வருக புத்தாண்டே...!
இரண்டாயிரத்துப்
பதினாறே - நீ
எப்படி வரப்போகிறாய்...?
நம்பிக்கை சுமந்த
எதிர்பார்ப்புடன் உனது
நாட்களை நோக்கி...!
நயாகரா
நீர் வீழ்ச்சி போல்
மனித எண்ணங்களைச் சீராக்கி
ஒன்றுபடுத்திடுவாயோ...!
உயர்ந்த
இமயமலை போல்
பொதுநலப் போக்கு
ஒவ்வொருவருக்குள்ளும்
வாழ்வாக்கிடுவாயோ...!
பாலைவனம் போல்
தினம்
சுட்டெறித்த பகமையிலே
சகோதரம் பதியமிட்டு
புதிய சமுதாயத்தோட்டம்
அமைத்திடுவாயோ...!
வேடந்தாங்கல் போல்
உலகக் கூட்டுக்குளே
அனைவரும் மகிழ்ந்திருக்க
எல்லைக் கோடுகளைச்
சமப்படுத்திடுவாயோ...!
பூக்கள் மலர்வதும்
வாசம் கமழ்வதும்
எப்படி
கண்களுக்குத்தெரியாதோ...
அப்படியே
ஆயுதங்கள் வீழ்வதும்
அமைதி நிகழ்வதும்
உனது வருகையில்
சாத்தியமாக்கிடுவாயோ...!
நம்பிக்கை சுமந்து
நாட்களை நோக்கி
நலமுடன் மட்டுமே
வளமுடன் மட்டுமே
வருக புத்தாண்டே...!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.