வாழ்வியல் கிருமிகள்
சுற்றிவரும் பூமியில்
சுழன்றுவரும் மாக்கள்
பற்றி நிற்கும் பாசத்தின்
பழுதுபட்ட நேசம்
முளைத்து நிற்குது
முதியோர் இல்லக்கோலம்
நித்தமுமே ஓய்வில்லா ஓட்டம்
நின்று பேச யாருமற்று வாட்டம்
வித்தகமாய் விஞ்ஞானத்தின் தோற்றம்
விதவிதமாய்ப் பாவனையில் மாற்றம்
பதப்படுத்தும் உணவுகளில் நாட்டம்
பலவித நோய்களினால் வாட்டம்
எங்கணும் கேளிக்கை களியாட்டம்
இளைஞர் யுவதிகள் தடுமாற்றம்
ஓங்கிவரும் ஆயுதக்கலாச்சாரம்
ஒருமித்த மனித மனஓலம்
ஆக்கிரமிக்கும் கைத்தொலைபேசி இணையம்
அவலமாகும் எதிர்கால முன்னேற்றம்
பொத்திப் பொத்திவைத்த மனப்போராட்டம்
புரையோடி இரத்தக் கொதிப்பாகும் ரோகம்
புழுக்கத்தை வெளியே சொன்னால்
பொங்கி வரும் வதந்தியாகி நாற்றம்
தப்பெது சரியெது தடுமாற்றம்
தடுக்கி நிற்பதெல்லாம்
வாழ்வியல் கிருமிகளின் தாக்கம்
எப்போது சரியாகும் ஏக்கம்
- கீத்தா பரமானந்தன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.