போதை உளறுகிறது
கவலை மறக்கக் குடிக்கிறாய்
களைப்பு தீரக் குடிக்கிறாய்!
திருமணவிழாவில் குடிக்கிறாய் - யாரும்
தீர்ந்து போனால் குடிக்கிறாய்!
எதை மறைக்கக் குடிக்கிறாய்
எதை மறக்கக் குடிக்கிறாய்!
மறைக்க நினைப்பதை உளறுவாய்
மறக்க நினைத்ததைக் கிளறுவாய்!
வெள்ளத்தில் வரும் குப்பைபோல
உள்ளத்தில் உள்ளதை வெளியேற்றுவாய்!
காதலின் மேன்மை மறந்து
காதலியை கொச்சைப் படுத்துவாய்!
ரகசியங்களை அம்பலப்படுத்துவாய்
நாடகங்களை அரங்கேற்றுவாய்!
போதையில் கண்கள் சுழன்றாடும்
பாதையில் கால்கள் தடுமாறும்!
நாணமின்றி சொற்கள் அம்பாகும்
நண்பர்கள் கேட்டால் வம்பாகும்!
சேர்த்த பணத்தை வீணடிக்கிறாய்
சேராத நோயை வரவழைக்கிறாய்
பழகியவரைப் பகைத்துப் பழிக்கிறாய்
அழிவுக்கு வாசல் திறக்கிறாய்!
மதுவின் துணைகொண்டு
மயக்கத்தில் கிடப்போரே
குடும்பத் துணையுண்டு!
குற்றமில்லா மக்களுண்டு!
கடமை நமக்குண்டு!
நாடும், வீடும் நலம்பெறேவே..!
காட்டுக்கு இவ்வுடல் போகுமுன்னே
பாட்டுக்குப் பொருளுரை எழுதிடுவாய்!
-விஷ்ணுதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.