ஐம்பது உரூபா
நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !
இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ
இருநண்பர் அருகினிலேவந்து சேர்ந்தார்
கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு
கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே
முயலாமல் கிடைத்தந்தப் பணத்தாள் குத்தி
முகந்தன்னில் காட்டியது திருட னென்றே
அயல்வந்த அவர்களிடம் கிடைத்த செய்தி
அறிவித்த பின்னேதான் அமைதி பெற்றேன் !
என்னசெய்ய கிடைத்திட்ட அப்ப ணத்தை
எல்லோரும் தேநீரை அருந்த லாமா
என்றநண்பர் கருத்தேற்று சென்ற போது
எதிரிருவர் எம்முடனே சேர்ந்து கொண்டார்
முன்சென்ற இருவரிதைக் கேட்டே எங்கள்
முதுகோடு தாங்களுமே சேர்ந்து கொள்ள
பின்னிருவர் தேநீரின் கடையில் சேரப்
பிட்டிற்கு மண்சுமந்த கதையா யிற்று !
கிடைத்ததுவோ ஐம்பதுரூ தாளோ ஒன்று
கிளைபரவி சேர்ந்தவரோ ஒன்ப தின்மர்
வடையெடுத்த காகத்தின் சோகம் போன்று
வந்தாற்போல் போயிற்று இரட்டிப் பாக
கிடைத்தாலும் சொந்தமில்லா பொருளை ஏற்றால்
கிடைத்ததுபோல் ஏமாற்றும் சூதாட் டம்போல்
விடைபெற்றுப் போயிற்றென் பொருளைச் சேர்த்து
விளைவெனக்கு நற்பாடம் உங்க ளுக்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.