குறிஞ்சி காதல்

காதல் அலை குறிஞ்சி மலை
அலைகள் ஓய்வதில்லை காதல் தேய்வதில்லை
குறிஞ்சிப் பூவின் மகிமை காட்டும்
குறிஞ்சித் தேனின் சுவை கூட்டும்
எண்ணப் பாங்கை எழிலுறக் காட்டும்
வண்ணப்பாக்கள் வாசம் வீசும்
சின்னப் பூவும் காதல் பேசும்
குறிஞ்சி காதல் விண்ணை முட்டும்
உவமை காட்டும் காதலின் ஆழம்
உருவகம் காட்டும் காதலின் பரப்பு
உள்ளுறை காட்டும் காதலின் குறிப்பு
கற்பனை காட்டும் காதலின் உயரம்
மெய்ப்பாடு காட்டும் காதலின் வடிவம்
அழகியல் காட்டும் காதலின் உலகம்
கொன்றைப் பூக்கள் கொட்டிக்கிடக்கும்
குவளைப் பூக்கள் கொத்தாய்ப் பூக்கும்
காந்தள் பூக்கள் கவின்கூடி மலரும்
காயாம் பூக்கள் கண்ணில் மிளிரும்
செண்பகப் பூக்கள் நண்பகல் காட்டும்
பூக்கள் பேசும் குறிஞ்சி காதல்
சந்தன மரத்தின் உயரம் சொல்லும்
அகில் மரத்தின் வாசம் சொல்லும்
மூங்கில் மரத்தின் மென்மை சொல்லும்
வேங்கை மரத்தின் இலைகள் சொல்லும்
பலா மரத்தின் தீஞ்சுவை சொல்லும்
மரங்கள் சொல்லும் குறிஞ்சி காதல்
தலைவனின் துணிவே காதல் தொடர்ச்சி
தலைவனின் வீரமே காதல் மலர்ச்சி
தலைவியின் நாணம் காதல் தொடக்கம்
தலைவியின் நம்பிக்கை காதல் தொடுக்கும்
இருவரின் மனம் ஒற்றி காதல் வெற்றி
களவோ கற்போ காதலில் உறுதி
கற்பவர் மனதில் காதல் குருதி
- முனைவர் லெ. அலமேலு, போடிநாயக்கனூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.