கரோனா கற்பித்த பாடம்
உலகத்தின் ஒட்டுமொத்த நீதி நூல்கள்
உரைக்கின்ற கருத்துகளின் தொகுப்பே கரோனா
நிலத்திலுள்ள ஆறறிவு மனித னுக்கு
நிற்கவொரு அணுகூட இல்லாக் கிருமி
நிலையாமை பற்றியொரு உபதே சத்தை
நின்றிங்கே சொல்லியது மரணத் தாலே
கலகலத்துப் போனதின்று ஞால மெல்லாம்
கண்ணுக்குத் தெரியாத நுண்மி யாலே !
தலைகனத்தே உச்சிநின்று உலகம் தன்னைத்
தம்சொல்லால் ஆட்டிவைத்த வல்லர செல்லாம்
நிலைகுலைந்து மண்டியிட்டுக் கதறு மாறு
நிலைமையினை மாற்றியது கரோனா நுண்மி !
கலையறிவால் செவ்வாயில் வீடு கட்டக்
கால்வைக்க முனைந்தவனின் நுரையீ ரல்மேல்
அலையலையாய்ப் பெருகிநின்று கூடு கட்டி
அச்சத்தை ஊட்டியது கரோனா நுண்மி !
பணமொன்றே குறிக்கோளாய் ஓடி யோடிப்
பாசத்தை மறந்திட்ட மனித னுக்குப்
பிணங்களினைச் சாலைகளில் குவிய லாக்கிப்
பிணைப்புதனைச் சொல்லியது கரோனா நுண்மி !
குணமெல்லாம் தன்னலமாய் இயற்கை தன்னைக்
குலைத்திட்ட மனிதனுக்குப் பாடம் சொல்லக்
கணக்குதனைப் போட்டுவந்த கரோனா கூற்றைக்
கடைப்பிடித்தே இயற்கையினைக் காத்தால் வாழ்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.