பொதுச்சின்னம்
நெற்றியிலே நீறணிந்து
நினைவெல்லாம் சிவனென்ற
பற்றுடனே சைவரென்று
பக்தியுடன் திகழ்பவரே!
திருநாமம் நுதல்வைத்துத்
திருமாலின் புகழ்பாடிப்
பெருமைமயுடன் வைணவரென்று
பேசிதினம் தொழுபவரே!
கழுத்தினிலே சிலுவையுடன்
கர்த்தரிடம் மண்டியிட்டுக்
கிறித்துவராய் மேய்ப்பானின்
கிருபைக்காய் செபிப்பவரே!
குல்லாவைத் தலையணிந்து
குனிந்துதினம் ஐந்துமுறை
அல்லாவைத் தொழுமிசுலாம்
அன்பரென நிற்பவரே!
மதங்களெல்லாம் காட்டுகின்ற
மகத்தான ஒரு சின்னம்
அகந்தன்னில் அணியாமல்
அவலத்தை விதைக்கின்றோம்!
அன்பென்னும் பொதுச்சின்னம்
அகமேந்தி மாந்தநேயப்
பண்புடைய மனிதனானால்
பகையின்றி வாழ்வோமே!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.