காவிய நாயகன்
படித்தவனும், பேரறிஞனும்
படித்து மகிழ்ந்த பாடல்களைப்
பாமரனும் கேட்டு மகிழ்ந்திடப்
பல திரைப்பாடல்களைத் தந்தவன்!
காதல் கொண்ட உள்ளங்களுக்கு
மனம் மகிழும் பாடல்களும்
காதலில் தோற்றுப் போனவர்களுக்கு
மன ஆறுதல் தரும் பாடல்களும் தந்தவன்!
பழந்தமிழ்ச் சிந்தனைகளுக்குப்
புதிய வார்த்தைகள் சேர்த்துப்
புத்துணர்ச்சி தந்திடும்
புதுமைப் பாடல்களைத் தந்தவன்!
வாழ்க்கையில் வந்த தோல்வியால்
வருந்தி மனமுடைந்தவர்கள்
வாழ்வு மறுமலர்ச்சி பெற்றிட
வாழ்விலக்கணப் பாடல்களைத் தந்தவன்!
ஆய்வுப் படிப்புகளுக்குக் களம் தேடி
அலைந்த மாணவர்களை
ஆய்வறிஞர்களாக உயரச் செய்திட
அரிய படைப்புகளைத் தந்தவன்!
பெரியாரின் தொண்டனாய்ப்
பகுத்தறிவுப் பாடம் தந்து, பின்னர்
அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியமென
ஆன்மிக அறிவை அள்ளித் தந்தவன்!
கவிஞனான நான் ஒரு காலக்கணிதமென
கவிதைகள் பல தந்து
காலத்தால் அழிக்க முடியாத
காவிய நாயகனாக நம் நினைவில் நின்றவன்!
கண்ணதாசன் ஒருவனே!
- உ. தாமரைச்செல்வி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.