பாட்டம் ஏதுமின்றிக்
காட்சிக்கே எளியவராய்க் கையூட்டின்றிக்
கடமை செய்யும் புதுக்குமுகம் படைப்போம் வாரீர் !
ஆற்றினிலும் ஆலைகளின் கழிவு சேர்த்தே
ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்தே
ஊற்றினையும் தூய்மையிலா நீராய் மாற்றும்
உன்மத்தச் செயல்களின்றி இயற்கை காத்தே;
போற்றுகின்ற இளைஞரெலாம் வெளிநாட்டிற்கே
போகாமல் தாய்நாட்டை வளமாய் ஆக்கி
ஏற்றதொரு காட்டாக உலகின் முன்னே
ஏற்றுகின்ற புதுக்குமுகம் படைப்போம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.