விரல் நுனி யுத்தங்கள்
அந்த விரல் நுனிகள்
ஒரு மலரை வலியில்லாமல்
இடம் பெயர்ப்பதற்கானவை
சின்னச் சின்னச்
கிறுக்கல்களை
சுவற்றிலோ காகித்திலோ
சித்திரமாய்
வடித்துவிடுபவை தான்
சொப்பு
கண்ணாம்பூச்சி
திருடன் போலீஸ்
பல்லாங்குழி பம்பரம்
பச்சைக்குதிரை களின்
காலம்
தொலைந்தபின்
விரித்து வைத்த
திரை வலைகளின்
விசைப்பலகைகளில்
சிக்கிக்கொண்டன
தன்னைத்தவிர மற்றவர்கள்
பகைவர்களாய் தெரிகிற
மின் திரைகளின்
மீளமுடியா
உலகில்
எதிரிகளை
கண்டவுடன் சுட்டுத்தள்ள வேண்டும்
என்கிற ஏதோ அவசரத்தில்
நிகழ்கிற
விரல்நுனி யுத்தங்களில்
சுட்டு விரல்களெல்லாம்
சுடும் விரல்களாக
குருதி சிந்த
விழ்த்துகின்றனர் எதிரிகளை.
பல்லாங்குழிகள்
சவக்குழிகளாக
ஒற்றை இலக்க
வயது முடிவதற்குள்
ஐந்தாறு இலக்க
அழிவின் புள்ளிகள் பெற்று
ஆட்டத்தின் இலக்கை
அடைகின்றனர் வெற்றிகளிப்புகளுடன்
இப்படியாகவும் கற்பிக்கப்டுகிறது
வாழ்க்கையின் பாலபாடம்
இவர்களுக்கு.
- நிலாரவி, கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.