பற்றலின் பிரயத்தனம்
மோதி விளையாடிய
பொழுதுகளில்
பங்கப்படாத
இதழ்களுக்குள்
துளிர்க்கிறது
ஈரம்
சொட்டும் ஆசையில்.
வாகாக சாய்த்துவிடும்
வாய்ப்பிற்கு
வரம் வாங்கிய
வாழ்வாக வேண்டும்
இன்னல்களுக்கு
இடையிலான
அன்றாடங்களில்.
ஒவ்வொரு
உராய்விலும்
ஓராயிரம் அதிர்வுகள்
சிணுக்கிப் பிரகாசிக்கிறது
தழுவுமாசையில்.
சர்ப்பப் பின்னலின்
சாத்தியத்தியற்கான
செல்லச் சண்டையாகக்
கழிகிறது
காத்திரமானக் காதல்
உபாயப் பொருளின்
உபத்திரத்தில்.
முயல்வின்
தோல்விகள்
யாவிலும்
வாடிய முகத்தோடு
வருந்துகிறது
இயைந்து போனாலும்
இணையவிடாத
காற்றை நினைத்து
கருகி விழும்
செடியின் ரோஜா
காலமெல்லாம்
பற்றிவிடப் பூத்து.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.