என் பெயர் சுதந்திரம்
என் பெயர் சுதந்திரம்
ஆண்டுக்கொரு முறையல்ல
இப்போதெல்லாம்
அவரவர் தேவைக்கான
அந்தந்த நிமிடத்திற்கானவன்...
நான் வருவதற்குத்தான்
நிறைய சிரமப்பட்டேன்
வந்த பிறகு
என் உச்சரிப்புக்கே
சிரம் தாழ்த்திக் கொண்டேன்...
அரற்றல் என்னிடமில்லை
எனது மூலமான செய்தலில்
ஜனநாயமென்ற வசியத்தை
பயன்படுத்திக் கொள்ளலாம்...
பொதுமையில் நான்
சுறுங்கி போன விருப்பங்களில்
சுயநல அடையாளங்களில்
அசுர வளர்ச்சி கண்டிடுவேன்...
எனது பாதையில்
தேசியத்திற்கான தரவுகள்
பாகுபாடுகளிலேதான்
நிர்ணயப்படுத்துவதாய் கூறிய
குற்றச்சாட்டுகளை
எனது பெயர் கொண்டே
நியாயப்படுத்தலாம்...
இமயந்தொட்டு
குமரி செல்கையில்
என் இலகுதலிலேதான்
யாவரும் நலம்
தப்பிப்பதாய் நம்புகின்றனர்...
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.