இன்றைய தாலாட்டு
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ ஆரிரரோ
கண்ணுறங்கு கண்ணுறங்கு என்மகனே
கவிதையினைக் கேட்டுறங்கு என்மகனே
மண்ணிலின்று பெருகிவிட்டக் கயமைகளை
மாற்றவேண்டும் நீவளர்ந்து என்மகனே !
(கண்ணுறங்கு)
வளர்ந்திருந்த மரங்களினை வெட்டிச்சாய்த்தார்
வாழவைக்கும் காற்றுதனில் மாசைச்சேர்த்தார்
களம்நிறைத்த வயல்களினை விற்றுத்தீர்த்தார்
கரைதழுவி பாய்ந்தஆற்றில் கழிவுகலந்தார் !
(கண்ணுறங்கு)
விண்ணிலுள்ள ஓசோனை ஓட்டைசெய்தார்
வீதிகளைத் தீயாகக் கொதிக்கவைத்தார்
கண்போன்ற மலைகளினைப் பிளந்தழித்தார்
கசியாமல் மேகத்தைக் கலையவைத்தார் !
(கண்ணுறங்கு)
நெஞ்சினிலே தன்னலத்தை நிரப்பிவைத்தார்
நேர்மைக்குச் சாவுமணி அடித்துவைத்தார்
வஞ்சகத்தால் பிறர்வாழ்வைக் கெடுத்துவைத்தார்
வார்த்தைகளில் நஞ்சுதனைச் தடவிவைத்தார் !
(கண்ணுறங்கு)
ஆட்சியிலே அமர்ந்தவர்கள் கொள்ளையடித்தார்
அறிவுதரும் கல்விக்குக் கடைவிரித்தார்
நாட்டினிலே சாதிமதம் வளர்த்துவைத்தார்
நாளெல்லாம் கலவரத்தில் உயிர்பறித்தார்!
(கண்ணுறங்கு)
அழிக்காமல் இயற்கையினைக் காக்கவேண்டும்
அறிவியலை நன்மைக்காய் ஆக்கவேண்டும்
விழியாக மனிதத்தை வளர்க்கவேண்டும்
வீண்பகைமை வேற்றுமையைக் களையவேண்டும்!
(கண்ணுறங்கு)
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.