முயற்சி திருவினையாக்கும்!
விழிகள் மூடிப் படுத்திருந்தால்
விடியல் விழிக்குத் தெரியாது
விழித்த விழிக்கே இருள்விரட்டி
விடிந்த ஒளியின் எழில்தெரியும்
வழியா வியர்வை உடலிருந்தால்
வாழ்க்கை இருளில் போய்முடியும்
பொழியும் வியர்வை உடலுக்கே
பொலியும் அழகு வாழ்வமையும் !
மண்ணில் காலை ஊன்றுதற்கு
மனத்தில் அச்சம் கொண்டிருந்தால்
மண்ணில் நிற்க முடியாது
மாற்றம் செய்ய இயலாது
எண்ணம் செயலாய் உருபெறவே
எழுச்சி நெஞ்சில் ஏற்றிவிட்டால்
விண்ணும் கைக்குள் அடங்கிவிடும்
வியக்கும் உயர்வும் உனையடையும் !
வெல்லும் முயற்சி இல்லாமல்
வெற்றி உன்னில் விளையாது
புல்லும் உனக்கு வில்லாகும்
புதிய முயற்சி உனக்கிருந்தால்
அல்லும் பகலும் சோராமல்
ஆற்றும் உறுதி தளராமல்
சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்ணம் போல வாழ்வொளிரும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.