நல்ல மனிதனை வளர்த்திடு
இயல்பாய்ப் படிக்க
இடமில்லை
இந்தப் பூமியில்...
இறுக்கமாய்
இருக்குது
இந்த வகுப்பறை
இணையற்ற
எண்ணவோட்டங்கள்
எனக்குள்
எடுத்துச் சொல்ல
வழியில்லை!
ஏட்டுப் படிப்பை
எண்ணத்தில்
பதிவேற்றி
இறுக்கமாகத்
தாங்கிப்பிடித்து
தரப்படும்
காகிதத்தில்
பதிவிட்டுக்
காத்திருந்து
கணிசமான
புள்ளி பெற்று
கணினித் துறையில்
கல்விமானாக
தடம் பதித்துவிட்டால்
நானும் மேதையாம்!
நானாக வாழ வழியில்லை
நான் நினைத்ததை
நவிலவும் வழியில்லை
நாலு நல்லதை
நானும் கற்கவில்லை
நாளைய உலகையும்
சிந்திக்கவுமில்லை
நாலு பணத்துக்காக
நான் படித்த கல்வி
என்றால்?
நாளைய விடியலின்
சிந்தையை
யார் அறிவார்?
ஆயிரம் கேள்வி
அறைகூவி கேட்டேன்
ஆராய்ந்து
பதில் சொல்வார்
யாருமேயில்லை...
ஆதலால்
நான் சொல்வேன்!
ஞானத்தை வளர்த்திடு
கல்வியால்
நல்ல மனிதனை
வளர்த்திடு கல்வியால்
நாளையவுலகில்
நல்ல தலைமுறையினரை
தாரை வார்த்திடு
கல்வியால்...!
- வாணமதி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.